தமனிக்கூழ்மைத் தடிப்பு

தமனிக்கூழ்மைத் தடிப்பு அல்லது நாடிக்கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) என்பது தமனிகளின் உட்புறச்சுவரில் கொலஸ்டிரால் மற்றும் கொழுப்புப் பதார்த்தங்களும் பெருவிழுங்கிகளும் படிவதால் தமனியின் உட்புறம் தடிப்படைந்து வீக்கத்தழும்பு உருவாகுவதைக் குறிக்கின்றது. இது ஒரு நெடுங்கால அழற்சி நோய் வகையாகும். [1]

தமனிக்கூழ்மைத் தடிப்பு
Atherosclerosis diagram.png
தமனிக்கூழ்மைத் தடிப்பால் பாதிக்கப்படாத நாடியும்(A) பாதிக்கப்பட்ட நாடியும் (B) இங்கே காட்டப்பட்டுள்ளது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇதய நோயியல்
ஐ.சி.டி.-10I25.0,I25.1,I70
ஐ.சி.டி.-9440, 414.0
நோய்களின் தரவுத்தளம்1039
MedlinePlus000171
ஈமெடிசின்med/182
Patient UKதமனிக்கூழ்மைத் தடிப்பு
MeSHD050197

கொலஸ்டிரால், கொழுப்பு வகைகளைக் காவும் குறையடர்த்தி கொழுமியப்புரதம் மற்றும் உயரடர்த்தி கொழுமியப்புரதம் போன்றவைகளுக்கிடையே உள்ள சமநிலை குழம்புவதால் இக்கூட்டறிகுறி ஏற்படுகின்றது. குறையடர்த்தி கொழுமியப்புரதம் உயர்ந்த நிலையில் காணப்படுதல் இந்நோயை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. உயரடர்த்தி கொழுமியப்புரதம் கொலஸ்டிரால், கொழுப்பு வகைகளை குருதியில் இருந்து அகற்றுவது மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றது, பேச்சு வழக்கில் 'நல்ல கொழுப்பு' என்று குறிப்பிடப்படுவது இதனையே.

தமனி உட்புறத்தே ஏற்படும் வீக்கம் படிப்படியாகவே உருவாகின்றது. இந்நோயின் ஆரம்பகாலங்களில் நோய் அறிகுறி ஏதேனும் தென்படுவதில்லை, வீக்கத்தழும்பு பெரிதாகும் சந்தர்ப்பத்திலேயே நோய் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுகின்றன. இளம் வயதுக் காலங்களிலேயே இந்நோய் உருவாகலாம். இதற்கு மரபணு அல்லது புகைப்பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் காரணமாக அமையலாம்.

உடலில் பலபகுதிகளில் உள்ள தமனியில் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்படலாம். இதயத்தசைகளுக்குக் குருதியைக் காவும் முடியுருத்தமனிகளில் இது ஏற்படும்போது குருதி ஊட்டக்குறை இதய நோய் ஏற்படுகின்றது. இதயத்தசை இறப்பு, மார்பு நெருக்கு, திடீர் இதய இறப்பு என்பன இவற்றுள் அடங்கும். மூளைக்குக் குருதியை எடுத்துச் செல்லும் தமனியில் ஏற்படும்போது தற்காலிக பாரிசவாத தாக்குதல், பாரிசவாதம் என்பன ஏற்படலாம். காலுக்குக் குருதியை எடுத்துச் செல்லும் தமனியில் கூழ்மைத் தடிப்பு ஏற்படும்போது வலியால் நொண்டல், கால் அழுகல் என்பன ஏற்படலாம்.

உசாத்துணைகள்தொகு