திருக்குறள் உரைப்பாடல் நூல்கள்

திருக்குறள் நூலுக்கு உரைநடையில் பலர் உரை எழுதியுள்ளனர். எழுதியும் வருகின்றனர். இதற்கு எழுதப்பட்டுள்ள பழமையான உரைகளும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டில் சிலர் திருக்குறளுக்குப் பாடல் வடிவிலேயே உரை எழுதியுள்ளனர்.

திருக்குறட் குமரேச வெண்பா

தொகு

இந்த நூலின் ஆசிரியர் ஜெகவீரபாண்டியன். இந்த நூலில் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு வெண்பா உள்ளது. ஒவ்வொரு வெண்பாவும் முருகப்பெருமானைக் 'குமரேசா' என விளித்துச் சொல்வதாக அமைந்துள்ளது. இந்த விளி, வெண்பாவின் இரண்டாம் அடியில், தனிச்சொல்லுக்கு முன் அமைந்து வருகிறது. பின்னிரண்டு அடிகளில் திருக்குறள் அப்படியே இணைக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு அடிகளில் அந்தந்த திருக்குறளின் கருத்தை விளக்கும் ஒரு கதை அல்லது வரலாற்று நிகழ்வு சுட்டப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு (பாடல்)

கண்டணங்கோ கார்முகிலோ கன்னியோ என்றுமால்
கொண்டுநின்றாய் என்னே குமரேசா - கொண்ட
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

அடுத்து, திருக்குறளில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியே உரை சொல்லப்படுகிறது. இந்த உரைக்கு முன்னோரின் நூல்களிலிருந்து சொல்லாட்சிகள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு:

குழை = காதணி

  • குழையணி காதில் குளிர்மதி முகம் (பெருங்கதை)
  • அருமணிக் குழை ஓர் காதில் கதிர்விடு திருவில் வீச (சிந்தாமணி)
  • செம்பொன் செய் சுருளும் தெய்வக் குழைகளும் சேர்ந்து மின்ன (இராமாயணம்)

கனம் என்னும் அடைமொழி அதன் பெருமை தோன்ற நின்றது.

  • காண்பாம் கனங்குழைப் பண்பு (கலித்தொகை)

குழையை உணர்த்தாமல் குழையை உடையவளை உணர்த்தினமையின் ஆகுபெயர்.

கணங்குழை என்பதும் பாடம்.

  • கணம் = திரட்சி, கூட்டம்
  • அணங்கு = தெய்வப்பெண்

இப்படிப் பிற சொற்களுக்கும் விளக்கவுரை தந்த பின்னர் திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை ஆகிய நூல்களில் இந்தத் திருக்குறளின் கருத்துப்பட வரும் பாடல்கள் உரைமேற்கோள் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. பின்னர் கதை என்னும் தலைப்பின் கீழ் முருகன் வள்ளியைக் கண்டு மயங்கி நின்ற நிகழ்வு கந்தபுராணம் நூல் மேற்கோள் பாடல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இப்படி இந்த உரை திருக்குறளிலும், பிற இலக்கியங்களிலும் ஆழங்கால் பட்டிருக்கும் ஆசாரியரின் புலமைத்திறத்தை விளக்குவதாக உள்ளது.

கருவிநூல்

தொகு
  • ஜெகவீரபாண்டியன், திருக்குறட் குமரேச வெண்பா. காமத்துப்பால் (மூலமும் உரையும்), 1938