திகில் புனைவு

திகில் புனைவு (Horror Fiction) ஒரு வகை இலக்கிய பாணி. வாசகரின் உள்ளத்தில் பயத்தையும், திகிலையும் உருவாக்கும் நோக்குடன் எழுதப்படும் புனைவுகள் திகில் புனைவுகள் எனப்படுகின்றன. இவ்வகைப் படைப்புகள் மரணம், தீய சக்திகள், பேய்கள், பயங்கர மிருகங்கள், தொடர் கொலைகாரர்கள், அமானுட விஷயங்கள், மந்திரவாதிகள், காட்டேறிகள், போன்றவற்றை மைய கருப்பொருட்களாக கொண்டுள்ளன. திகில் புனைவு படைப்புகளில் திகிலை உண்டாக்கும் பொருள் அமானுடப் பொருளாகவும் (பேய், மந்திரவாதி) இருக்கலாம் அல்லது சாதாரண பொருளாகவும் (கொடிய விலங்கு, கொலைகாரர்கள்) இருக்கலாம்.

ஒரு பிராங்கன்ஸ்டைன் படக்கதையின் அட்டைப்படம்

பழங்காலத்து நாட்டார் கதைகளை அமானுட திகில் புனைவுகளாகக் கருதலாம். ஆனால் எழுத்துவடிவில் திகில் புனைவுகள் உருவானது 17ம் நூற்றாண்டில் தான். அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட காத்திக் திகில் கதைகள் நவீன திகில் புனைவின் முதல் வடிவங்களாயின. 18ம் நூற்றாண்டில் திகில் கதைகள் பிரபலமாகின. மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன், எட்கர் ஆலன் போவின் படைப்புகள் இந்த நூற்றாண்டின் முறபகுதியில் திகில் கதைகளை இலக்கிய உலகின் மைய நீரோட்டத்துக்கு கொண்டு செல்லத் தொடங்கின. இவை தொடங்கிய பணியை பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா, ராபர்ட் லூயில் ஸ்டீபன்சனின் டாக்டர் ஜெக்கிலும் மிஸ்டர் ஹைடும், ஆஸ்கார் வைல்டின் தி பிக்சர் ஆஃப் டோரியன் கிரே போன்ற படைப்புகள் பூர்த்தி செய்தன. 20ம் நூற்றாண்டில் திகில் புனைவுகளுக்கு வாசகர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. ஹெச். பி. லவ்கிராஃப்ட், ரே பிராட்பரி, ஸ்டீபன் கிங், டீன் கூண்ட்ஸ் போன்றோர் இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க திகில் புனைவு எழுத்தாளர்கள். திகில் புனைவுகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டு திரைப்படங்களிலும் “திகில் திரைப்படங்கள்” என்றொரு பாணி உருவாகியுள்ளது. இவற்றைத் தவிர படக்கதைகள், நிகழ்பட ஆட்டங்கள், படப்புதினங்கள், மங்கா போன்ற துறைகளிலும் திகில் புனைவுகள் படைக்கப்படுகின்றன.

தமிழ் எழுத்துலகில் இந்திரா செளந்தரராஜன், பி. டி. சாமி ஆகியோர் திகில் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். புதுமைப்பித்தனின் சில கதைகளிலும் (எ. கா. காஞ்சனை) திகில் புனைவின் கூறுகள் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திகில்_புனைவு&oldid=3216052" இலிருந்து மீள்விக்கப்பட்டது