ஞானரதம் (சிற்றிதழ்)
ஞானரதம் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இந்த இதழின் உரிமையாளரான தேவ. சித்திரபாரதி (எ) முகமது இப்ராகிம் நிர்வாக ஆசிரியராக இருந்தார். மேலும் இதழுக்கு ஜெயகாந்தனை ஆசிரியர் ஆக்கினார்.[1]
வரலாறு
தொகுமுதுரையில் நூலகராக பணியாற்றிக் கொண்டிருந்த என். முகமது இப்ராகிம் (சித்திரபாரதி) இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். இலக்கிய வளர்ச்சிக்காகப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பு மிக்கவராக இருந்தார். சென்னைக்கு வந்த இப்ராகிம் நல்ல இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக கொண்டவராக இருந்தார். தனது பெயரை தேவ. சித்திரபாரதி என்று ஆக்கிக் கொண்டார்.[2]
தன் ஆசைப்படி 1970இல் ஞானரதம் இதழை பொறுப்பாசிரியர் பொறுப்பேற்று துவக்கினார். தான் பெருமதிப்பு கொண்டிருந்த ஜெயகாந்தனை ஆசிரியர் ஆக்கினார். இதழின் ஆசிரியர் குழுவில் ஞானக்கூத்தன் இருந்தார்.[1] முதல் ஆறு மாத காலம் ஞானரதம் சிறிய அளவில் ( கிரவுன் சைஸ்) வெளிவந்தது.
7-வது இதழிலிருந்து ஒவ்வொரு இதழையும் ஒவ்வொருவர் தயாரிக்கும் முறையை தேவ சித்திரபாரதி கைக்கொண்டார். 7-வது இதழ் ஞானக்கூத்தன் தயாரிப்பு, இதழின் அளவும் பெரிதாகியிருந்தது அப்போதைய ஆனந்த விகடன் அளவில் வெளிவந்தது. 8-வது இதழை வல்லிக்கண்ணன் தொகுத்தார். 9-வது இதழை பரந்தாமன் தயாரித்தார். இத்துடன் ஒரு ஆண்டு முடிந்தது. தேவ. சித்திரபாரதி வேறு முயற்சிகளில் செயலூக்கம் கொண்டிருந்ததால், ஞானரதம் ஏடு சோர்வடையத் தூங்கியது.
1972 இல் ஞானாதம் மாத இதழ் மீண்டும் தோன்றியது. இப்போது ஜெயகாந்தனுக்கும் இதழுக்கும் தொடர்பு ஏதுவும் இல்லா நிலை இருந்தது. இதழுக்கு தேவ. சித்திரபாரதிதான் ஆசிரியர், நிர்வாகி எல்லாம் என்று ஆனது. ‘உண்மையைத் தேடும் எழுத்தைவிட உயர்ந்த இலக்கியம் இல்லை.' என்ற வரியை லட்சியக் கொள்கையாகப் பொறித்திருந்த இலக்கிய ஏடாக இருந்தது. ஞானரதம், அதன் காலகட்டத்தில் க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்ரமண்யம் ஆகியோரின் மணிவிழாச் சிறப்பிதழ்கள் வெளியிட்டு அப்படைப்பாளிகளைக் கௌரவித்தது.
படைப்பாளிகள் பலரும் ஞானரதத்துடன் ஒத்துழைத்தது, அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் துணை புரிந்தது. பல வருட காலம் நடுவில் எழுதாதிருந்த சுந்தர ராமசாமி ஞானரதத்துக்கு அதிகமாகவே கதைகள், சுதந்திரச் சிந்தனைகள், கவிதைகள்- எழுதி உதவியுள்ளார்.
1974இல் தேவ சித்திரபாரதி இதழில் ஒரு புதுமையை புகுத்தினார். கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியவர்களின் பெயர்களை அச்சிடாது, அவர்களது எழுத்துக்களை மட்டுமே கொடுப்பது. குறிப்பிட்ட எழுத்தை வைத்து, சம்பந்தப்பட்ட படைப்பாளி யார் என்று வாசகர்கள் கண்டுகொள்ள வேண்டும். உரிய பெயர்கள் அடுத்த இதழில் பிரசுரிக்கப்பட்டன. இதைப் பெரும்பாலான வாசகர்கள் வரவேற்கவில்லை.
1974 சனவரி முதல் ஞானரதம் கடைகளில் விற்பனை செய்யப்படாத சந்தாப் பணம் கட்டிய வாசகர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு சிற்றிதழாக மாற்றப்பட்டது.[2]
படைப்புகள்
தொகுமுன்னோட்டம் என்ற பகுதியில் ஜெயகாந்தன் பல்வேறு சிக்கல்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். உரத்த சிந்தனை என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவ்வப்போது கவிதைகளையும் எழுதினார். ரசனை என்ற பகுதியில், ரசனைக்கு அடிப்படையான சில ஆரம்பப் பயிற்சிகளை விளக்கும் நோக்கத்துடன் வெ. சாமிநாதன், ‘அனுபவம், வெளிப்பாடு, நவீன ஓவியம்' என்ற தலைப்பில் 7-வது இதழ் முடிய தொடர் கட்டுரை எழுதினார். மேலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
இடையில் சிலகாலம் தோய்வுற்றிருந்த இதழ் 1972இல் மீண்டும் தோன்றியது. இப்போது ஜெயகாந்தனுக்கு பதில் தேவ. சித்திரபாரதியே ஆசிரியர் பொறுப்பையும் சேர்த்து ஏற்றுக்கொண்டார். இதழ்தோறும் முன்னோட்டம் என்ற பகுதியில் பல்வேறு சிக்கல்கள் குறித்தும் அவர் தமது சிந்தனைகளை விரிவாக எழுதிக் கொண்டிருந்தார்.
புதிய ஓட்டம் பெற்ற ஞானரதம் இலக்கிய விசயங்களிலும், இலக்கியவாதிகளின் சச்சரவுகளிலும் மிகுதியான அக்கறை காட்டி வந்தது. உரத்த சிந்தனை என்ற தலைப்பில், படைப்பாளிகள் வாசகர் சந்திப்பை (வாசகர் கேள்விகளையும் படைப்பாளிகளின் பதில்களையும்) வெளியிட்டது. இது இந்த இலக்கிய ஏட்டின் தனிச் சிறப்பான பகுதியாக விளங்கியது. ‘இலக்கிய அனுபவம்‘ என்ற தலைப்பில் புத்தகங்கள் அல்லது தனிப் படைப்புகள் பற்றி யாராவது விரிவாக அபிப்பிராயங்கள் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.[2]
நிறுத்தம்
தொகுஇதன் கடைசி இதழ் 37-39 (மே-சூலை 1974 ) என்று இலக்கமிடப்பட்டு, சோல்செனிட்சின் சிறப்பிதழ் என்று வெளிவந்தது. அந்த இதழின் கடைசிப் பக்கத்தில் காணப்பட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அது;
“1974 ஆகஸ்டு முதல், இப்போது இலக்கியத் துறைப் பத்திரிகையாக மட்டும் உள்ள ஞானரதம் மானிட இயல்கள் (Humanities) அனைத்துக்குமான பத்திரிகையாகப் பரிணாமம் பெறுகிறது. இதற்கிசைவாக திரு. கந்தர ராமசாமியின் தலைமையில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட புதிய ஆசிரியர் குழு ஆகஸ்டு 1974 முதல் பொறுப்பேற்கிறது. ஆகஸ்டு முதல், ஞானரதம் இதே அளவில் 80 பக்கங்களுடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலை அம்சங்களுடன் வெளிவரும். தனி இதழ் விலை ரூ. 2 ஆண்டுச் சந்தா ரூ.12 இருக்கும்.”
என்றாலும் இந்த ஏற்பாடு வெற்றி பெறவில்லை.[2]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "இழப்பின் இருப்பு சா கந்தசாமி". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/sep/04/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2559548.html. பார்த்த நாள்: 8 December 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 79–82. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.