தமிழ்நாடு அரசு தணிக்கை தலைமை இயக்குநர்

தமிழ்நாடு அரசு தணிக்கை தலைமை இயக்குநர் (Director General of Audit), தமிழ்நாடு அரசின் நிதித்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு தணிக்கைத் துறை, பால் கூட்டுறவு தணிக்கை, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை (Local Fund Audit), இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனங்களின் தணிககைத் துறை உள்ளிட்ட ஐந்து தணிக்கை இயக்குனரகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட தணிக்கை தலைமை இயக்குநர் பதவியிடம் உருவாக்க 9 ஏப்ரல் 2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

தணிக்கை இயக்குனரகங்கள் மீது தணிக்கை தலைமை இயக்குநர் பொது மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை செயல்படுத்தும். பணியிடங்கள், இடமாற்றங்கள், நிறுவன விவகாரங்கள் மற்றும் வரவு-செலவு திட்டம் மற்றும் சட்டசபை தொடர்பான விஷயங்கள் குறித்த அனைத்து திட்டங்களும் தணிக்கை தலைமை இயக்குரர் மூலம் நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு முறை

தொகு

தணிக்கை தலைமை இயக்கநராக, தமிழ்நாடு தொகுப்பைச் சேர்ந்த தலைமை கணக்கு தணிக்கையாளரையோ, அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை தணிக்கையில் அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பக்கவாட்டு நுழைவு முறை மூலமோ நியமிக்கலாம்.[1]

அதிகாரங்கள்

தொகு

தணிக்கை தலைமை இயக்குநர் தனது தணிக்கை அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்தவொரு நிறுவனத்தையும் சிறப்பு தணிக்கை செய்ய ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. தனது கட்டுபாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு தணிக்கைத் துறை உள்ளிட்ட ஐந்து தணிக்கை இயக்குநர்கள் தமது பணியாளர்கள் குறித்த தகவல்களை தணிக்கை தலைமை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.

தணிக்கை அறிக்கைகளை அங்கீகரிக்கும் அதிகாரம், தொடர்ந்து உரிய 5 தணிக்கைத் துறை இயக்குநர்களிடமே இருக்கும். இருப்பினும் தணிக்கை அறிக்கைகளை மறுஆய்வு செய்யும் அதிகாரம் தணிக்கை தலைமை இயக்குநருக்கு இருக்கும். தணிக்கை தலைமை இயக்குநர் உத்தரவின் கீழ் சிறப்புத் தணிக்கை, நிதித் தணிக்கை, பரிவர்த்தனை தணிக்கை அல்லது செயல்திறன் தணிக்கை செய்யலாம்.

எந்தவொரு நிறுவனத்தையும் சிறப்புத் தணிக்கை செய்ய தனியார் தணிக்கை நிறுவனத்தை நியமிக்கும் அதிகாரம் தணிக்கை தலைமை இயக்குநருக்கு உள்ளது.

விமர்சனங்கள்

தொகு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஓ பன்னீர்செல்வம், தணிக்கை தலைமை இயக்குநர் நியமனம் குறித்த அரசாணையானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், தமிழ்நாடு அரசில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும், மற்ற அரசு அதிகாரிகளையும் அவமதிக்கும் செயல்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.[2] மேலும் நான்காண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின், பக்கவாட்டு நுழைவு முறை மூலம் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலர்களை நியமிக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்ததை நினைவு கூர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு