ஜருகுமலை
ஜருகுமலை என்பது தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதி ஆகும். இந்த மலையில் உள்ள கிராமங்கள் குரால்நத்தம் ஊராட்சியைச் சேர்ந்தவை. மேலும் இவை பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டும், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டும் உள்ளன. இந்த மலைப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளுக்காக ஏழு கி.மீ. தொலைவுக்கு நடந்து அடிவாரம் சென்று வருகின்றனர். இதனால் இந்த மலைக்கு சேலத்தில் இருந்து சாலை அமைக்கு பணிகள் துவங்கி சன்யாசி குண்டு என்ற இடம்வரை இரண்டு கி.மீ சாலை அமைக்கப்பட்ட நிலையில் கிடப்பில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதியில் மேலுர், கீழுர், ஒட்டப்பள்ளி ஆகிய மூன்று பழங்குடியின கிரமங்களில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. மின்சாரம், குடிநீர், தொடக்ககல்வி வசதிகள் உள்ளன. மேலுர், கீழுரில் மருத்துவ வசதிகள், சாலைவசதி போன்ற பொதுவசதிகள் இல்லை. சுதந்திரம் பெற்றூ 60 ஆண்டுகளூக்கு பின் 2008ஆம் ஆண்டு ஜருகுமலைக்கு மின்சாரவசதி கிடைத்தது. அஞ்சல் குறியீட்டு எண்:636201. இங்குள்ள பெரும்பாலான மக்களின் தொழில் வேளாண்மை ஆகும். தினை, சாமை, கேழ்வரகு, அவரை, அரளிப்பூ ஆகியவற்றை சாகுபடி செய்கின்றனர். சாமை, தினை ஆகியவற்றை தங்கள் உணவுத் தேவைக்கு வைத்துக்கொண்டு அரளிப்பூவை சேலத்துக்கு கொண்டுவந்து விற்றுச் செல்கின்றனர்.[1]
சான்றுகள்
தொகு- ↑ எஸ். விஜயகுமார் (திசம்பர் 24 2017). "இயற்கை எழில் கொஞ்சும் ஜருகுமலை கிராமங்கள்". தி இந்து தமிழ்.