டைட்டசு

பண்டைய உரோமைப் பேரரசர்

டைட்டசு (Titus, டிசம்பர் 30, கிபி 39 – செப்டம்பர் 13, கிபி 81) கிபி 79 முதல் 81 வரை ஆட்சியிலிருந்த ஒரு உரோமைப் பேரரசர் ஆவார்.[1][2][3] பிளாவிய வம்சத்தைச் சேர்ந்த இவர், இவரது தந்தை வெசுப்பாசியானின் இறப்பிற்குப் பின்னர் பேரரசரானார். இதன் மூலம், மரபு வழியில் உரோமைப் பேரரசராக முடிசூடிய முதலாவது நபர் இவராவார்.

டைட்டசு
Titus
10-வது உரோமைப் பேரரசர்
ஆட்சி23 சூன் 79 – 13 செப்டபம்பர் 81
முன்னிருந்தவர்வெசுப்பாசியான்
பின்வந்தவர்தொமீசியான்
துணைவர்அரெசீனா டெர்ட்டுல்லா (கிபி 62)
மார்சியா பர்னிலா (63–65; மணமுறிவு)
வாரிசு(கள்)ஜூலியா பிளாவியா
முழுப்பெயர்
  • டைட்டஸ் பிலாவியசு வெசுப்பாசியானுசு
  • டைட்டஸ் பிலாவியசு வெசுப்பாசியானுசு அகுஸ்தசு
அரச குலம்பிலாவிய வம்சம்
தந்தைவெசுப்பாசியான்
தாய்டொமித்திலா
பிறப்பு(39-12-30)30 திசம்பர் 39
ரோம்
இறப்பு13 செப்டம்பர் 81(81-09-13) (அகவை 41)
ரோம்
அடக்கம்ரோம்

பேரரசராவதற்கு முன்னர், டைட்டசு இராணுவத் தளபதியாக போர் முனைகளில் பெரும் வெற்றி ஈட்டியவர். முதலாம் யூத-உரோமைப் போரின் போது யுதேயாவில் தந்தையின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்தார். கிபி 68 இல் பேரரசர் நீரோவின் இறப்பிற்குப் பின்னர் இப்போர் நடவடிக்கையில் சிறிது தளர்வு ஏற்பட்டது. இக்காலப் பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்டது. இவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமை ஆண்டார்கள். இவர்களில் கடைசியாக பேரரசரானவர் வெசுப்பாசியான். இதன் பின்னர், டைட்டசு யூதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கிபி 70-இல் எருசலேமைக் கைப்பற்றி, எருசலேம் நகரையும் இரண்டாம் கோவிலையும் அழித்தார்.[4] இவ்வெற்றியை அடுத்து, டைட்டசுக்கு வெற்றியாளருக்கான உரோமை விருது வழங்கப்பட்டது. இவ்வெற்றியைக் கொண்டாடும் முகமாக அமைக்கப்பட்ட "டைட்டசின் வளைவு" இன்றும் நினைவுகூரப்படுகிறது.

டைட்டசின் வளைவு

தந்தை வெசுப்பாசியானின் ஆட்சியின் போது, டைட்டசு பிரட்டோரியக் காவலர்களின் தலைவனாகப் பணியாற்றிய போது, யூத மகாராணியான பெரனீசு என்பவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக டைட்டசு மீது கெட்ட பெயர் இருந்தது.[5] ஆனாலும், கிபி 79 இல் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பேரரசராகி சிறப்பான ஆட்சி நடத்தினார்.

இவரது ஆட்சிக் காலத்தில் கொலோசியம் கட்டி முடிக்கப்பட்டது. கிபி 79 இல் வெசுவியசு எரிமலை வெடிப்பு, கிபி 80 இல் உரோம் நகர் தீப்பிடித்து எரிந்த இரு நிகழ்வுகளிலும், டைட்டசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானளவு நிவாரணம் வழங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த டைட்டசு கிபி 81 செப்டம்பர் 13 இல் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவருக்குப் பின்னர் இவருடய சகோதரர் டொமீசியான் ஆட்சியில் அமர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Life of Titus
  2. Roman History, Cassius Dio
  3. Brian Jones; Robert Milns (2002). Suetonius: The Flavian Emperors: A Historical Commentary. London: Bristol Classical Press. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85399-613-0.
  4. ஜொசிஃபஸ், The Wars of the Jews VI.4.1
  5. Canduci, Alexander (2010). Triumph and Tragedy: The Rise and Fall of Rome's Immortal Emperors. Sydney, Australia: Pier 9, 1998. pp. 31–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74196-598-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைட்டசு&oldid=3305028" இலிருந்து மீள்விக்கப்பட்டது