தாமப்பல்கண்ணனார்
தாமப்பல் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது புறநானூறு 43 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. அப்பாடலில் இவர் தன்னை ஒரு பார்ப்பனன் என்று கூறிக்கொள்கிறார். [1]
இப் புலவர் சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்பவனோடு வட்டு ஆடினார்.
புலவர் வட்டாட்டத்தில் நகர்த்தும் காய்களைக் கையில் மறைத்து மாவளத்தானை ஏமாற்றினார். அதனைப் பார்த்துவிட்ட மாவளத்தான் தான் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காயால் புலவரை அடித்தான்.
அடிபட்ட புலவர் வக்கணையாகப் பேசினார். சோழர் குடியின் பெருமையைப் பேசினார். சோழர் குடிப் பிறந்த இவனது முன்னோர் பார்ப்பார் நோவன செய்யார். நீ பார்ப்பானாகிய என்னை நோவச் செய்துள்ளாய் என்றார். அது கேட்ட மாவளத்தான் தன் குடியின் பெருமையை எண்ணித், தான் செய்தது இழிசெயல் எனக் கருதி நாணி நின்றான்.
புலவர் 'பிழை செய்தது நான். நீ பிழை செய்தது போல நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளுதல் உன் குடியில் பிறந்தவர்களுக்கு எளிது போலும்' என்று சொல்லி மாவளத்தானைப் பாராட்டினார்.[2]
சோழன் சிபி வரலாறு
தொகுபறந்த பருந்தின் பற்று நகம் பட்டுத் தப்பிய புறா சோழன் சிபியின் மடியில் விழுந்தது. புறாவையும் காப்பாறவேண்டும், பருந்துக்கும் இரை தரவேண்டும் எனக் கருதிய மன்னன் புறாவின் எடைக்குச் சமமாகத் தன்னையே நிறுத்துக் கழுகுக்குக் கொடுத்தான். சோழனின் முன்னோர் இத்தகைய அருள் உள்ளம் கொண்டவர் என்று புலவர் கூறினார்.[3]
அவிர்சடை முனிவர்
தொகு- அவிர் சடை முனிவர் என்னும் தொடர் ஞாயிற்றையும், தவ முனிவர்களையும் குறிக்கும் வகையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகில் வாழ்பவர்களின் துன்பம் நீங்க முனிவர்கள் தவம் மேற்கொண்டனர். காற்றையே உணவாக உண்டு அவர்கள் வெயிலில் உலவுவர். (ஞாயிறு உலகின் நலனுக்காக காற்று உணவு தந்து, வெயிலாகச் சுழல்கிறது). சிபியின் செயல் கண்டு முனிவர்களும் | ஞாயிறும் வியந்தனவாம்.[4]
நலங்கிள்ளி நலன்கள்
தொகு- மாவளத்தானின் அண்ணன் நலங்கிள்ளி பகைவர் பலரை வென்றவன். பரிசில்களைத் தேரில் ஏற்றித் தந்தவன்.[5]
அடிக்குறிப்பு
தொகு- ↑ தாமப்பல் கண்ணனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑
ஆர்புனைத் தெரியல் நின் முன்னோர்
பார்ப்பார் நோவன செய்யார், மற்று இது
நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் - புறநானூறு 43 - ↑
'கூர் உகிர்ப் பருந்தின் எறு குறித்து ஒரீஇத்,
தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
தபுதி அஞ்சிச் சீரை புக்க,
வரையா ஈகை உரவோன்' - ↑
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர
தெருகதிர்க் கனலி வெம்மை தாங்கி
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர் சடை முனிவரும் மருள - ↑
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
தேர் வண் கிள்ளி