தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம்

தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் என்பது தமிழ்நாட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருபவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட வாரியமாகும். இந்த அமைப்பில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 12 அரசு அதிகாரிகளும், அலுவல் சாராத உறுப்பினர்களாக 13 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர். இந்த அமைப்பிற்கு தூய்மைப் பணிபுரிவோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்படும். தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இந்த வாரியத்தின் மூலம் தூய்மைப் பணிபுரிவோருக்கான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படும். 2023 மார்ச் மாதம் வரை சுமார் 14,000 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.[1]

தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம்
வகைதமிழ்நாடு அரசு
நிறுவுகை2007[1]
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்என். கயல்விழி செல்வராஜ் (தலைவர்)
தொழில்துறைசமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு

வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

தொகு
  1. விபத்துக் காப்பீட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் மூலம் விபத்தால் இறப்பவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சமும், விபத்தால் ஊனமுற்றவர்களுக்கு ரூ 10,000 முதல் ரூபாய் ஒரு இலட்சம் வரையும் நலத்திட்ட உதவி அளிக்கப் பெறும்.
  2. இறப்பு உதவித் தொகை - இயற்கையாய் மரணமடைந்தவருக்கு ரூபாய் 15,000 வழங்கப்படும்.
  3. இறுதிச் சங்கு உதவித் தொகை - இறந்தவரின் இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக ரூபார் 2,000 வழங்கப்படும்.
  4. கல்வி உதவித் தொகை - இத்திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் ஆயிரம், 11 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம், 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, முறையான பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு,இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 1,750,முறையான பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 2,000,இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 3,000, தொழில்நுட்பப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 2,000, இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 4,000, தொழில்நுட்ப மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 4,000, இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 6,000, தொழிற்பயிற்சி நிலையம்/பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) படிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரம், இவர்கள் விடுதியில் தங்கிப்படித்தால் ரூபாய் 1200 கல்வி உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.
  5. திருமண உதவித் தொகை - திருமணம் செய்து கொள்பவருக்கு உதவித் தொகையாக ரூபாய் 2,000 அளிக்கப்படும்
  6. மகப்பேறு உதவித் தொகை - மகப்பேறு உதவித் தொகையாக ஆறாம் மாதத்திலிருந்து மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ரூபாய் 6, 000 வரை அளிக்கப்படும். கருச்சிதைவு, கருக் கலைப்பு போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூபாய் 3,000 அளிக்கப்படும்.
  7. கண் கண்ணாடி உதவித் தொகை - பழைய கண் கண்ணாடி மாற்றிக் கொள்வதற்கும், புதிய கண் கணாடி வாங்கிக் கொள்ளவும் செலவுத் தொகையாக ரூபாய் 500 வரை அளிக்கப்படும்.
  8. ஓய்வூதியம் - முதியோர் ஓய்வூதியமாக ரூபாய் 500 அளிக்கப்படும்.

நலத் திட்ட உதவிகளுக்கான அலுவலர்

தொகு

இந்த வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மாவட்ட மேலாளர் மூலம் அளிக்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு