தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன் ஆவான். [1]

தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள மலைக்கோட்டை, பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்) [2]

காவிரியில் நீர் விளையாட்டு

தித்தன் ஆட்சிக் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெறும். [3]

தித்தன் மகன் தித்தன் வெளியன்

இவன் மகன் வெளியன். இக்காலத்தில் தந்தை பெயரை முதலில் வைத்து நாம் நம் பயர்களைக் குறிப்பிடுவது போல இவன் பெயரும் தித்தன் வெளியன் எனக் குறிப்பிடப்படுகிறது. தித்தன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்த காலத்தில் அவன் மகன் தித்தன் வெளியன் கானலம்பெருந்துறை எனப்படும் புகார் நகரத்தில் இருந்துகொண்டு மரக்கல ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளைக் கவனித்து வந்தான். [4]

தித்தன் மகள்

தித்தனின் மகள் ஐயை [5]

தித்தன் மகன் போர்வைக்கோ

போர்வைக் கோப்பெருநற்கிள்ளியையும் தித்தனின் மகன் என அறிஞர்கள் காண்கின்றனர். போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு போரிடுவதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தித்தன் காண்பானாக எனப் புலவர் சாத்தந்தையார் குறிப்பிடுகிறார். [6] போர் எனப்பட்ட இக்காலப் பேட்டைவாத்தலையில் இருந்துகொண்டு ஆண்ட இவனைத் தித்தன் விரும்பவில்லை என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

கட்டி ஓடியது

தந்தை தித்தனுக்குப் பின்னர் அவன் மகன் தித்தன் வெளியன் ஆட்சிக்காலத்தில் கட்டி என்பவன் உறையூரைத் தாக்கப் படையுடன் வந்திருந்து ஊருக்கு வெளியே திருட்டுத்தனமாகத் தங்கியிருந்தான். அப்போது வழக்கம்போல் காலையில் உறையூர் நாளவையில் முரசு முழங்கிற்று. அதனைக் கேட்ட கட்டி தித்தன் தான் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு போர்முரசு கொட்டுகிறான் என்று எண்ணிப் பயந்து போரிடாமலேயே ஓடிவிட்டான். [7]

ஒப்பிட்டுக்கொள்க

வீரைவேண்மான் வெளியன் தித்தன்

அடிக்குறிப்பு தொகு

  1. பரணர் பாடல் - புறம் 352, நக்கீரர் பாடல் - புறம் 395
  2. பரணர் பாடல் - அகம் 122
  3. பரணர் பாடல் – அகம் 6
  4. தித்தன் வெளியன் இரங்குநீர்ப் பரப்பின் கானலம்பெருந்துறை (புகார்) தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன (பிண்டன் தாக்கினான்) பரணர் பாடல் - அகம் 152
  5. ஐயை தந்தை மழைவளம் தரூஉம் மாவண் தித்தன் உறந்தையில் காவிரியில் நீராட்டுவிழா - பரணர் பாடல் - அகம் 6
  6. புறம் 80
  7. பரணர் பாடல் அகம் 226
"https://ta.wikipedia.org/w/index.php?title=தித்தன்&oldid=3707320" இலிருந்து மீள்விக்கப்பட்டது