தமிழர் அரசியல்
தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளை பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டு சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகப்பட்டது, வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.
என்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்டபோது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.[1] ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புபோராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.[2]
மலேசியத் தமிழர் அரசியல்
தொகு2008 மலேசியத் தேசியத் தேர்தல்
தொகுமலேசிய இந்தியர்களில் அனேகர் தமிழ் இந்துக்கள். இலங்கைத் தமிழ்ர்களும் கணிசமான அளவு வசிக்கின்றார்கள். மலேசியாவை 1973 ஆம் ஆண்டு தொடக்கம் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கட்சியின் தலைமையில் அமைந்த கூட்டணியே ஆட்சி செய்து வருகின்றது. இந்தக் கட்சியில் சாமி வேலு தலைமை தாங்கும் மலேசிய இந்தியர் காங்கிரசும் ஒரு கூட்டணிக் கட்சி. பாரிசான் நேசனல் மலேசிய நாட்டின் பெரும்பான்மையினரான மலாய மக்களுக்கு ஒரு பக்க சார்பாக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த வேற்றுமை 2007 ஆம் ஆண்டு முற்றி இந்தியர்கள் இந்து உரிமை நடவடிக்கைக் குழு (Hindu Rights Action Force) தலைமையில் எதிர்ப்புப் போராட்டம் செய்தார்கள். இந்தப் போராட்டம் இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவது, தமிழ்ப் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுவது, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்கப்படாமை போன்ற உரிமை மறுப்பு செயற்பாடுகளை எதிர்த்து அமைந்தது. கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியத் தேர்தலில் பெரும்பான்மை மலேசியத் தமிழர்கள் பாரிசான் நேசனலையும் அதன் கூட்டணிக் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசையும் புறக்கணித்து வாக்களித்துள்ளார்கள். நடந்த தேர்தலில் சாமி வேலு உட்பட பெரும்பாலான மலேசிய இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தோல்வியடைந்தார்கள். மாற்றாக எதிக்கட்சிகளான ஜனநாயக நடவடிக்கை கட்சி (Democratic Action Party) போன்ற கட்சிகளில் போட்டியிட்ட எதிர்ப்போராட்ட ஆதரவார்கள் பலர் வெற்றியடைந்தார்கள். இந்து உரிமை நடவடிக்கைக் குழு தலைவரும் வெற்றி அடைந்தார்.[3] ஜனநாயக நடவடிக்கை கட்சி சார்பில் போட்டியிட்ட அரசறிவியல் பேராசிரியரான பி. ராமசாமியும் வெற்றி பெற்றார். இவர் பினாங் மாநிலத்தின் இணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலமைப்பு நிர்வாகக் குழுவில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
மேற்குநாடுகள் தமிழர் அரசியல்
தொகுஈழப்பிரச்சினை காரணமாகவும், பொருளாதார நோக்கங்களுக்காவும் தமிழர்கள் ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடியமர்ந்தனர். மேற்குலகச் சிறுபான்மையினங்களில் ஒப்பீட்டளவில் தமிழர்கள் அரசியல் அக்கறை கொண்டவர்கள். அதனால், தமிழர்கள் மேற்குநாடுகளின் அரசியலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள். முதலில் உள்ளூராட்சி அரசியலில் ஈட்பட்டு, தமது அனுபவத்தையும், தொடர்புகளையும், நிலையையும் மேம்படுத்தி மேல்கட்ட அரசியல் தளங்களுக்குச் செல்வார்கள். இந்தச் செயற்பாட்டில் தமிழர்கள் மேல்நாடுகளின் மக்களாட்சி விழுமியங்களை உள்வாங்கிச் செயற்படுகிறார்கள்.
பிரான்சில் தமிழர் அரசியல்
தொகுபிரான்சின் தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 பாண்டிச்சேரித் தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பெருபான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒருங்கிணைந்து ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. .[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Protect Tamils in Malaysia, Karunanidhi urges PM. AOL Indo Asian News Service. November 27, 2007.[1]
- ↑ South African Indians oppose Indian Arms to Sri Lanka. தமிழ்நெற் Friday, 21 March 2008. [2]
- ↑ http://www.analyst-network.com/article.php?art_id=1837
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-03-29. பார்க்கப்பட்ட நாள் 2008-03-29.
- ↑ Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs. தமிழ்நெற் Tuesday, 18 March 2008. [3]