தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில்
தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
நிசும்பசூதனி கோயில் | |
---|---|
கோயில் வளாகம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நிசும்பசூதனி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | புராதனக் கோவில் |
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவராக நிசும்பசூதனி அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவரை வட பத்ரகாளி என்றும், ராகுகால காளியம்மன் என்றும் அழைக்கின்றனர்.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோல உருவம் காணப்படுகிறது.
சிறப்பு
தொகுதிருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனிக்கான கோயில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆறு அடி உயரத்திற்கும் மேலுள்ள அம்மன் தன் கரங்களில் பல படைக்கலன்களைக் கொண்டுள்ளார். தீச்சுடர் போல் கேசம், முகத்தில் உறுதி, அசுரர்களை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம், வலது காதில் பிரேத குண்டலம், இடக்காதில் பெரிய குழை, சதை வற்றிய உடல், திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள், அவற்றைச் சுற்றிலும் கச்சாகக் காணப்படுகின்ற பாம்பு, உடலில் மண்டை ஓடுகள், எட்டுக் கரங்களிலும் ஆயுதங்களைக் கொண்டுள்ள அம்மனின் ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைக் காண்பிக்கிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றப்பட்ட நிலையில் உள்ளது. இச்சிற்பத்தினைப் போன்ற வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். [1] சத்ரு சம்காரியாக, வெற்றித்தெய்வமாக காட்சி தருகிறாள் நிசும்பசூதனி. [2]
குடமுழுக்கு
தொகு55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சூன் 23, 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. [3] தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [4] [5]
அருகிலுள்ள கோயில்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், பக்.22
- ↑ அருள்மிகு வடபத்ரகாளியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014, பக்.23
- ↑ வடபத்திர காளியம்மன் கோயில் குடமுழுக்கு, தினமணி, 24 சூன் 2016
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
- ↑ "காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம், தினகரன், 24 சூன் 2016". Archived from the original on 2021-09-21. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.