தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை

தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ விதிக்கப்பட்ட தடையாகும். ஏற்கனவே சில வழிகாட்டல்களும், வட்டார அளவில் தடைகள் இருந்தாலும் மாநில அளவில் தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்கள் மீதான தடையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது.[1][2] தடை ஆணையை எதிர்த்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் முறையீடு செய்ததை உயர்நீதி மன்றம் விசாரித்து வருகிறது.[3][4]

பின்னணி

தொகு

முந்தைய தடைகள்

தொகு

2016 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியின்படி மாநிலத்தில் 50 மைக்ரான் அளவிற்கும் குறைவாக பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கக்கூடாது என்றும் உரிய மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழுடனும் தயாரிக்க வேண்டும் என்றும் வழிகாட்டல்கள் இருந்தன.[5] நீலகிரி மாவட்டத்தில் 20 மைக்ரான் அளவிற்குக் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் மீது ஏற்கனவே தடை உள்ளது. மேலும் 2018 ஜனவரி 15 ஆம் நாள் முதல் கூடுதலாக 12 வகை பிளாஸ்டிக் பொருட்களைத் நீலகிரி ஆட்சித்தலைவர் தடை செய்தார் [6][7]

மாநில அளவிலான தடை

தொகு

தூக்கி எறியக்கூடிய, மக்காத நெகிழிப் பொருட்கள் மீதான மாநில அளவிலான தடையை உலக சுற்றுச்சூழல் நாளான 5 சூன் 2018 அன்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட சிறப்பு வல்லுனர் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்தத் தடை நடைமுறைக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 இன் கீழ் தமிழகம் முழுவதும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தடை உடனடியாக நடைமுறைக்கு வராமல், 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிக்கை தெரிவித்தது.[8]

2018 ஜூலை 2 ஆம் நாள் முதல் மதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டன.[9]

2019 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த தடை

தொகு

தடையின் கூறுகள்

தொகு

தடை செய்யப்பட்ட பொருட்களாக - உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் நெகிழி ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள், நெகிழியாலான தெர்மாகோல் தட்டுகள், நெகிழி முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி முலாம் பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி குவளைகள், தெர்மாகோல் குவளைகள், நெகிழிப் பைகள், தண்ணீர் பொட்டலங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெகிழி உறைகள், நெகிழி உறிஞ்சு குழாய்கள், நெகிழி முலாம் பூசப்பட்ட பைகள், நெகிழியால் செய்யப்பட்ட கொடிகள், நெய்யப்படாத பாலிபுரோபைலைன் பைகள் ஆகியன அறிவிக்கப்பட்டன.

வாழை இலை, பாக்குமர இலை, தாமரை இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், 'துணி, காகிதம், சணல்' ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகள், மூங்கில் மற்றும் மரப்பொருட்கள், 'கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள்', பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் ஆகியவை மாற்றுப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன.

நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பதாகைகள், நெகிழிப் பலகைகள், நெகிழியால் செய்யப்பட்ட சிறு கரண்டிகள், மளிகைச் சாமான்களை பொட்டலமிடல், நெகிழியால் செய்யப்பட்டுள்ள கொள்கலன்கள், அலுவலகப் பொருட்கள் ஆகியனவற்றிற்கு தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டது. மேலும் பால் பாக்கெட்டுகள், எண்ணெய், மருந்துப்பொருள்கள் போன்றவற்றுக்கும் தயாரிப்பு களத்திலேயே நெகிழிப் பையுடன் வரும் பொருட்களுக்கும் விலக்கு அளித்துள்ளது.

அரசின் செயலாக்கம்

தொகு

தடையை செயல்படுத்துவதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மூவர் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தடையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தமிழக அரசு அறிவித்தது.[10]

தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருட்கள் எதையும் உற்பத்தி செய்யக் கூடாது என சுமார் 1,400 தொழிற்கூடங்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு ஆணையை அனுப்பியது.[1] தடையைக் கண்காணிக்க தமிழகம் முழுவதும் 50,000 நபர்களுடன் 5 ஊழியர் வீதம் 1000 தனிப்படை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.[11] மேலும் பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழகம் என்ற தலைப்பில் மாநிலம் முழுக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாகப் பிரச்சாரம் நடைபெறுகிறது.[12]

ஆதரவுகள்

தொகு

சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் இத்தடையை வரவேற்கின்றன.[13] சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத காகிதப் பொருள்கள், எளிதில் மக்கும் ஸ்டார்ச் கொண்டு தயாரிக்கும் பொருள்கள் போன்றவற்றை உபயோகித்து உணவுப் பொருட்களை விநியோகம் செய்யவுள்ளதாகப் பெருநிறுவனங்கள் ஆதரிக்கின்றன.[14]

எதிர்ப்புகள்

தொகு

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக, தடை நீக்கக்கோரி சென்னையில் பேரணி நடந்தது.[15] இத்தடையைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் 7 மாதம் அவகாசம் கொடுக்கவும் கோரி நெகிழிப் பை வணிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டது.[16] நெகிழித் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.[17]

இந்தத் தடையின் காரணமாக, தமிழ்நாட்டில் சுமார் 2 இலட்சம் பேர் நேரடியாகவும் சுமார் 3 இலட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள் என தமிழ்நாடு நெகிழித் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.[18][19] ஏறத்தாழ 5,000 தொழிற்சாலைகள் மூடப்படும் சூழ்நிலை இருப்பதால், சுமார் 3,000 கோடி ரூபாய்கள் மதிப்பிலான இயந்திரங்களும் உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் வீணாகும். ஜி. எஸ். டி. வரிகள் மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,800 கோடி ரூபாய்கள் வருமானம் இதனால் பாதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு நெகிழித் தயாரிப்பாளர்கள் சங்கம் கணித்தது.[20]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "State all set to enforce plastic ban from today". தி இந்து (ஆங்கிலம்). 1 சனவரி 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/state-all-set-to-enforce-plastic-ban-from-today/article25875407.ece. பார்த்த நாள்: 1 சனவரி 2019. 
  2. "பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல்: ஓலைப் பெட்டி, துணிப் பைகளுக்கு மாறிய நெல்லை வியாபாரிகள்". இந்து தமிழ் திசை. 31 டிசம்பர் 2018. https://tamil.thehindu.com/tamilnadu/article25873260.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers. பார்த்த நாள்: 1 சனவரி 2019. 
  3. "பிளாஸ்டிக்: தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு". புதிய தலைமுறை. http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55817-high-court-refuses-to-ban-tamilnadu-govt-order-on-plastic-ban.html. பார்த்த நாள்: 11 January 2019. 
  4. "Plastic ban: Madras high court says authorities can seize on .. Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/67467418.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". timesofindia. https://timesofindia.indiatimes.com/city/chennai/plastic-ban-madras-high-court-says-authorities-can-seize-only-14-items-listed-in-government-order/articleshow/67467418.cms. பார்த்த நாள்: 11 January 2019. 
  5. "Managment of Plastic Waste". தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம். பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  6. "Nilgiris bans 12 more types of plastic items, rule takes effect from January 15". deccanchronicle.com. https://www.deccanchronicle.com/nation/in-other-news/271117/nilgiris-bans-12-more-types-of-plastic-items-rule-takes-effect-from-january-15.html. பார்த்த நாள்: 11 January 2019. 
  7. "ஊட்டி காமராஜர் அணை பகுதியில் "பிளாஸ்டிக்' : சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=503469. பார்த்த நாள்: 11 January 2019. 
  8. "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு". பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு. 5 சூன் 2018. http://www.plasticpollutionfreetn.org/pdf/110%20ANNOUNCEMENT.pdf. பார்த்த நாள்: 1 சனவரி 2019. 
  9. "மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: ஆட்சியர் உத்தரவு". சமயம் (டைம்ஸ் ஆப் இந்தியா). https://tamil.samayam.com/latest-news/state-news/plastics-ban-in-madurai-from-july-2/articleshow/64798412.cms. பார்த்த நாள்: 11 January 2019. 
  10. "தமிழ்நாடு: பிளாஸ்டிக் தடை - சாத்தியங்களும் சவால்களும்". பிபிசி தமிழோசை. 1 அக்டோபர் 2018. https://www.bbc.com/tamil/india-45684570. பார்த்த நாள்: 14 சனவரி 2019. 
  11. "பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10,000 தனிப்படை". தினகரன். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=461198. பார்த்த நாள்: 11 January 2019. 
  12. "பிளாஸ்டிக் தடைக்கு மேலும் காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3-3067172.html. பார்த்த நாள்: 11 January 2019. 
  13. "வாழ்வாதாரத்தை மீட்க போராடும் விவசாயிகள்- தொண்டாமுத்தூரில் இன்று மாநாடு". காமதேனு. https://www.kamadenu.in/news/special-articles/13333-farmers-summit-3.html. பார்த்த நாள்: 11 January 2019. 
  14. "2019-ல் பிளாஸ்டிக் தடை... என்ன செய்யவிருக்கின்றன ஃபுட் டெலிவரி ஆப்ஸ்?". விகடன். https://www.vikatan.com/news/miscellaneous/145651-food-delivery-apps-preparing-to-tackle-tamilnadu-plastic-ban.html. பார்த்த நாள்: 11 January 2019. 
  15. "சென்னையில் 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பேரணி: பிளாஸ்டிக் தடையை நீக்கக் கோரிக்கை". தினகரன். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=464568. பார்த்த நாள்: 11 January 2019. 
  16. "பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/03043202/Resistance-to-Plastic-ProhibitionMerchants-are-indefinite.vpf. பார்த்த நாள்: 11 January 2019. 
  17. "பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்". மாலைமலர். https://www.maalaimalar.com/News/District/2018/12/17101818/1218443/Mutharasan-request-tamilnadu-govt-for-plastic-ban.vpf. பார்த்த நாள்: 11 January 2019. 
  18. "பிளாஸ்டிக் தடை வந்தால் பல லட்சம் தமிழக தொழிலாளர்கள் வாழ்க்கை என்னவாகும்?". பிபிசி தமிழோசை. 21 டிசம்பர் 2018. https://www.bbc.com/tamil/india-46636382. பார்த்த நாள்: 14 சனவரி 2019. 
  19. "Over 2 lakh stand to lose jobs as we move towards a plastics-free Tamil Nadu". தி இந்து (ஆங்கிலம்). 4 டிசம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/towards-a-plastics-free-tamil-nadu/article25650261.ece. பார்த்த நாள்: 1 சனவரி 2019. 
  20. "Tamil Nadu starts the new year with positive response to plastic ban". பிசினஸ் ஸ்டாண்டர்டு. 1 சனவரி 2019. https://www.business-standard.com/article/economy-policy/tamil-nadu-starts-the-new-year-with-positive-response-for-plastic-ban-119010100214_1.html. பார்த்த நாள்: 14 சனவரி 2019. 

வெளியிணைப்புகள்

தொகு