தஞ்சாவூர் சித்தாநந்தீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

சித்தாநந்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

நுழைவாயில்

அமைவிடம்

தொகு

இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் உள்ளது. [1] வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிக அருகில் கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம் எனப்படுகின்ற சமணக் கோயிலும் நாகநாகேசுவரர் கோயில் எனப்படுகின்ற சிவன் கோயிலும் உள்ளன.

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் சித்தாநந்தீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி அமுதமொழியாள் ஆவார். சிதையில் ஆடும் பெருமான் என்று குறிக்கும் வகையில் மூலவர் சிதாநந்தீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [2]

அமைப்பு

தொகு
 
மூலவர் விமானம்

சிறிய கோயிலான இக்கோயிலின் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் மகாகணபதியும், இடது புறம் பால தண்டாயுதபாணி சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் காணப்படுகின்றன. ஒரே திருச்சுற்றினையும், கருவறையையும் கொண்டுள்ள இக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு இடப்புறம் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர், கன்னி மூல கணபதி, காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, இராணிய முனாபாய் நடராசர், சிவகாமி ஆகியோரின் சன்னதிகள் காணப்படுகின்றன. அருகே அகத்தீசுவரர், உலோப முத்திராதேவி ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடப்புறம் கால பைரவர் உள்ளார். மூலவர் கருவறைக்கு முன்பாக வலது புறம் விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.

வரலாறு

தொகு

வடவாற்றங்கரையில் சிலாத முனிவர் வேள்வி செய்தபோது இரு அசுரர்கள் அதற்குத் தொந்தரவு செய்தனர். அவர் நடத்திய வேள்வியால் அதிலிருந்து வந்த ஆனந்தவல்லி அசுரர்களை அழித்தார். முனிவர் வேள்வி செய்த இடம் ஐந்துப்பட்டை கொண்ட குளமாக கோயிலின் தென்புறத்தில் உள்ளது.அசுரர்கள் சிவ வழிபாடு செய்ததால் அவர்களுடைய இறுதிக்காரியங்கள் இவ்வாற்றங்கரையில் செய்யப்பட்டன. அன்னையின் அருளால் வதம் செய்யப்பட்ட அவர்களுடைய உடல்கள் சிதைமூட்டி எரித்து பின்னர் ஆற்றில் கரைக்கப்பட்ட போது எலும்புகள் பூக்களாக மாறியதாகக் கூறுவர்.ஆதலால் இவ்விடம் மணிமுத்தாறு என வழங்கப்பட்டது. அந்த முனிவருக்குக் கிடைத்த அமுதத்தினை க்ரைத்த காரணத்தால் குளம் அமுத சாகரம் என்று பெயர் பெற்றது. குளத்தை நோக்கி இறைவி அருள்வதால் அமுதமொழியாள் எனப்படுகிறார். அசுரர்களின் உடலுக்கு சிதை மூட்டியதால் இறைவனுக்கு சிதாநந்தீசுவரர் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. கொங்கண சித்தரின் குருவான உரோம ரிஷியின் சமாதி கூடிய இடம் கோயிலின் ஈசான மூலையில் உள்ளது.

குடமுழுக்கு

தொகு

30 ஜனவரி 2012 திங்கட்கிழமையன்று குடமுழுக்கு ஆனதற்கான குறிப்பு கோயிலில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு