ஜெ. இராதாகிருட்டிணன்
ஜெ. இராதாகிருட்டிணன் (J.Radhakrishnan) (பிறப்பு செப்டம்பர் 16, 1966), ஓர் இந்திய அரசு ஊழியர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை நிகழ்வுகளுக்குப் பிறகு, முக்கியப் பங்காற்றி நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்திச் செய்தமைக்காக நன்மதிப்பைப் பெற்றவர்.
ஜெ. இராதாகிருட்டிணன் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 16, 1966 தமிழ்நாடு, இந்தியா |
இளமைக்காலம் மற்றும் கல்வி
தொகுஇராதாகிருட்டிணன் 16 செப்தம்பர் 1966 அன்று சென்னை, இந்தியாவில் பிறந்தார். கான்பூர், சண்டிகர், நாசிக் மற்றும் தியோலலி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். பெங்களூருவில் கால்நடை அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்று பட்டம் பெற்றார். இவர் கால்நடை அறிவியல் (கால்நடை வளர்ப்பு மற்றும் மரபியல்) இல் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.
இந்தியக் குடிமைப்பணி நிர்வாகம்
தொகுஇராதாகிருட்டிணன், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுகளைச் சிறப்பாக நிறைவு செய்தார். பின்னர், 1992 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டார். தொடக்க நிலை பயிற்சிக்குப் பிறகு, இவர் 9 ஆகத்து 1994 அன்று, தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். 1996 முதல் 1999 வரை தமிழக அரசின் நிதித்துறையின் துணைச் செயலராகப் பணியாற்றினார். மார்ச் 1999 முதல் மார்ச் 2000 முடிய குடும்ப நலம் மற்றும் பேணுதல் துறையின் துணைச் செயலராகவும் செயல்பட்டார். சூலை 2001 இல் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுவதற்குமுன்பு, மார்ச் 2000 இலிருந்து சென்னை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நில வருவாய்த் துறையில் பணிபுரிந்தார்.
சூலை 1, 2001 முதல் சூலை 15, 2003 முடிய, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக, மே 29, 2004 முதல் சனவரி 10, 2005 முடிய பணியாற்றினார். அக்காலகட்டத்தில்தான், இந்தியப் பெருங்கடலில் உருவான ஆழிப்பேரலையானது தமிழ்நாட்டை திசம்பர் 26, 2004 அன்று தாக்கியது. பாதிப்புக்குள்ளான தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவாரண நடவடிக்கைப் பணிகளை ஒருங்கிணைத்தார். அப்பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் ஆகியவற்றைத் திறம்பட கையாண்ட அவரது செயல்திறம் பரவலான பாராட்டைப் பெற்றது. இக்காலகட்டத்தில், மிகுந்த பாதிப்புக்குள்ளான நாகப்பட்டின மாவட்டத்தில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் தொய்வாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதலால், இராதாகிருட்டிணன் சனவரி 10, 2005 அன்று அங்குப் பணியமர்த்தப்பட்டார். நாகப்பட்டின மாவட்டத்தில் மே 16, 2006 முடிய சேவையாற்றினார். பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நிவாரண முகாம்களை ஏற்படுத்தினார்.[1]
பாராட்டு
தொகு2004 இல் ஆழிப்பேரலைப் பாதிப்பிற்குள்ளான தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண உதவிகள் ஒருங்கிணைப்பு மற்றும் விரைவு மீட்புப் பணிகள் காரணமாக, இராதாகிருட்டிணன் பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார். மே 27, 2005 இல் ஆழிப்பேரிடர் மீட்புக்கான ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளரின் சிறப்புத் தூதுவரும் மேனாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவருமான பில் கிளிண்டன் வருகையின்போது, இவருடைய நிர்வாகத் திறன்கள் வெகுவாகப் பாராட்டுப் பெற்றன.[2] அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வாஷிங்டன், சீத்தல், சான் பிரான்சிகோ, அவாய்த் தீவு ஆகிய இடங்களில் அமெரிக்க ஐக்கியக் கல்வித் துறையினருக்கு ஆழிப்பேரிடர் மீட்புத் தொடர்பான விளக்கவுரை நிகழ்த்த அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.[3] அதுபோல், இலங்கை அரசாங்கமும் தம் பேரிடர் மீட்பு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடையே அவரின் திறப்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள தம் நாட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தது. தமிழ்நாட்டின் குடிமைப்பணிக்குத் திரும்பும் வரை, இவர் மார்ச் 2009 முதல் மார்ச் 2012 முடிய ஐக்கிய நாடுகள் அவை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயற்படும் பேரிடர் மேலாண்மைக் குழுவிற்குத் தலைமை வகித்தார். ஏப்ரல் 2012 ல் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் செயலாளராக மீளப் பணியேற்றுக்கொண்டார். அதன் பின், செப்தம்பரில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டின் மேற்குறிப்பிட்ட துறையின் முதன்மைச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- "Biodata of J. Radhakrishnan". Executive Record Sheet Generator. Ministry of Personnel, Public Grievances ad Pensions, Government of India. Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
- "Tsunami: The Heroes". Rediff News இம் மூலத்தில் இருந்து 2016-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160829074352/http://in.rediff.com/chat/tsunamichat.htm.
- ↑ http://in.rediff.com/news/2005/jan/25rep1.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
- ↑ http://www.rediff.com/news/2005/jun/04rada.htm