ஜார்ஜ் அருண்டேல்

பிரித்தானிய பிரம்மஞான சபையாளர்

ஜார்ஜ் சிட்னி அருண்டேல் (George Sydney Arundale, 1 திசம்பர் 1878, இங்கிலாந்தின் சர்ரேயில் — 12 ஆகத்து 1945, இந்தியா, அடையாறில் ) என்பவர் பிரும்மஞானி, விடுதலைக் கட்டுநர், அடையாறு பிரம்மஞான சபையின் தலைவர் மற்றும் லிபரல் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் இந்திய நடனக் கலைஞர் ருக்மணி தேவி அருண்டேலின் கணவர் ஆவார்.

ஜார்ஜ் அருண்டேல்
பானாரசில் கல்லூரித் தலைவராக அருண்டேல்
பிற தகவல்கள்
பிறப்பு(1878-12-01)1 திசம்பர் 1878
சர்ரே, இங்கிலாந்து
இறப்பு12 ஆகத்து 1945(1945-08-12) (அகவை 66)
அடையாறு, சென்னை
குடியுரிமைபிரித்தானியர்
சமயம்லிபரல் கத்தோலிக்கம்
வாழ்க்கைத் துணைவர்ருக்மிணி தேவி அருண்டேல்
படித்த இடம்செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அருண்டேல் இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார். பிரம்மஞான சபையைச் சேர்ந்த செல்வந்தரான இவரது அத்தை பிரான்செஸ்கா அருண்டேல்லால் தத்தெடுக்கப்பட்டார். துவக்கத்தில், இவர் சார்லஸ் வெப்ஸ்டர் லீட்பீட்டரால் தனிப்பட்ட முறையில் பயிற்றுவிக்கப்பட்டார். பின்னர், இவர் பிரான்செஸ்கா அருண்டேலுடன் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு இவர் வைஸ்பேடனில் உள்ள கெலேஹர்டே ஜிம்னாசியத்தில் பள்ளிக்குச் சென்றார். இறுதியில் இங்கிலாந்து திரும்பிய இவர், கேம்பிரிட்ச்சில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]

இந்தியா தொகு

இந்திய ஆன்மீகத்தில் புனிதமாக கருதப்படுவது வாரணாசி ஆகும். 1902 இல் அருண்டேலும் அவரது அத்தையும் வாரணாசிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு இவர் மத்திய இந்துக் கல்லூரியில் (ம.இ.க) வரலாற்று ஆசிரியராகப் பதவி ஏற்றார். 1909 இல், இவர் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில், அருண்டேல் அடையாறு பிரம்மஞானசபையில் ஆற்றிய உரை, லெட்ச்வொர்த் கார்டன் சிட்டியில் புனித கிறிஸ்டோபர் பள்ளியை நிறுவுவதற்கு ஊக்கமளித்தது. அங்கு அது அதன் நிறுவனக் கொள்கைகளின் கீழ் இயங்குகிறது.

 
அன்னி பெசன்ட், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, அவரது தம்பி நித்யானந்தா, மற்றும் சிறுவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோருடன் லண்டனில் உள்ள சேரிங் கிராஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். (படமும், தலைப்பும் கிருஷ்ணமூர்த்தியின், தி இயர்ஸ் ஆப் அவேக்கிங் பை மேரி லுட்யென்ஸ், பக்கம் 84)

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரும்மஞானிகள் பலர் மைத்ரேயா அல்லது உலக ஆசிரியர் என்று அழைக்கப்படும் ஒரு மீட்பாளர் உடனடியாக தோன்றுவார் என்று நம்பினர். இந்த நேரத்தில், ஒரு முன்னணி பிரும்மஞானிகளின சார்லஸ் லீட்பீட்டர் என்பவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற சிறுவனே மீட்பாளராவதற்கு சாத்தியமான "வாகனம்" என்று அடையாளம் கண்டார் (கிருஷ்ணமூர்த்தி பின்னர் அந்த யோசனையை மறுத்தார்). அருண்டேல் கிருஷ்ணமூர்த்தியின் தனிப்பட்ட ஆசிரியர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உலக ஆசிரியரின் வருகையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் 1910 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு இரகசிய சமூகத்தை உருவாக்கினார். ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன் (பின்னர் ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் இன் ஈஸ்ட் என மறுபெயரிடப்பட்டது) இதை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. அதில் பணியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ம.இ.க வின் மாணவர்கள் மற்றும் ஊழியர்களாவர். சமுதாயத்தின் இருப்பும் செயல்பாடுகளும் இறுதியில் பொதுவெளிக்கு வந்தபோது பெரும் சலசலப்பு ஏற்பட்டது; பள்ளியின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளின் உத்தரவை எதிர்த்ததைத் தொடர்ந்து, 1913 இல் அருண்டேலும் மற்ற ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலகி பள்ளியை விட்டு வெளியேறினர்.

விடுமுறை இங்கிலாந்தில் செலவிட்ட பிறகு, பிரம்மஞானசபையின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக இவர் இந்தியா திரும்பினார். இவரும் அவரது அத்தையும் சென்னை அடையாறில் உள்ள சங்கத்தின் பரந்த வளாகத்தில் குடியேறினர். இந்தியாவின் பண்டைய பண்பாடு, மெய்யிலில் ஆர்வம், பெருமிதம் ஆகியவை மறுமலர்ச்சி அடைந்தது போலவே, இந்திய விடுதலை இயக்கம் இந்த ஆண்டுகளில் வேகமெடுத்தது. பிரம்மஞானசபை இந்த இரண்டு போக்குகளுக்கும் ஆதரவாக இருந்தது. 1917 ஆம் ஆண்டில், அன்னி பெசண்ட் உடன் இணைந்து, இந்திய தேசிய பல்கலைக்கழகத்தை மதராசில், சங்கத்தின் தலைமையகத்திற்கு அருகில் நிறுவ ஏற்பாடு செய்த பிரும்மஞானிகள் குழுவில் இவரும் ஒருவர். இரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தரானார். அதே ஆண்டு சூன் மாதம், அருண்டேல், அன்னி பெசன்ட், பஹ்மான் பெஸ்டோன்ஜி வாடியா ஆகியோர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டார்.

திருமணம் தொகு

அடையாறில் அருண்டேல் வாழ்ந்த காலத்தில், சக பிரும்மஞானியான நீலகண்ட சாஸ்திரியின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகினார். மேலும் அவரது மகளான ருக்மணியைக் காதலித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் ஒரு வினோதமான அரை-கிறிஸ்துவப் பிரிவாகக் கருதப்பட்ட பிரும்மஞானிகளுடன், பாரம்பரிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவரான சாஸ்திரியின் ஈடுபாட்டை பலரால் ஏற்க முடியவில்லை. மேலும் இந்த இருதரப்பினரின் இனம், சமயம், பண்பாட்டுப் பின்னணி ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளும் முன்வைக்கப்பட்டன. மேலும் அருண்டேலைவிட ருக்மணி இருபத்தி ஆறு வயது இளையவராக இருந்தார்.

இந்தக் கருத்துகளும், ருக்மணியின் குடும்பத்தினர் எழுப்பிய சலசலப்புகளையும் தாங்காமல், ருக்மிணிக்கு பதினாறு வயதும், இவருக்கு நாற்பத்திரண்டு வயதும் ஆனபோது, 1920இல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அருண்டேல் ருக்மணிக்கு வழிகாட்டியாக இருந்து, பாரம்பரிய நடனத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார். பாரம்பரிய நடனமான பரதநாட்டிய பாணி புத்துயிர் பெறுவதில் ருக்மிணி முக்கிய பங்கு வகித்தார். அதன்படி, ருக்மணி தேவி அருண்டேலின் கணவர் என்பதால்தான் ஜார்ஜ் அருண்டேல் இன்று இந்தியாவில் பிரபலமாக நினைவுகூரப்படும் நபராக இருக்கிறார்.

தொழில் தொகு

இவரது திருமணத்தைத் தொடர்ந்து, இவர் சில ஆண்டுகள் சென்னைக்கு வெளியே வசிப்பதே சிறந்தது என்று கருதினார். மேலும் நடு இந்தியாவில் உள்ள இந்தோர் சமஸ்தானத்தின் கல்வி ஆணையராக பணியாற்ற இந்தோர் மகாராஜா அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இந்தோரில் இவரது பணிகளில் ஒன்றாக, நவரத்ன மந்திர் என்று அழைக்கப்படும் அருங்காட்சியகத்தைத் திறப்பது இருந்த்து. அதில் இளம் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கதக்கதாக உலகம் முழுவதிலுமுள்ள பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைக்கபட்டன. இது இந்தோரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்திற்கு முன்னோடியாக அமைந்தது.

இவர் பரம்மஞான சபையின் செயல்பாடுகளில் தனது நேரத்தை அதிகம் செலவிட்டார். 1924 இல், அடையாறில் இவரது அத்தை இறந்தார், மேலும் அவரது கணிசமான செல்வத்தை இவர் பெற்றார். 1926 இல், இவர் லிபரல் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆனார். இது ரோமன் கத்தோலிக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு இறையியல் அமைப்பாகும். அதே ஆண்டு, இவர் ஆத்திரேலியாவில் உள்ள பிரம்மஞான சபையின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் தன் மனைவியுடன் அங்கு சென்றார். ஆத்திரேலிய பயணத்தில் இவர்களது சக பயணிகளில் ஒருவராக பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவா இருந்தார். அவர் விரைவில் அருண்டேலின் நண்பரானார். ருக்மணி, பாவ்லோவாவின் கலையைக் கண்டு அதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் விருப்பத்தைக் கூறியபோது, பாவ்லோவா, இந்தியாவின் பாரம்பரிய மரபுகளைப் பார்த்து, அவற்றின் மறுமலர்ச்சிக்கு உழைக்குமாறு ருக்மிணிக்கு அறிவுறுத்தினார். ருக்மிணி அவரது அறிவுரைகளை மனதில் கொண்டு, பின்னர் இந்தியாவில் பரதநாட்டியத்தின் மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமானார்.

1934 இல், ஜார்ஜ் அருண்டேல் அடையாறு பிரம்மஞான சபையின் தலைவரானார். அதே ஆண்டு, சங்க வளாகத்தில் பெசன்ட் நினைவுப் பள்ளியை நிறுவினார். பின்னர் மரியா மாண்டிசோரி வந்து அப்பள்ளியின் பொறுப்பேற்றார். மாண்டிசோரி 1939 இல் அடையாருக்கு வந்து மூன்று ஆண்டுகள் இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கல்வி நிலையத்தில் தாகத்தை ஏற்படுத்தினார்.

1936 ஆம் ஆண்டில், அருண்டேல் கலாசேத்திராவை நிறுவினார். இது இந்திய பாரம்பரிய நடனத்தை ஆராய்வதற்கும், கற்பிப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு மரியாதைக்குரிய கல்வி நிறுவனமாகும். 1948 வரை, கலாசேத்ரா அடையாரில் உள்ள பிரம்மஞான சபையின் பரந்த வளாகத்தில் அமைந்திருந்தது.

அருண்டேல் 1902 இல் ஒரு விடுதலைக் கட்டுநர் ஆனார் மேலும் இவரது இறுதி நாட்கள் வரை அதில் ஒருவராக இருந்தார். இவர் லே ட்ராய்ட் ஹூமைனின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் இளம் பிரம்மஞானத்தவர்களின் உலக கூட்டமைப்பிற்காகவும் பணியாற்றினார். இவரது வாழ்க்கையின் கடைசி தசாப்தத்தில், இவர் பரம்மஞானத்தைப் பற்றி பல புத்தகங்கள் மற்றும் தனிவரைநூல்களை எழுதினார். 1945ல் அடையாறில் உள்ள இவரது இல்லத்தில் இவர் நிம்மதியாக இறந்தார்.

படைப்புகள் தொகு

  • Freedom and friendship. Theosophical Publishing House, Madras 1935.
  • Kundalini, an occult experience. Theosophical Publishing House, Madras 1938.
  • Mount Everest, its spiritual attainment. Theosophical Press, Wheaton 1933.
  • Nirvana, A Study In Synthetic Consciousness. Theosophical Press, Chicago 1926.
  • The Lotus Fire, A Study in Symbolic Yoga. Theosophical Publishing House, Madras 1939.
  • Thoughts on 'At The Feet of the Master'. Theosophical Publishing House (American Branch), Hollywood 1919.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_அருண்டேல்&oldid=3701058" இலிருந்து மீள்விக்கப்பட்டது