தமிழ் அகரமுதலி

அகரவரிசைப்படி சொற்களுக்கு விளக்கம் அளிக்கும் தமிழ் நூல்.
(தமிழ் அகராதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகரமுதலி அல்லது அகராதி என்பது அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் விவரங்களைத் தரும் நூல் தமிழ் அகராதி ஆகும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). அகராதி அகரமுதலி எனவும் வழங்கப்படும்.

1909ல் வெளியிடப்பட்ட அகரமுதலியினுடைய, முதல் தாளின் இருபக்கங்கள்.

இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.

வரலாறு தொகு

தமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன.

16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே அகராதி என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும் 1824ஆம் ஆண்டில்தான் சதுரகராதி முழுவது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பகுதியை 1819இல் எல்லிஸ் என்பவர் அச்சில் வழங்க முனைந்தார். திருச்சிற்றம்பல ஐயர் என்பவர் இதனைச் சீர்திருத்தி உதவினார். கி.பி. 1824இல்தான் சதுரகராதி முழுவதும் சென்னையிலிருந்த கல்லூரியின் இயக்குநர் ரிச்சர்டு கிளார்க்கின் ஆணைப்படி அச்சேறி வெளியாயிற்று. தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திர கவிராயரும் அப்போது அதனை மேற்பார்வையிட்டனர். பிற பதிப்புகள் 1835, 1860, 1928, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின [1][2].

பட்டியல் தொகு

மின்னகராதி தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி, சென்னைப் பல்கலைக்கழகம், 2003.
  2. முனைவர் மறைத்திரு ச. இராசமாணிக்கம், சே.ச., வீரமாமுனிவர்: தொண்டும் புலமையும், இலயோலாக் கல்லூரி, சென்னை, 1998 (இரண்டாம் பதிப்பு).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_அகரமுதலி&oldid=3813519" இலிருந்து மீள்விக்கப்பட்டது