திரித்துவம் இல்லாக் கொள்கை (கிறித்தவம்)
திரித்துவம் இல்லாக் கொள்கை (Nontrinitarianism) என்பது கிறித்தவ சமயத்தில் பொதுவாக ஏற்கப்படுகின்ற கடவுள் கொள்கையாகிய திரித்துவம் என்னும் நம்பிக்கையை ஏற்காத கிறித்தவக் குழுக்களின் கருத்தைக் குறிக்கும்.
ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்றும், அம்மூன்று ஆட்களாகிய தந்தை, மகன், தூய ஆவி என்போர் ஒருவர் ஒருவரிடமிருந்து வேறுபட்டபோதிலும் அவர்கள் ஒரே கடவுள் இயல்பைக் கொண்டுள்ளார்கள் என்றும், ஒருவருக்கொருவர் இணையான நிலை உடையவர்களாகவும் நித்திய காலத்திற்கும் சமமானவர்களாவும் உள்ளனர் என்றும் பெரும்பாலான கிறித்தவ சபைகள் (உரோமன் கத்தோலிக்கம், மரபுவழித் திருச்சபை, ஆங்கிலிக்கம் போன்றவை) ஏற்கின்றன.
திரித்துவக் கொள்கை வரையறுக்கப்படல்
தொகுஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார் என்னும் திரித்துவக் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபைகள், அக்கொள்கை கிறித்தவ நம்பிக்கைக் கொள்கையாக ஏற்கப்பட வேண்டும் என்று வரையறுத்த பொதுச்சங்கங்களின் முடிவை அறுதியானதாகக் கொள்கின்றன.
நிசேயா நகரில் கி.பி. 325இல் நடைபெற்ற பொதுச்சங்கம் திரித்துவம் பற்றிய கடவுட்கொள்கையை அறுதியாக வரையறுத்து, அனைத்து கிறித்தவ மக்களும் அதை விசுவாச (நம்பிக்கை) உண்மையாக ஏற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.[1]
திரித்துவக் கொள்கை மறுக்கப்படல்
தொகுஒரே கடவுள் மூன்று ஆட்களாக, அதாவது தந்தை, மகன், தூய ஆவி என்று மூன்று ஆட்களாகச் செயல்படுகின்றார் என்னும் கிறித்தவ நம்பிக்கைக் கொள்கையை மறுப்போர், அக்கொள்கை வெளிப்படையாக விவிலியத்தில் வரையறுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
திரித்துவக் கொள்கையை மறுப்பது ஒரு தவறான போக்கு என்று திருச்சபை அதிகாரிகளும் நாட்டு அதிகாரிகளும் 4ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுவரை கண்டனம் தெரிவித்தனர்; திரித்துவக் கொள்கையை மறுத்தோர் தவறான கொள்கையைப் போதிப்பவர்களாகக் கருதப்பட்டு கண்டிக்கப்பட்டார்கள். இன்று, திரித்துவக் கொள்கையை மறுக்கும் கிறித்தவர் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும்.[2][3][4][5]
திரித்துவம் இல்லாக் கொள்கை கூறுவது என்ன?
தொகுகடவுளின் இயல்பை வரையறுப்பதில் திரித்துவக் கொள்கை மறுப்பினர் மிகவும் வேறுபடுகின்றனர். திருச்சபை பொதுச்சங்கங்களின் வழியாகத் திரித்துவக் கொள்கையை அறுதியாக வரையறுப்பதற்கு முன்னர் சில மறுப்பு இயக்கங்கள் இருந்தன. அவை கடவுளின் இயல்பை விளக்கியதில் திருச்சபையின் போதனையிலிருந்து மாறுபட்டன.
எடுத்துக்காட்டாக, "தத்துக் கொள்கை" (Adoptionism), இயேசு கிறிஸ்து நித்திய காலத்திலிருந்தே கடவுளின் மகனாய் இருந்தார் என்பதை மறுத்து, இயேசு தமது திருமுழுக்கு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் ஆகிய ஒரு நிகழ்வின்போது தந்தையாம் கடவுளால் "மகனாக" தத்தெடுக்கப்பட்டார் என்று போதித்தது. "முறைக் கொள்கை" (Modalism), கடவுள் ஒருவரே என்றும், அந்த ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று தோற்றங்களில் உள்ளார், மூன்று ஆட்களாக இல்லை என்று போதித்தது. "கீழ்நிலைக் கொள்கை" (Subordinationism), இயல்பிலும் இருப்பிலும் மகன், தூய ஆவி ஆகிய இருவரும் தந்தைக் கடவுளுக்குக் கீழ்நிலையில் உள்ளவர்களே என்று போதித்தது. "ஆரியசுக் கொள்கை" (Arianism) இயேசு நித்திய காலத்திலிருந்தே கடவுள் தன்மை கொண்டவர் அல்லவென்றும், அவரைத் தந்தைக் கடவுள் படைத்தார் என்றும், அவர் தந்தைக்கு சமநிலையில் இல்லை என்றும் போதித்தது.
மேற்கூறிய கொள்கைகள் எல்லாம் உண்மையான கடவுள் கொள்கையிலிருந்து மாறுபட்டவை என்ற முறையில் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்தகைய திரிபுக் கொள்கைகளை (heresy) திருச்சபையின் பொதுச்சங்கங்கள் கண்டனம் செய்தன. அவ்வாறு, திரிபுக் கொள்கைகளைக் கண்டனம் செய்து, திருச்சபையின் கடவுள் கொள்கையை "ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாக இருந்து, அம்மூன்று ஆட்களும் ஒரே இறை இயல்பில் சம நிலையில் இருந்து செயல்படுகின்றனர்" என்று திரித்துவக் கொள்கையாக (Trinity) வரையறுத்த பொதுச்சங்கங்கள் இவை:
- முதலாம் நிசேயா பொதுச்சங்கம் (First Council of Nicaea) - ஆண்டு: 325.
- முதலாம் கான்சுடான்டிநோப்பிள் பொதுச்சங்கம் (First Council of Constantinople) - ஆண்டு: 360.
- எபேசு பொதுச்சங்கம் (Council of Ephesus) - ஆண்டு: 431.[6]
நடுக்காலத்தில் திரித்துவம் இல்லாக் கொள்கை
தொகு"கத்தார்" (Cathars) என்னும் கொள்கையினர் கி.பி. 11ஆம் நுற்றாண்டில் ஒருவகையான ஞானக் கொள்கையைப் பின்பற்றினார்கள். அவர்களும், அவர்களுக்குப் பின் 18ஆம் நூற்றாண்டின்அறிவொளிக் காலத்தில் சிலரும், 19ஆம் நூற்றாண்டில் "இரண்டாம் பெரும் எழுப்புதல்" (Second Great Awakening) என்னும் நிகழ்வின்போதும் திருச்சபையின் திரித்துவக் கொள்கையை மறுத்ததுண்டு.
நவீன காலத்தில் திரித்துவம் இல்லாக் கொள்கை
தொகுநவீன காலத்தில் திரித்துவம் இல்லாக் கொள்கையை ஆதரிக்கும் இயக்கங்கள் இவை:
- கிறிஸ்டடெல்பியர்கள் (Christadelphians)
- கிறித்தவ அறிவியலார் (Christian Scientists)
- இறுதிக்கால புனிதர்களின் இயேசு கிறிஸ்து சபை (The Church of Jesus Christ of Latter-day Saints)
- டான் விவிலியக் குழு (Dawn Bible Students)
- பொதுக்குழு நண்பர்கள் (Friends General Conference)
- கிறிஸ்துவின் சபை (Iglesia ni Cristo)
- யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses)
- கடவுளின் வாழும் சபை (Living Church of God)
- ஒருமைவாத பெந்தகோஸ்து சபை (Oneness Pentacostals)
- பன்னாட்டு கடவுள் சபை (Members Church of God International)
- பொது ஒருமைவாத கிறித்தவ சபை (Unitarian Universalist Christians)
- ஐக்கிய கடவுள் சபை (United Church of God)
மேற்கூறிய "கிறித்தவ" குழுக்கள் தவிர, யூதம் திரித்துவக் கொள்கையை ஆதரிப்பதில்லை. இசுலாமும் திரித்துவக் கொள்கையை மறுக்கிறது. கடவுள் ஒருவரே என்றும், இயேசு கிறிஸ்து கடவுளின் இறைத்தூதரே அன்றி கடவுள் அல்ல என்றும் இசுலாம் போதிக்கிறது.[7].[8]
திரித்துவம் இல்லாக் கொள்கையினருக்கு மறுப்பு
தொகுதிரித்துவம் இல்லாக் கொள்கையினர் கூற்றுப்படி, விவிலியத்தில் திரித்துவம் பற்றிய கொள்கை வெளிப்படையாக இல்லை. மேலும், அவர்கள் கிறித்தவம் பண்டைக் காலத்தில் கிரேக்க, எகிப்திய கலாச்சாரங்களின் தாக்கத்தின் விளைவாகவே கடவுள் ஒருவர் என்றும் அவர் மூன்று ஆட்களாக நித்தியத்திலிருந்தே நிலைபெற்று, மூன்று இறை ஆட்களும் இறையியல்பு கொண்டவர்களாக ஒரே சம நிலையினராக உள்ளனர் என்றும் கூறியதாகக் கருதுகின்றனர்.
திரித்துவம் இல்லாக் கொள்கையினரின் கூற்றைத் திரித்துவக் கொள்கையினர் மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் வழங்கும் வாதங்கள் இவை:
- விவிலியத்தில் "திரித்துவம்" (Trinity) என்னும் சொல் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குவது பல இடங்களில் குறிக்கப்படுகிறது.
- கிரேக்கம் எகிப்தியம் போன்ற கலாச்சாரத் தாக்கங்கள் இருந்த போதிலும் கிறித்தவ திருச்சபை திரித்துவம் பற்றிய கொள்கையை பிற கலாச்சாரங்களில் இருந்து பெறவில்லை. மாறாக, விவிலியத்திலேயே திரித்துவம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளன.
- அக்குறிப்புகளின் அடிப்படையிலும் இயேசுவின் போதனை மற்றும் செயல்கள் அடிப்படையிலும் திருச்சபை காலப்போக்கில் கடவுளின் வெளிப்பாட்டை ஆழ உணர்ந்து திரித்துவம் பற்றிய கடவுள் கோட்பாட்டை எடுத்துரைத்து பொதுச்சங்கங்கள் வழியாக வரையறுத்துள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Davis, SJ, Leo Donald (1990). The First Seven Ecumenical Councils (325-787): Their History and Theology (Theology and Life Series 21). Collegeville, MN: Michael Glazier/Liturgical Press. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8146-5616-7.
- ↑ http://www.britannica.com/EBchecked/topic/590747/Theodosius-I
- ↑ http://www.fourthcentury.com/index.php/urkunde-33
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-01.
- ↑ http://www.britannica.com/EBchecked/topic/12976/Albigensian-Crusade
- ↑ von Harnack, Adolf (1894-03-01). "History of Dogma". பார்க்கப்பட்ட நாள் 2007-06-15.
[In the 2nd century,] Jesus was either regarded as the man whom God hath chosen, in whom the Deity or the Spirit of God dwelt, and who, after being tested, was adopted by God and invested with dominion, (Adoptionist Christology); or Jesus was regarded as a heavenly spiritual being (the highest after God) who took flesh, and again returned to heaven after the completion of his work on earth (pneumatic Christology)
- ↑ Glassé, Cyril; Smith, Huston (2003). The New Encyclopedia of Islam. Rowman Altamira. pp. 239–241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0759101906.
- ↑ Encyclopedia of the Qur'an. Thomas, David. 2006. Volume V: Trinity.
வெளி இணைப்புகள்
தொகு- Five Major Problems With The Trinity 21st Century Reformation by Dan J. Gill
- The Trinity: True or False? by James H. Broughton & Peter J Southgate
- The Origin of the Trinity: From Paganism to Constantine பரணிடப்பட்டது 2014-08-05 at the வந்தவழி இயந்திரம்
- Should you believe in the Trinity? பரணிடப்பட்டது 2012-06-20 at the வந்தவழி இயந்திரம் - Jehovah's Witnesses perspective
- An investigation of the trinity of Plato and of Philo Judaeus, and of the effects which an attachment to their writings had upon the principles and reasonings of the father of the Christian church, by Caesar Morgan, Cambridge University Press, 1853.
- Antitrinitarian Biography; or, Sketches of the lives and writings of distinguished antitrinitarians, exhibiting a view of the state of the Unitarian doctrine and worship in the principal nations of Europe, from the reformation to the close of the seventeenth century, to which is prefixed a history of Unitarianism in England during the same period, Robert Wallace, 1850.
- A list of 70 nontrintarian translations of John 1:1 பரணிடப்பட்டது 2010-04-29 at the வந்தவழி இயந்திரம்