ஜானகிராம் கே. எல். என்

கே. எல். என். ஜானகிராம் (1913 - 1997) ஒரு தொழிலதிபர். சௌராட்டிர சமூகத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஜானகிராம் மதுரையில் புகழ்படைத்த ’மிசினுக் குடுவான்’ குடும்பத்தில் கே. எல். நாகசாமியின் மகனாகப் பிறந்தார். படிப்பு குறைவாக இருந்த போதிலும், இவர் விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து இரும்பு வார்ப்படத்தொழிலில் நிபுணர் ஆனார். இரும்பு வார்படத்தொழில் மூலம் இரும்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிலை மதுரையில் முதலில் தொடங்கியவரானார். 1978ல் இரும்பு தளவாட இயந்திரங்கள் உற்பத்திக்காக தங்கப் பதக்கம் பெற்றவர்.

நீண்ட காலம் ரிஷிகேஷ், அரித்வார் போன்ற ஆன்மீக இடங்களில் வாழ்ந்தார். அங்கிருந்தபடியே மதுரையில் உள்ள தமது நாகசாமி இரும்பு தளவாட இயந்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிர்வகித்து வந்தார். தன் தகப்பனார் கே. எல். நாகசாமி அறக்கட்டளை மற்றும் தன்னுடைய பெயரில் உள்ள அறக்கட்டளைகளை நிர்வகித்து வந்தார். சிருங்கேரி சங்கராச்சாரியார் இவருக்கு ’ஆத்மஞானி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

மதுரை சௌராட்டிர மேல்நிலைப் பள்ளியில் புகழ் பெற்ற ‘ஜானகிராம் ஹால்’ என்ற பெயரில் பெரிய கூட்ட அரங்கு கட்டிடத்தை கட்டிக் கொடுத்தார். மதுரை சௌராட்டிர கல்லூரிக்காக, தொழில் அதிபர் சி. எஸ். இராமாச்சாரியின் துணையுடன் 12 இலட்சம் ரூபாய் நிதி திரட்டி தந்தார். தாமும் பல இலட்சங்கள் நன்கொடை வழங்கினார். இவருக்கு மகரிசியோகி சுத்தானந்த பாரதி ‘தியானயோகி’ எனும் பட்டத்தை வழங்கி ஆசிர்வதித்தார். ஏழை மக்கள் பயன்பாட்டுக்காக தமது பெயரில் ‘ஜானகிராம் திருமண மண்டம்’ கட்டிக்கொடுத்தார். மேலும் பிற ஊர் சௌராட்டிர மக்கள் மதுரைக்கு வரும் போது தங்குவதற்கு தர்ம சத்திரம் கட்டிக்கொடுத்தார். சௌராட்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமது மனைவியின் பெயரில் ஒரு கட்டிடத்தை நிர்மாணித்து கொடுத்தார். மதுரை சௌராட்டிர கல்லூரிக்கு வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தார்.

மயிலை இராமகிருட்டிண மடம், மதுரை சித்தாச்ரமம் மற்றும் வண்டியூர் சௌராட்டிர மருத்துவமனை ஆகிய நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கினார். மதுரை சௌராட்டிர பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நலனுக்கு இரண்டு பேருந்துகள் வாங்க நன்கொடை வழங்கினார்.

உசாத்துணை நூல்கள்

தொகு
  • சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகிராம்_கே._எல்._என்&oldid=3348423" இலிருந்து மீள்விக்கப்பட்டது