தம்பு சிவசுப்பிரமணியம்

தம்பு சிவசுப்பிரமணியம் (பிறப்பு: பெப்ரவரி 24, 1944) ஈழத்து எழுத்தாளர். தம்பு சிவா என்ற பெயரிலும் இணுவையூர் தொண்டு, தேடலோன், இணுவை வசந்தன், இணுவிலிமாறன், சிவநித்திலன், த. சிவா, சிவ சிவா போன்ற பல்வேறு புனைபெயர்களில் பல்துறை இலக்கிய ஆக்கங்களைப் படைத்தவர்.

தம்பு சிவசுப்பிரமணியம்
பிறப்புபெப்ரவரி 24, 1944
இணுவில்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்தம்பு/ தையல்நாயகி

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

தம்பு சிவா யாழ்ப்பாணத்தில் இணுவில் என்ற ஊரில் தம்பு, தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாசன வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். இவர், மாணவனாக இருந்த காலத்திலேயே பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார்.

அரசுப் பணி தொகு

1965 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் எழுத்தராக நியமனம் பெற்ற இவர், 1975 இல் இறைவரி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று 1985 இல் ஓய்வு பெற்றார். 1987 முதல் 1989 வரை மாலைதீவில் மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராகப் பணியாற்றினார். பின்னர் இவர் இலங்கை வடக்குக் கிழக்கு மாகாண சபையில் பதிப்பகத் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு கடமையாற்றிய காலத்தில், இத்திணைக்கள வெளியீடான "தமிழ்த்தெனறல்" என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர், இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.

எழுத்துலகில் தொகு

1973 இல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். "ஈழமணி", "ஞானம்", "காப்புறுதி உலகம்", "சுடர் ஒளி" போன்ற வெளியீடுகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. 80 சிறுகதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி, தினகரன், தினக்குரல், சுடர்ஒளி, உதயன், ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், இனிய நந்தவனம், செங்கதிர், ஜீவநதி, இந்து ஒளி, ஒலை, பூங்காவனம் போன்ற இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ‘அரும்பு’, ‘கற்பகம்’, ‘அர்ச்சுனா’, ‘தமிழ்த்தென்றல்’, ‘ஓலை’ போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுதிய நூல்கள் தொகு

  • சொந்தங்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  • முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் (கட்டுரைத் தொகுப்பு)
  • முதுசம் (சிறுகதைத் தொகுப்பு, 2012)

தொகுத்து வெளியிட்ட நூல்கள் தொகு

  • காலத்தால் மறையாத கற்பகம் இதழ் சிறுகதைகள்’ (சிறுகதைத் தொகுதி)
  • தூரத்துக்கோடை இடிகள் (சிறுகதைத் தொகுதி)
  • அப்பா (சிறுகதைத் தொகுதி)

விருதுகளும் பட்டங்களும் தொகு

  • கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற, சிலப்பதிகார முத்தமிழ்க் காப்பிய பெருவிழாவில் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவு நம்பி அவர்களால் ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • ஆக்க இலக்கியத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது (2010)

மேற்கோள்கள் தொகு

தளத்தில்
தம்பு சிவசுப்பிரமணியம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பு_சிவசுப்பிரமணியம்&oldid=3378148" இலிருந்து மீள்விக்கப்பட்டது