டுவோரக் விசைப்பலகை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டுவோரக் விசைப்பலகை (Dvorak Keyboard) 1936 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் டுவோரக், வில்லியம் டீலி ஆகியோரால் காப்புரிமை பெறப்பட்டது. நிலவும் ஆங்கில விசைப்பலகை வடிவமைப்பான குவர்ட்டி (QWERTY) விசைப்பலகைக்கு ஒரு நிறுவப்பட்ட 'மாற்றாக' இது கருதப்படுகிறது. தட்டச்சில் அதிவேகம், குறைவான தட்டச்சுப் பிழைகள், தட்டச்சுகையில் தேவைப்படும் குறைவான 'விரல்களின் இயக்கம்' ஆகியவை டுவோரக் விசைப்பலகையின் சிறப்புகளாக அதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
வரலாறு
தொகுகுவர்ட்டி விசைப்பலகையின் வரலாறு
தொகுடுவோரக் விசைப்பலகையின் வரலாற்றை அறியும் முன் குவர்ட்டி (QWERTY) விசைப்பலகையின் வரலாற்றை அறிதல் இன்றியமையாததாகும். 1867 ஆம் ஆண்டு கிறிஸ்தோபர் சோல்ஸ் என்பவர் அகரவரிசைப்படி ஆங்கில எழுத்துக்கள் அமைந்த தட்டச்சு எந்திரத்தை அறிமுகம் செய்தார். சமகாலத்தில் ஏறத்தாழ 51 கண்டுபிடிப்பாளர்கள் தட்டச்சு எந்திரக் காப்புரிமை பெற்றிருந்தனர். அவர்களின் அனைத்து வடிவமைப்புகளின் பொதுக் கோளாறாக 'விசைக் கம்பிகள் பிணைந்து கொள்ளுதல்' இருந்தது. தட்டச்சு விரைவாகச் செய்யப்படுகையில் ஏற்பட்ட விசைக் கம்பிகள் பிணைந்து கொள்ளும் கோளாறைச் சரிசெய்ய கண்டறியப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டதே 'க்வர்ட்டி' விசையமைவு முறையாகும். எந்திரத்தொழில் நுட்பத்தில் மாற்றத்தைக் கோராமல் விசையமைவு முறையில் மேற்படி 'விசைக்கம்பிகள் பிணைந்துகொள்ளும்' கோளாறை சரிப்படுத்தும் முயற்சியில் அனைத்து விசைமைவு முறைகளையும் வெற்றிகண்டு தட்டச்சு எந்திர உற்பத்தியாளர்களிடம் க்வர்ட்டி முறை பரவியது. அன்றைய தொழில்நுட்ப வளரச்சியின் வரம்புக்குள் இரண்டு சிறப்புக் கூறுகள் 'க்வர்ட்டி' விசைமைவின் வெற்றிக்கு அடிகோலின. அவை,
- பெருவீத உருவாக்கத்திற்குப் பொருந்தியமை,
- ஒப்பீட்டளவில் விசைக்கம்பிகள் 'பிணைந்திடும் கோளாறை' வெற்றி கொண்டமை
ஆகியனவாகும்.
டுவோரக் விசைப்பலகையின் வரலாறு
தொகுமுனைவர் ஆகஸ்ட் டுவோரக் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியர் ஆவார். அவர் அப்பல்கலைக்கழகத்தில் ஜெர்ட்டூட் ஃபோர்டு என்பார் மேற்கொண்ட 'தட்டச்சுப் பிழைகள்' எனும் தலைப்பிலான ஆய்வுப்பணியில் ஆலோசகராக விளங்கிய காலகட்டத்தில் தட்டச்சு விசையமைவு முறைகளில் ஆர்வம் கொண்டார். 'தொடு தட்டச்சு' பரவலாகப் புழக்கத்தில் இருந்த அக்காலகட்டத்தில் முனைவர் டுவோரக் 'குவர்ட்டி' விசையமைவு முறையை ஆழ்ந்து ஆய்ந்து அது மாற்றியமைக்கப்படவேண்டும் எனும் முடிவை வந்தடைந்தார். பின் அவரும் அவரின் மைத்துனரான முனைவர் வில்லியம் டீலியும் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். இருவரின் நோக்கம் மேலதிகத் தட்டச்சு வேகம், குறைந்த தட்டச்சுப்பிழைகள், தட்டச்சுகையில் குறைவான அயர்ச்சி ஆகியவற்றுக்கு உகந்த அறிவியல் வழிப்பட்ட முறையில் புதிய விசையமைவு முறையை உருவாக்குவதே. அவர்களின் முயற்சி ஆங்கில மொழியில் அதிகப் பயன்பாட்டுக்கான எழுத்துக்கள் மற்றும் எழுத்துச் சேர்க்கைகள் குறித்த ஆய்வுப் பணியிலிருந்து துவங்கியது. அவர்களின் ஆய்வுப் பொருளில் கைகளின் செயற்பாடு, விரல்களின் இயக்கம் ஆகியவற்றையும் பின்னர் இணைத்துக்கொண்டனர்.
இவ்வாய்வுகளின் விளைவாக 1932 இல் 'டுவோரக் எளிய விசைப்பலகை' தட்டச்சு உலகில் தோன்றியது. பின்னர் 1936 ஆம் ஆண்டு முனைவர் டுவோரக் மற்றும் முனைவர் வில்லியம் டீலி ஆகியோர் இணைந்து டுவோரக் விசைப்பலகையை 'அமெரிக்க எளிய விசைப்பலகை' எனும் பெயரில் காப்புரிமை பெற்றனர். 1933 இல் முதன்முறையாக 'நாட்டிடை தட்டச்சுப் போட்டி'களில் டுவோரக் வழித் தட்டச்சர்கள் கலந்துகொண்டனர். தட்டச்சு எந்திரங்கள் பெருவீத உருவாக்கத்தில் நாளும் சந்தைக்கு வந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் தட்டச்சுத் தயாரிப்பில் முன்னணியிலிருந்த பல நிறுவனங்கள் தத்தம் நிறுவன விளம்பரத்திற்கென இப்போட்டிகளை நிகழ்த்தினர். 1934-41 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் டுவோரக் தட்டச்சாளர்கள் பத்துமுறை மேற்படி உலகப்போட்டிகளில் வென்றனர். 1935 ஆம் ஆண்டின் 20 வெற்றியாளர்களில் 10 பேர் டுவோரக் தட்டச்சாளர்கள் ஆவர். பார்பரா பிளாக் பர்ன் எனும் பெண் உலகின் வேகமான தட்டச்சாளர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ஆவார். ஒரு டுவோரக் தட்டச்சரான இவர் 50 நிமிடங்களில் நிமிடத்திற்கு 150 சொற்கள் (37,500 விசைத்தட்டல்கள்) தட்டச்சக் கூடியவர் ஆவார். மேலும் தொடர்ந்து 170 சொற்கள்வரை தட்டச்சக்கூடியவர். அவரது மீஉயர் வேகம் நிமிடத்திற்கு 212 சொற்கள் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு பெற்றுள்ளது.
விசையமைவின் வழிகாட்டு நெறிகள்
தொகுமுனைவர் டுவோரக் தனது 'டுவோரக் எளிய விசைப்பலகையை' பின்வரும் புள்ளிகளிலிருந்து வடிவமைத்தார்.
- எழுத்துகள் கைகளை மாற்றி மாற்றி அடிக்கும வகையில் அமைதல். (இது தட்டச்சு வேகத்தைக் கூட்டும், பிழைகளைத் தவிர்க்கும், தட்டச்சரின் அயர்ச்சியைக் குறைக்கும்)
- அதிக அளவு வேகத்தை உறுதி செய்ய முதன்மை வரிசையிலேயே மிகப் பொதுவான எழுத்துகள் அமைதல் வேண்டும். (இது தட்டச்சை எளிமையாக நிகழ்த்தும். ஏனெனில் விரல்களின் இருக்கைப் பகுதியே முதன்மை வரிசை)
- வலிமை வாய்ந்த விரல்களிலேயே மிகப் பொதுவான எழுத்துகள் அமைதல் வேண்டும்.
- பொதுவான ஆனால் அரிதாய்ப் பயன்படுகிற எழுத்துகள் விரல்களின் கடினமான அணுகல் பகுதியான கீழ்வரிசையில் இருத்தல் வேண்டும்.
- உலகின் பெரும்பாலான மக்கள் வலக் கையர்கள் என்பதால் தட்டச்சில் பெரும்பகுதி வலக்கையில் நிகழவேண்டும்.
- தட்டல்கள் பொதுவாக பலகையின் விளிம்பிலிருந்து நடுப்பகுதிவரை செல்ல வேண்டும். (எதிர்திசையில் அன்று. ஏனெனில் சுண்டு விரல் தொடங்கி சுட்டுவிரல் வரை விரலியக்கம் எளிதாக நிகழும். மாறாக சுட்டுவிரல் தொடங்கி சுண்டுவிரல் எனும் போது விரலியக்கம் கடினமாக அமையும்.)
குவர்ட்டி விசைப்பலகையின் குறைபாடுகள்
தொகுமுனைவர் டுவோரக் குவர்ட்டி விசைப்பலகையினை ஆழ்ந்து ஆய்ந்து பின்வரும் குறைபாடுகளைத் தொகுத்தார்.
- பொதுவான பல எழுத்துச்சேர்க்கைகளுக்கு கடினமான விரலியக்கம்.
- பொதுவான பல எழுத்துச் சேர்க்கைகள் ஒரே விரலால் தட்டச்சப்படுதல்
- பொதுவான பல எழுத்துச் சேர்க்கைகள் தட்டச்சுகையில் ஒரு விரலாவது பிற வரிசைகளுக்கு இடம்பெயர்தல்
- பொதுவான பல எழுத்துச் சேர்க்கைகளுக்கு ஒரு கையினால் தட்டச்சுதலும் மற்றொரு கை சும்மா இருப்பதும் நிகழ்கிறது
- தட்டச்சின் பெரும்பகுதி பெரும்பாலானோர்க்கு பலவீனமாக உள்ள இடக்கையில் நிகழ்கிறது.
- பொதுவான பல எழுத்துச்சேர்க்கைகள் அடுத்தடுத்த விரல்களால் தட்டச்ச வேண்டியுள்ளது. இது வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
- 30% தட்டச்சு வேகம் மட்டுப்படுகிற, கடினமான அணுகலில் அமைந்துள்ள கீழ்வரிசையில் நிகழ்கிறது
- 52% தட்டச்சு மேல்வரிசையில் நிகழ்கிறது. முதன்மை வரிசையிலிருந்து பெரும்பாலும் மேல்வரிசைக்கு விரல்கள் சென்றுவரும் வண்ணம் நிகழ்கிறது.
ஏற்பிசைவு
தொகு1982 ஆம் ஆண்டு அமெரிக்க தேசியத் தரப்படுத்தல் நிறுவனம் ANSI X4.22 எனும் டுவோரக் விசையமைவுத் தரப்படுத்தலைச் செய்தது. குவர்ட்டி விசைப்பலகையை நீக்கம் செய்யவோ அதன் பரவலைப் பெறவோ டுவோரக் விசைப்பலகையினால் இயலவில்லை. ஆயினும், 'குவர்ட்டி'க்கு நிறுவப்பட்ட மாற்றாக டுவோரக் அதிகாரப்பூர்வமாக நிலைகொண்டது. இன்று சற்றேறக்குறைய அனைத்துக் கணிணிகளும் டுவோரக் 'எளிய விசைப் பலகை' நிறுவல் வசதியைக் கொண்டிருக்கின்றன.
டுவோரக் விசைப்பலகை வகைகள்
தொகுமூன்று வகையான டுவோரக் விசைப்பலகை முறைகள் நிறுவப்பட்டுள்ளன. பொது டுவோரக் விசைப்பலகை, வலக்கையர்களுக்கான டுவோரக் விசைப்பலகை, இடக்கையர்களுக்கான டுவோரக் விசைப்பலகை ஆகியவையே அவை.
திறனாய்வு
தொகுகுவர்ட்டியின் பரவலான புழக்கம் அதன் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஆகவே, அந்தப் பரவலாக்கமே டுவோரக்கின் மீதான விமர்சனமாகும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் டுவோரக் விசைப்பலகை பயன்படுத்தல்
தொகுவிண்டோஸ் இயங்குதளத்தில் குவர்ட்டி விசைப் பலகை முறையோடு டுவோரக் விசைப்பலகையைக் கூடுதலாக இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் தேவைப்படும் பொழுதில் குவர்ட்டி மற்றும் டுவோரக் விசைப்பலகைகளுக்கு எளிய குறுக்கு விசைகளைப் பயன்படுத்தி மாற்றிக் கொண்டு தட்டச்சு செய்யலாம். வழிமுறை control pane > Clock, Language, and Region > change keyboards or other input methods சொடுக்கவும். பின்தோன்றும் சாளரத்தில் keyboards and Languages என்ற தாவலின் கீழ் உள்ள change keyboards எனும் பொத்தானைச் சொடுக்கவும். தோன்றும் சாளரத்தில் General என்ற தாவலில் வலப்பக்கம் தெரியும் Add என்ற பொத்தானைச் சொடுக்கி விரியும் பட்டியலில் English(United States)> keyboard>United States-dvorak ஐ தேர்வுசெய்யவும்.அல்லது அதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள டுவோரக் விசைப்பலகையின் வலக்கை இடக்கை சிறப்பு விசைப்பலகை வாய்ப்புகளில் தேவையானதைத் தேர்வு செய்து கொள்ளலாம். பின் அதே சாளரத்தில் Advanced Key settings தாவலின்கீழ் தேவைப்படும் குறுக்குவிசைகளை அமைத்துக் கொள்ளவும். இனி எளிதாக குவர்ட்டி மற்றும் டுவோரக் விசைப்பலகைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொண்டு தட்டச்சு செய்யலாம்.
டுவோரக் விசைப்பலகையும் தமிழ்99 விசைப்பலகையும்
தொகுடுவோரக் விசைப்பலகை எவ்வாறு இலகுவானது என்பதை தமிழர்கள் மரபான யளன விசைப்பலகையையும் தமிழ்99 விசைப்பலகையையும் ஒப்பிட்டு அறியலாம். டுவோரக் விசைப்பலகையின் சிறப்புகளான குறைவான அயர்ச்சி, விரைவான வேகம், இருகைகளில் சமமாக நிகழும் விரலியக்கம் ஆகிய தமிழ்99 விசைப்பலகையின் சிறப்புகள் டுவோரக் விசைப்பலகையின் சிறப்புகளுக்கு ஒப்பானவையாகும். மேலும் குவர்ட்டி விசையமைப்பின் குறைபாடுகள் யாவும் மரபான தமிழ் தட்டச்சு இயந்திர வடிவமைப்பான ‘யளன’வடிவமைப்புக்கு பொருந்தியுள்ளன. ஆங்கிலத் தட்டச்சுக்கு டுவோரக் விசையமைவினையும் தமிழ்த்தட்டச்சுக்கு தமிழ்99 விசையமைப்பும் எளிமையான, நல்ல தேர்வாகக் கருதப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
[1] எளியமுறை டுவோரக் விசைப்பலகை ஆங்கில விக்கிபீடியா கட்டுரை