தமிழ்நெட்

(தமிழ்நெற் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நெட் (Tamilnet) என்பது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் ஒரு செய்தி இணையத் தளம் ஆகும். ஈழப்போர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத்தில் அமைந்த, வணிக நோக்கற்ற ஒரு இணைய செய்தி ஊடகமாகும். இது 1997, சூன் 7 இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், வெளியிடப்பட்ட செய்திகளை ஆண்டு, மாதம், திகதி வாரியாக ஆவணப்படுத்தி வருவது இத்தளத்தின் ஒரு தனிச்சிறப்பாகும்.

தமிழ்நெட்
தமிழ்நெட்
வலைத்தள வகைஇணையச் செய்தி ஊடகம்
தோற்றுவித்தவர்Muthuthamby Sreetharan
மகுட வாசகம்"Reporting to the world on Tamil Affairs"
வெளியீடு1997
தற்போதைய நிலைஇயங்குநிலையில்
உரலிwww.tamilnet.com


பத்திரிகையாளரின் படுகொலை

தொகு

2005 ஆம் ஆண்டில் தமிழ்நெட்டின் ஆசிரியரும் இலங்கையின் பிரபல இராணுவ ஆய்வாளரான தராக்கி சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

விமர்சனங்கள்

தொகு

இந்தத் தளம் இலங்கையின் இனமுரண்பாடு, மனிதவுரிமை மீறல்கள், அரச வன்முறைகள் போன்றவற்றை அறிய முனையும் உலகின் ஏனைய சமூகத்தவரிடையேயும், உலகெங்கும் உள்ள தமிழர்களிடையேயும் பிரசித்திப்பெற்ற தளமாக மாற்றம் பெற்றது. இந்தத் தளத்தில் வெளியிடப்படும் செய்திகள் அநேகமான செய்தி ஊடகங்கள் போன்று அழிக்கப்படாமல் திகதி வாரியாக ஆவணப்படுத்தப்படுவதால், காலம் கடந்த செய்திகளையும் உடனடியாக எவரும் எளிதாக பார்வையிடும் வசதியினையும் கொண்டிருப்பதால், புலம்பெயர்ந்து வாழ்வோரின் பல்வேறு கோரிக்கைகளின் போது இத்தளத்தின் செய்திகள் மேற்கோளாகக் காட்டப்படுவதால், இத்தளம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குப் பயன்மிக்கதாக அமைந்து வருகின்றது.

அதேவேளை இலங்கை அரசு இலங்கை ஊடக முடக்கத்தை ஏற்படுத்தி, ஊடகங்களை முடக்கி வேளையில், தமிழ்நெட் இணையத்தளம் இலங்கை அரசத் தரப்பினருக்கு பெறும் சவாலாக இருந்தது. இதனால் தமிழ்நெட் புலிகளின் சார்பான ஒரு தளமாக இலங்கை அரசால் சித்தரிக்கப்பட்டது.

தமிழ்நெட் தளத்தில் பிரதான ஆசிரியரான சிவராம், புலிகளின் எதிர் கொள்கைகளைக் கொண்ட புளொட் இயக்கத்தின் முன்னார் உறுப்பினராகவும், இலங்கையின் புகழ்பெற்ற செய்தியாளராக இருந்தும், அவரை ஒரு புலிகளின் ஆதரவாளராக இனங்காட்டிப் படுகொலையும் செய்யப்பட்டது. தற்போதும் தமிழ்நெட் தளம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், அத்தளத்தினைப் புலிகளின் சார்பு தளமாகவும், அதன் செய்திகள் பக்கசார்பு உடையதாகவும் குற்றம் சுமத்தி வருகிறது. அதன் இன்னொரு கட்டச் செயல்பாடாக இலங்கையில் தமிழ்நெட் தளத்திற்கான இணக்கமும் ஒரு காலகட்டத்தில் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நெட்டை இழிவு படுத்தும் செயல்பாடுகள்

தொகு

தமிழ்நெட் தளத்தினை இலங்கையில் உள்ளோர் பார்வையிடுவதற்கான அணுக்கம் மறுக்கப்பட்ட அதேவேளை, தமிழ்நெட் டிவி எனும் இணைய முகவரியில், மிகவும் இழிவான வகையிலும் ஆபாச படங்களையும் பயன்படுத்தி, தமிழ்நெட் தளத்தின் வடிவமைப்பையும், சின்னத்தினையும் பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தமிழ்நெட் டிவி எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் இழிவான செய்திகளை, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் தளங்களில் "தமிழ்நெட்" எனும் பெயரில் பின்னூட்டங்கள் இட்டும், இழிவான செய்திகளை வெளியிட்டும், தமிழ்நெட் தளத்தினை அவமானப்படுத்தும் முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலி தமிழ்நெட்

தொகு

இந்தப் போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், புலிகளை மட்டுமன்றி, பொதுவாகத் தமிழர்களை இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன் வெளியிட்டு வருகிறது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் போன்றவர்கள் பற்றி ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றது.

இலங்கையின் தடை

தொகு

இலங்கையில் இணைய சேவை வழங்குனரூடாகத் தமிழ் நெட் இணையத் தளம் 19 ஜூன், 2007 முதல் டிசம்பர் 29 2007 வரையிலான காலப் பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணுக்கம் மறுக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. இலங்கை தமிழ் நெட்டைத் தடைசெய்கின்றது (ஆங்கில மொழியில்) அணுகப்பட்டது ஜூன் 20, 2007

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நெட்&oldid=3215536" இலிருந்து மீள்விக்கப்பட்டது