ரூமி

(ஜலாலுதீன் முகமது ரூமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி (Jalāl ad-Dīn Muḥammad Balkhī, பாரசீக மொழி: جلال‌الدین محمد بلخى‎) என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் பரவலாக மௌலானா ரூமி[2] (பாரசீக மொழி: مولانا‎) என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 - 17 திசம்பர் 1273)[4] பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார்.[5]

மௌலானா ஜலாலுத்தீன் முகம்மது ரூமி
Jalal ad-Dīn Muhammad Rumi
ஈரானிய ஓவியர் உசேன் பெஹசாத் வரைந்த ரூமி (1957)
பட்டம்மௌலானா
பிறப்பு1207
வாக்சு (இன்றைய தஜிகிஸ்தான்)[1] அல்லது பல்கு (இன்றைய ஆப்கானித்தான்)
இறப்புடிசம்பர் 17 1273 (அகவை 65–66)
கோன்யா, ரூம் சுல்தானகம் (இன்றைய துருக்கி)
சமாதி37°52′14.33″N 32°30′16.74″E / 37.8706472°N 32.5046500°E / 37.8706472; 32.5046500
இனம்பாரசீகர்
காலம்Medieval
பிராந்தியம்கவாரஸ்மியன் இராச்சியம் (பல்க் மாகாணம்: –1212 மற்றும் 1213–17; சமர்கந்து: 1212–13)[2][3]
ரும் சுல்தானகம் (மலட்யா]: 1217–19; அக்சகேர்: 1219–22; லரேண்ட்: 1222–28; குன்யா: 1228 முதல் 1273 அவரது மரணம் வரை AD.)[2]
சமய நம்பிக்கைஅனாஃபி, சூபித்துவம், சீடர்கள் மெளலவி சூபி வழியை உருவாக்கினர்.
முதன்மை ஆர்வம்சூஃபி பாடல்கள், முராகபா, திக்ர்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு
பாரசீக இலக்கியம்
ஆக்கங்கள்மஸ்னவி, திவான் இ சம்ஸ் இ தப்ரீசி, பீஹி மா பீஹி
செல்வாக்கு செலுத்தியோர்
  • பஹாவுத்தீன் ஸகரிய்யா, பரீத் அல்தீன் அத்தார், ஸனாய், அபூ ஸயீத் அபுல்கைர், அபுல் ஹசன் கரகானி, பீயஸீத் பிஸ்தாமி, சம்ஸ் தப்ரீசி
செல்வாக்குக்கு உட்பட்டோர்

கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.

ரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன. துருக்கிய மற்றும் இண்டிக் மொழிகள் பெரிசியோ அரபிக் வரிவடிவத்தில் எழுதப்படுகின்றான. பாஸ்த்தோ, ஒட்டாமன், துருக்கி, சாகாடை மற்றும் சிந்தி மொழிகள் இதற்கு உதாரணம்.

பெயர்

தொகு

ஜலாலு-தின் முஹம்மத் பால்ஹி (பெர்சியப் பெயர்: جلال‌الدین محمد بلخى‎ பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde bælxiː]) இவர் ஜலாலு-தின் முஹம்மத் ரூமி (جلال‌الدین محمد رومی பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde ɾuːmiː]).என்றும் அழைக்கப் படுவார். இவர் இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெரும்பாலானோரால் மௌலானா(பெர்சிய உச்சரிப்பு : مولانا‎ : [moulɒːnɒː]) என்ற சிறப்பு பெயரால்அழைக்கப்பட்டார். துருக்கியர்கள் இவரை மெவ்ளானா என்றும் அழைத்தனர்.

சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பிராங்க்ளின் லூயிசின் ரூமியின் வாழ்க்கை வராலாற்றாய்வு நம்பகத்தன்மைமிக்கது. இவரின் கூற்றுப்படி பைசாந்திய பேரரசின் அல்லது கிழக்கு ரோமப் பேரரசிற்கு சொந்தமானது அனோடோலியன் குடாநாடு. இது வரலாற்றில் வெகு அண்மையில்தான் இஸ்லாமியர்களினால் வென்றெடுக்கப்பட்டது. இது துருக்கிய இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டபோதும் அரபியர்களும், பெர்சியர்கள், துருக்கியர்கள் இந்த நிலப்பரப்பை ரம் என்றே அழைத்து வந்தனர். எனவே அனோடோலியாவில் பிறந்த பல வரலாற்று பிரமுகர்களும் ரூமி என்கிற பெயரில் அழைக்கப்பட்டனர். ரூமி என்கிற வார்த்தை அரபி மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் ரோமன். இந்தத் தொடர்பில் நோக்கினால் ரோமன் என்பது பைசாந்திய பேரரசின் குடிமக்களை குறிக்கிறது அல்லது அநோடோலியாவில் வாழ்ந்தமக்களையும் அதனோடு தொடர்புடைய பொருட்களையும் குறிக்கிறது.

இக்காரணங்களால் இஸ்லாமிய நாடுகளில் பொதுவாய் ஜலாலுதீன் ரூமி என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. பெர்சிய வார்த்தையான மௌலவி என்றோ துருக்கிய வார்த்தையான மெவ்ல்வி என்றோ அழைக்கப்படுகிறார். இவ்வார்த்தை "இறைவனுடன் பணியாற்றுபவர்" என்கிற பொருளுடையது.

வாழ்க்கை

தொகு

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்திலுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகம்மது என்பதாகும். ரூமி பாரசீக மண்ணை சார்ந்த, பாரசீக மொழி பேசும் பெற்றோர்களுக்கு பிறந்தவர். அவரின் தந்தையார் பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இசுலாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் வாக்ஸ் என்கிற சிறு கிராமத்தில் பிறந்திருக்கலாம். இது பெர்சிய நதியான வாக்ஸின் கரையில் அமைந்திருக்கிறது. (தற்போது தஜகிஸ்தான்) வாக்ஸ் பால்க் என்கிற பெரிய பகுதிக்கு சொந்தமானது. (இப்போது இதன் பகுதிகள் புதிய ஆப்கானிஸ்தானிலும், தஜகிஸ்தானிலும் உள்ளது). ரூமி பிறந்த ஆண்டு அவரது தந்தை பால்கில் ஒரு அறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.

பால்கின் பெரும் பகுதி அப்போது பெர்சிய கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக குரானிய சுபியிசம் வளர்ந்து வந்திருந்தது. உண்மையில் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்குபின் பெர்சிய கவிஞர்களான அட்டார் மற்றும் சானைக்கும் பெரும் பங்குண்டு.

மௌலானா அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது, மங்கோலிய கொள்ளைக்காரர்கள் அடிக்கடி கொரஸான் மாகாணத்தினுள் நுழைந்து நாசம் விளைவித்து வந்தனர். இதனால் பயந்த பல்கு நகரத்தின் குடிமக்கள் துருக்கியிலுள்ள 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறினார்கள். தமது தந்தையிடமே கல்வி கற்றுத் தெளிந்த அவர்கள், தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் பெரியார் ஸையிது புர்ஹானுத்தீன் முஹக்கீக் அவர்களிடம் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அப்பெரியாரிடமிருந்தே ஆத்மஞானத் தீட்சையும் கிடைக்கப் பெற்றார்கள். பெரியார் புர்ஹானுத்தீன் அவர்கள் இறையடி சேர்ந்ததும், 33 ஆம் வயதில் மௌலானா அவர்கள் தமது சீடர்களுக்குத் தீட்சை வழங்கிவந்தார்கள்.

இவ்விதமாக நான்கு ஆண்டுகள் கழிந்த சந்தர்ப்பத்தில் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற பெரியாரைச் சந்தித்தார். அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ரூமி, இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப் பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். இந்த ஷம்ஸுத் தப்ரேஸியை விளித்துப் பாடிய பாடல்கள்தான் "திவானே ஷம்ஸே - தப்ரேஜ்" என்ற நூலாகப் பெயர் பெற்றது. இந்த நூலில் சுமார் 2500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரை தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில் அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருப்பத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.

மௌலானா அவர்களுடைய ஆத்மஞான போதனைகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, எல்லோரும் வட்டமாக நிற்க பின்னணியில் புல்லங்குழல் இசை ஒலிக்க தெய்வநாம பூஜிப்பில் ஈடுபட்டு பரவசநிலையை எய்துவதை தம்முடைய ஆன்மீகப் போதனையில் புகுத்தினார். மௌலானா அவர்களுடைய பிரதான சீடராகவும், உற்ற தோழராகவும் விளங்கிய ஹுஸாமுதீன் ஹஸன் இப்னு அகீ துருக்கைப் பற்றி தன்னுடைய உபன்னியாசங்கள் அனைத்திலும் பாராட்டிப் பேசாமல் இருப்பதில்லை. மௌலானா அவர்கள் தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக "மஸ்னவி" யில் ஓரிடத்தில் "ஹுஸாம் நாமா" என்று இரண்டு பாடல்களுக்கு பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். "மஸ்னவி" நூலை தினமும் பாடல்களைச் சொல்லச்சொல்ல ஹுஸாமுத்தீன் அவர்கள் எழுதிவந்தார்கள். மொத்தம் ஆறு பாகங்களில் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள் / கி.பி. 1273 டிசம்பர் 16) காலமானார்கள். "மஸ்னவி" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், மஸ்னவி ஒரு பூரணமானதாகவே காணப்படுகின்றது.

A.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' புத்தகத்தில் " மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம், மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர். "

"கிதாபுல் மஸ்னவி" யிலிருந்து

25 வது பாடல்

காதலாலே பூதவுடல் விண்ணுலகு சென்றது. அதனால்தான் மலையும் ஆடத்தொடங்கி சுறுசுறுப்படைந்தது.

காதலனே, ஸீனா மலைக்கு உணர்ச்சியூட்டியது காதல். அதனால்தான் ஸீனா போதையுற்றது. மூஸா (அலை) (Moses) மயங்கி விழுந்தார்கள்.

என் இயல்புடன் இயைந்த ஒருத்தியுடன் நான் உதடு பொருத்த முடியுமாயின், நானும் புல்லங்குழலைப்போல் சொல்லக்கூடிய அனைத்தையும் சொல்லிவிடுவேன்.

தன் மொழியில் பேசும் ஒருவரிடமிருந்து பிரிக்கப்பட்ட எவனும், நூற்றுக்கணக்கில் பாடல்களைக் கற்றிருப்பினும் அவன் பாட இயலாத ஊமையேயாவான்.

ரோஜா மறைந்து, பூந்தோட்டத்தின் பசுமை மாண்டபின் புல்புல்லின் கதையை நீ கேட்க முடியாமல் போய்விடும்.

30 வது பாடல்

காதலியே யாவுமாவாள். காதலன் ஒரு திரையேயன்றி வேறல்ல. காதலிதான் ஜீவன். காதலன் உயிரற்ற ஜடமே.

காதலிக்கு அவன்மீது பற்றில்லாவிடின் அவன் சிறகில்லாத பறவைதான்; அந்தோ அவன் நிலை பரிதாபத்துக்குரியதன்றோ!

என் காதலியின் வெளிச்சம் எனக்கு முன்னாலும் பின்னாலும் இல்லாமல் இருக்கும் நிலையில் முன்-பின் பற்றிய தன்னுணர்வு எனக்கு இருப்பதெங்கனம்?

இந்த வார்த்தை வெளியாக்கப்படவேண்டும் என்று காதலின் சித்தத்தில் எண்ணமுண்டாகிவிட்டது. கண்ணாடி பிரதிபலிக்காவிடில் அது எப்படி கண்ணாடியாகும்?

ஆத்மாவின் கண்ணாடி எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதையும் நீ அறிவாயா? அதன் முகத்தின் மீதுள்ள துரு அகற்றப்பட்டதுதான் அதன் காரணம்.

மேற்கோள்கள்

தொகு
  1. William Harmless, Mystics, (Oxford University Press, 2008), 167.
  2. 2.0 2.1 2.2 H. Ritter, 1991, DJALĀL al-DĪN RŪMĪ, The Encyclopaedia of Islam (Volume II: C-G), 393.
  3. C. E. Bosworth, 1988, BALḴ, city and province in northern Afghanistan, Encyclopaedia Iranica: Later, suzerainty over it passed to the Qarā Ḵetāy of Transoxania, until in 594/1198 the Ghurid Bahāʾ-al-Dīn Sām b. Moḥammad of Bāmīān occupied it when its Turkish governor, a vassal of the Qarā Ḵetāy, had died, and incorporated it briefly into the Ghurid empire. Yet within a decade, Balḵ and Termeḏ passed to the Ghurids’ rival, the Ḵᵛārazmšāh ʿAlāʾ-al-Dīn Moḥammad, who seized it in 602/1205-06 and appointed as governor there a Turkish commander, Čaḡri or Jaʿfar. In summer of 617/1220 the Mongols first appeared at Balḵ.
  4. இவர் பெர்சியர் என்று ஈரானியரும் துருக்கியர் என்று துருக்கியரும் ஆப்கானித்தவர் என்று ஆப்கானித்தவரும் கருதுகின்றனர்
  5. "Islamica Magazine: Mewlana Rumi and Islamic Spirituality". Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2007-11-10.
    * A.J. Arberry " Rumi, Poet and Mystic "
    * மௌலானா ரூமியின் கிதாபுல் மஸ்னவி  -  R.B.M. கனி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூமி&oldid=3813998" இலிருந்து மீள்விக்கப்பட்டது