சௌப்திக பருவம்

சௌப்திக பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் 10 ஆவது பருவம். பாண்டவர்களுக்குச் சாதகமாகப் போர் முடிந்துவிட்ட 18 ஆம் நாள் இரவில் நிகழ்ந்தவற்றை இப்பருவம் எடுத்தாள்கிறது.

முக்கியமான நிகழ்வுகள்

தொகு

போரிடாமலேயே ஏராளமான பாண்டவர் தரப்பு வீரர்கள் இறந்துபட்ட நிகழ்வை இப்பருவம் உள்ளடக்குகிறது. இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த துரியோதனனைக் காணும் கௌரவர் தரப்பு வீரர்களான கிருதவர்மன், கிருபர், அசுவத்தாமன் ஆகியோர் மிகுந்த கோபம் அடைகின்றனர். இவர்களுள் துரோணரின் மகனான அசுவத்தாமன் பாண்டவர்களையும் அவர்களோடு சேர்ந்த அனைவரையும் கொல்வதாகச் சபதம் எடுக்கிறான். இரவு வேளையில், திரௌபதியின் மக்களும், திரௌபதியின் அண்ணனான திருட்டத்துயும்னன், சிகண்டி உள்ளிட்ட பிற பாஞ்சாலர்களும் தங்கியிருந்த பாசறைக்குச் சென்ற அசுவத்தாமன் தூக்கத்தில் இருந்த அனைவரையும் கொன்றுவிடுகிறான். இந்த நிகழ்வில், பாண்டவர்கள், சாத்தியகியையும் தவிர்த்து எஞ்சியிருந்த பாண்டவர் தரப்பினர் அனைவரும் இறந்துவிடுகின்றனர்.[1]

பிள்ளைகளையும், உறவினர்கள் அனைவரையும் இழந்த திரௌபதி மிகுந்த துயருற்று, இதற்குப் பழி வாங்குவார் யாரும் இல்லையா என்று கதறுகிறாள். கோபம் கொண்ட பாண்டவர்கள், கண்ணனுடன், அசுவத்தாமனைத் தேடிச் செல்கின்றனர். கங்கைக் கரையில், வியாசரின் பின்னால் மறைந்திருந்த அசுவத்தாமனைக் காண்கின்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் புல்லொன்றை எடுத்து மந்திரம் ஒன்றைச் சொல்லிப் "பாண்டவர் வம்சத்தை இது அழிக்கட்டும்" எனக்கூறி ஏவுகிறான். அது நேராக கருவுற்றிருந்த அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் வயிற்றில் இருந்த கருவைத் தாக்குகிறது. இதுவே பாண்டவர்களின் எஞ்சியிருந்த ஒரே வாரிசு. ஆனால், கண்ணன் இக்குழந்தையைக் காப்பாற்றிப் பாண்டவர் வம்சம் தொடர வழிவகுக்கிறான்.[2]

தோல்வியை ஏற்றுக்கொண்ட அசுவத்தாமனை, பிறப்பிலேயே அவனது தலையில் ஒட்டியிருந்த மணி ஒன்றை அறுத்து எடுத்துக்கொண்டு பாண்டவர்கள் துரத்திவிடுகின்றனர்.

குறிப்புகள்

தொகு
  1. அஸ்வத்தாமன் செய்த படுகொலைகள்! - சௌப்திக பர்வம்
  2. Rajagopalachari, C., Mahabharata, Bhavan's Book University, 2009 (54th Edition), p. 404, 405.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌப்திக_பருவம்&oldid=3725109" இலிருந்து மீள்விக்கப்பட்டது