தாய்லாந்துப் பெருவூஞ்சல்
தாய்லாந்துப் பேரூஞ்சல் (Giant swing, தாய்: เสาชิงช้า, சவோ சிங் ச்சா பேரூஞ்சல்) என்பது, தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள, பழமையான ஊஞ்சல் கட்டமைப்பாகும். அண்ணளவாக அறுபது அடி உயரமான இவ்வூஞ்சல், சுற்றுலாப் பயணிகளை பாங்கொக்கு ஈர்க்கும் முக்கியமான உல்லாசத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. தமிழர் - தாய்லாந்தாரின் மறக்கப்பட்ட தொடர்பைச் சுட்டிக்காட்டும் திரியம்பாவை பெருவிழாவின் "ஊஞ்சற்திருவிழா" கொண்டாடப்பட்ட இடமாக இது விளங்கியது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
வரலாறு
தொகுமன்னர் முதலாம் இராமர் காலத்தில், கி.பி 1784இல் "தேவசாதன்" என்றழைக்கப்படும் இந்துக் கோயிலுக்கு முன்புறமாக, இவ்வூஞ்சல் அமைக்கப்பட்டது.[1] இரண்டாம் இராமர் காலத்தில், மின்னற் தாக்கத்தால் ஊஞ்சல் சேதமடைந்ததால், ஊஞ்சல் திருவிழா நிறுத்தப்பட்டதுடன், 1920இல், எரிபொருள் நிலையமொன்றுக்கு இடந்தரும் வகையில் அங்கிருந்து அகற்றப்பட்டு இன்றைய இடத்துக்கு மாற்றப்பட்டு, ஊஞ்சல் திருவிழா தொடர்ந்து இடம்பெற்றது. எனினும் 1935இன் பின், ஊஞ்சலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பெரும்சேதம் காரணமாக, ஊஞ்சல் திருவிழா முற்றாக நிறுத்தப்பட்டது.[2]
பின்னர் 1959இல் இவ்வூஞ்சலில் சிறுதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், மரத்தூண்களில் ஏற்பட்ட விரிசலை அடுத்து, 2005 ஏப்ரல் முதல் 2006 டிசம்பர் வரை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2007 ஒக்டோபரில், தாய்லாந்து அரசர் பூமிபோல் ஆதுல்யதேஜால் (ஒன்பதாம் இராமர்), மீளத் திறந்துவைக்கப்பட்டது.[3] பழைய ஊஞ்சலின் பாகங்கள், தாய்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
திரியம்பாவை ஊஞ்சல் திருவிழா
தொகுதமிழரின் திருவெம்பாவையை ஒத்த "திரியம்பாவை" எனும் விழா, தாய்லாந்தில் சுகோதை இராச்சியத்தின் காலத்திலிருந்தே (கிபி 1238 - 1438) வெகுவிமரிசையாக இடம்பெற்று வந்திருக்கின்றன என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.[4] தாய் நாட்காட்டியின் முதல் மாத வளர்பிறையின் ஏழாம் நாளிலிருந்து, சிவபெருமான் திருக்கயிலையிலிருந்து பூமிக்கு எழுந்தருள்வதாகக் கொண்டு, பத்து நாட்கள் திரியம்பாவை கொண்டாடப்பட்டது. [5] இதையடுத்த ஐந்து நாட்கள் திருமாலுக்கும் விழாவெடுக்கப்பட்டது. இந்நாட்களில் சமயக் கிரியைகளை ஆற்றி, தாய்நாட்டுப் பிராமணர்கள் சிவனை வழிபட்டதுடன், திருவெம்பாவை இருபது பாடல்களையும் பாடி வந்திருக்கின்றனர். சுகோதை, அயூத்தயா போன்ற இடங்களிலிருந்த இந்துக் கோயில்களில் இத்திரியம்பாவை இடம்பெற்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.சிவனை மகிழ்விக்க, இந்நாட்களில் ஊஞ்சல் திருவிழா இடம்பெறுவது வழக்கமாக மாறியது. [6]
ஊஞ்சல் திருவிழாவில் அரசகுடும்பத்தினர் கலந்துகொள்வது வழக்கமாக இருந்ததுடன், அது, தாய்லாந்தின் பன்னிரெண்டு அரச விழாக்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் பார்க்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Gregory Byrne Bracken (2011) "A Walking Tour Bangkok: Sketches of the city’s architectural treasures" P.100
- ↑ Gregory Byrne Bracken (2011) "A Walking Tour Bangkok: Sketches of the city’s architectural treasures" P.100
- ↑ Justin Thomas McDaniel (2013) "The Lovelorn Ghost and the Magical Monk: Practicing Buddhism in Modern Thailand" pp.133,134
- ↑ Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 3 (1985) p.73
- ↑ Pranee Liamputtong (2014) "Contemporary Socio-Cultural and Political Perspectives in Thailand" P.43
- ↑ Pannipa Kaveetanathum, (1995) "A comparative study of Tiruvempavai: Tradition in Thailand and Tamil Nadu in Historical and musical contexts" pp. 66-82
வெளி இணைப்புகள்
தொகு- பாங்கொக் சுற்றுலாப் பிரிவின் தகவல் பரணிடப்பட்டது 2013-03-27 at the வந்தவழி இயந்திரம்