திருச்சபையின் தாய்

உரோமன் கத்தோலிக்க மரியாளியல் அடிப்படையில் திருச்சபையின் தாய் (இலத்தீன்: Mater Ecclesiae) என்பது இயேசுவின் தாய் மரியாவுக்கு வழங்கப்படும் அடைமொழி ஆகும். நான்காம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் அம்புரோஸ் பயன்படுத்திய இந்த அடைமொழி, இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருத்தந்தை 6ம் பவுலால் அதிகாரப்பூர்வமானதாக அறிவிக்கப்பட்டது.[1] திருத்தந்தை பிரான்சிசு, மரியா, திருச்சபையின் தாய் என்ற விழாவை பெந்தக்கோஸ்து விழாவுக்கு அடுத்த நாள் சிறப்பிக்கும் வகையில் 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தார்.

பெதரிக்கோ பரோச்சி வரைந்த மக்களின் மாதரசி ஓவியம், 1579

விவிலியத்தில்

தொகு

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு தம் தாய் மரியாவையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்.[2] இந்த நிகழ்வின் வழியாக, இயேசு தம் சீடர்களான கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தாயாக மரியாவை வழங்கினார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை. மேலும், சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், இயேசுவின் தாய் மரியாவின் அரவணைப்பில் ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.[3] பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்[4] என்று திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். முதல்முறை தூய ஆவியார் நிழலிட்ட வேளையில் இயேசுவைப் பெற்றெடுத்த மரியா, இரண்டாம் முறை அவர் இறங்கி வந்தபோது திருச்சபையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. இவ்வாறு, அவர் திருச்சபையின் தாயாக திகழ்கிறார்.

வரலாற்றில்

தொகு

மிலான் ஆயரான புனித அம்புரோஸ் நான்காம் நூற்றாண்டிலேயே, மரியாவைத் 'திருச்சபையின் தாய்' என்று அழைத்தார்.[1] “நம்பிக்கை கொண்டோரை ஒன்றிணைத்து திருச்சபைக்குள் பிறக்கச் செய்ததால், கிறிஸ்துவின் உறுப்புகளின் தாயாக மரியா திகழ்கிறார்” என்று புனித அகுஸ்தீன் (354-430) கூறினார். அவரது வழியில் திருத்தந்தை முதலாம் லியோ (400-461), “இறைமகன் கிறிஸ்துவின் தாயாகிய மரியா, அவரது திருச்சபை என்ற மறையுடலின் உறுப்புகளுக்கும் தாயாக இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார். 1964ல் திருத்தந்தை 6ம் பவுல், மரியாவைத் ‘திருச்சபையின் தாய்’ என்று அறிவித்தார். 1975ஆம் ஆண்டு, மரியா ‘திருச்சபையின் தாய்’ என்பதை சிறப்பிக்கும் நேர்ச்சைத் திருப்பலி, உரோமைத் திருப்பலி புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. பெந்தக்கோஸ்து பெருவிழாவைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை, மரியா, திருச்சபையின் தாய் என்ற திருநாளை பொது நினைவாக சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு 2018 பிப்ரவரி 11ந்தேதி ஏற்படுத்தினார்.[5]

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 International Theological Commission, Vol II: 1986-2007 edited by Michael Sharkey and Thomas Weinandy (Aug 21, 2009) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1586172263 page 208
  2. யோவான் 19:26-27
  3. திருத்தூதர் பணிகள் 1:14
  4. திருத்தூதர் பணிகள் 2:1-4
  5. 'மரியா, திருச்சபையின் தாய்' விழா பற்றிய குறிப்புரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சபையின்_தாய்&oldid=2538628" இலிருந்து மீள்விக்கப்பட்டது