ஹிப்போவின் அகஸ்டீன்
இப்போவின் அகசுடீன் அல்லது இப்போ நகர் புனித அகுசுதீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் புனித அகுசுதீன் (நவம்பர் 13, 354 – ஆகத்து 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்சீரியாவில் அமைந்திருந்த இப்போ இரீசியசு என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் இப்போ நகர் அகுசுதீன் என அழைக்கப்படுகின்றார்[1].
புனித அகஸ்டீன் (அகுஸ்தீன்) Augustine of Hippo | |
---|---|
புனித அகஸ்டீன் (அகுஸ்தீன்), பிலிப் தே ஷம்பைஞ்-ஆல் வரையப்பட்டது, 17 ஆம் நூற்றாண்டு | |
ஆயர், மறைவல்லுநர் | |
பிறப்பு | தகாஸ்தே, நுமீதியா (இப்போது சூக் அஹ்ராஸ், அல்ஜீரியா) | நவம்பர் 13, 354
இறப்பு | ஆகத்து 28, 430 ஹிப்போ ரீஜியஸ், நுமீதியா (தற்போதைய அன்னாபா, அல்ஜீரியா) | (அகவை 75)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் ஆங்கிலிக்கம் லூத்தரன் சபை |
முக்கிய திருத்தலங்கள் | சியேல் தோரோ புனித பேதுரு, பவீயா, இத்தாலியா |
திருவிழா | ஆகஸ்ட் 28 (கத்தோலிக்கம்) ஜூன் 15 (கிழக்கு மரபு) |
சித்தரிக்கப்படும் வகை | குழந்தை; புறா; எழுதுகோல்; சங்கு; குத்தப்பட்ட இதயம்; சிறுகோவிலைத் தாங்கும் புத்தகத்தைப் பிடித்திருத்தல்; ஆயரின் கோலும் தொப்பியும். |
பாதுகாவல் | அச்சிடுவோர்; இறையியலாளர்கள் பிலிப்பைன்ஸ், டூசான்-அரிசோனா, ஸ்பெயின்; |
இலத்தீன் மொழி பேசிய மெய்யியலாளரும் இறையியலாளருமான அகுசுதீன் உரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர் மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் மானி (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால்[2] பெரிதும் கவரப்பட்டார். பின்னர் புளோட்டினசு என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "புது-பிளேட்டனிசம்" (Neo-Platonism) என்னும் கொள்கையைத்[3] தழுவினார்.
இக்கொள்கைகளால் அகுசுதீனின் மெய்யியல் தேடலை நிறைவுசெய்ய இயலவில்லை. எனவே, கி.பி. 387இல் அகுசுதீன் திருமுழுக்குப் பெற்று கிறித்தவ சமயத்தைத் தழுவினார்.
கிறித்தவர் ஆன பின்பு அகுசுதீன் கிறித்தவ மெய்யியல் மற்றும் இறையியல் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். மனிதருக்கு சுதந்திரம் உண்டு என்று ஏற்றுக்கொண்ட அகுசுதீன் கடவுளின் அருள் இன்றி மனித சுதந்திரம் செயல்பட இயலாது என்று கற்பித்தார். கிறித்தவ சமயத்தின் ஒரு முக்கிய கொள்கையாகிய பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பற்றியும், போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றி நீதிப்போர் கொள்கை (just war theory) என்னும் தலைப்பிலும்[4] அகுஸ்தீன் எடுத்துக் கூறிய கருத்துருக்கள் கிறித்தவத்தில் செல்வாக்குப் பெற்றன.
மேல்நாட்டில் உரோமைப் பேரரசு குலைவடையத் தொடங்கிய காலத்தில், அகுசுதீன் தாம் எழுதிய "கடவுளின் நகரம்" (City of God) என்னும் நூலில், திருச்சபை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால் ஆன்மிக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார்[5]. இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும் உலகநோக்கிலும் தாக்கம் கொணர்ந்தன.
கத்தோலிக்க திருச்சபையும் ஆங்கிலிக்கன் திருச்சபையும் புனித அகுசுதீனைப் பெரிதும் போற்றுகின்றன. இச்சபைகளால் அவர் புனிதர் என்றும் தலைசிறந்த "திருச்சபைத் தந்தை" என்றும் மதிக்கப்படுகிறார். புனித அகுஸ்தீனின் திருநாள் ஆகத்து மாதம் 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த அந்நாள் அவர் விண்ணகத்தில் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
அகுசுதீன் மனிதரின் மீட்புப் பற்றியும் கடவுளின் அருள் பற்றியும் அளித்த சிறப்பான போதனைகளின் காரணமாக, பல புரோட்டஸ்டாண்டு சபைகள், குறிப்பாக "கால்வின் சபை" அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கின்றன; அவரை "திருச்சபை சீர்திருத்தத்தின் ஒரு முன்னோடி" என்று போற்றுகின்றன. கிழக்கு மரபு சபை அகுசுதீனை "முத்திப்பேறு பெற்றவர்" என்று ஏற்று அவருடைய திருநாளை சூன் 15ஆம் நாள் கொண்டாடுகிறது.
அகுஸ்தீனின் இளமைப் பருவம்
தொகுகி.பி. 354இல் பிறந்த அகுஸ்தீன் அல்ஜீரியாவில் உள்ளதும், தற்காலத்தில் சூக் அஹ்ராஸ் என வழங்கப்படுவதுமான அக்காலத்து தகாஸ்தே என்னும் நகராட்சியில் உரோமை சமயத்தைச் சார்ந்த பத்ரீசியுஸ் என்பவருக்கும் மோனிக்கா என்னும் கிறித்தவத் தாயாருக்கும் மகவாகத் தோன்றினார். அகுஸ்தீன் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாசிரியரிடையே ஒத்த கருத்து உள்ளது. அதாவது, வட ஆப்பிரிக்காவின் முக்கிய பிரிவினராகிய பெர்பர் (Berbers) என்னும் இனமும், இலத்தீன் இனமும், பெனீசிய இனமும் கலந்த கலப்பு இனத்தவர் அகுஸ்தீன் என்று தெரிகிறது.
அகுஸ்தீனுக்குப் பதினொரு வயதானபோது அவருடைய பெற்றோர் அவரை தகாஸ்தே நகருக்குத் தெற்கே 19 மைல் தொலையில் அமைந்த மதாவ்ருஸ் (இன்றைய "ம்தாவ்ரூக்") என்னுமிடத்தில் கல்விகற்க அனுப்பினார்கள். அங்கு அவர் இலத்தீன் இலக்கியம் கற்றார்; உரோமை சமயத்தின் கொள்கைகள் மற்றும் பழக்கங்களை அறிந்தார். 359-360 ஆண்டுகளில் தம் வீட்டில் அவர் தொடர்ந்து கல்விபயின்றார். அப்போது சிசரோ எழுதிய (தற்போது தொலைந்துபோன) "ஹோர்த்தேன்சியுஸ்" (Hortensius) என்னும் நூலைத் தாம் விரும்பிக் கற்றதாகவும், அது அவருடைய உள்ளத்தில் மெய்யியல் துறை ஆர்வத்தைத் தூண்டி எழுப்பியதாகவும் அகுஸ்தீன் கூறுகிறார்.
மேற்படிப்பு
தொகுஅகுஸ்தீனுக்கு 17 வயது ஆனதும் உரோமானியானுஸ் என்பவரின் ஆதரவோடு அவர் கார்த்தேஜ் பெருநகருக்குச் சென்று "பேச்சுக் கலை" (Rhetoric) பயிலச் சென்றார். அகுஸ்தீனின் தாயார் மோனிக்கா கிறித்தவராக இருந்து தம் மகனைக் கிறித்தவ சமயத்தில் வளர்த்த போதிலும் அகுஸ்தீன் மனிக்கேய கொள்கையைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார். அகுஸ்தீன் எழுதிய தன்வரலாறு நூலாகிய "Confessions" என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் விரிவாக வடித்துள்ளார்[1]. அந்நூலில் காண்பதுபோல, அகுஸ்தீன் கார்த்தேஜ் நகரில் ஓர் இளம் பெண்ணோடு தொடர்புவைத்து, அவரை முறைப்படி மணந்துகொள்ளாமலே பதினைந்து ஆண்டுகள் கழித்தார். அந்த உறவின் பயனாக அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அகுஸ்தீன் "கடவுள் தந்த கொடை" (Adeodatus = ஆதேயோதாத்துஸ்) என்னும் பெயரிட்டார்.
அகுஸ்தீனின் ஆசிரியப் பணி
தொகு373-374 ஆண்டுகளில் அகுஸ்தீன் தகாஸ்தே நகரில் இலக்கணம் கற்பித்தார். அடுத்த ஆண்டு அவர் கார்த்தேஜுக்குச் சென்று அங்கு பேச்சுக் கலை கற்பிக்க ஒரு பயிலகம் உருவாக்கி ஒன்பது ஆண்டுகள் அங்கு கற்பித்தார். மாணவர்களின் ஒழுங்கின்மை கண்டு வெறுப்புற்று, அகுஸ்தீன் 383இல் உரோமை நகருக்குச் சென்று கல்வி கற்பித்தார். அங்கு அவருடைய மனிக்கேய நண்பர்கள் வழியாக உரோமை நகரின் ஆளுநராகிய சிம்மாக்குஸ் என்பவரின் அறிமுகம் அகுஸ்தீனுக்குக் கிடைத்தது. அவருடைய ஆதரவால் அகுஸ்தீன் 384இல் மிலான் நகரில் ஆசிரியப் பணி மேற்கொண்டார். அப்போது அவருக்கு வயது 30. அச்சமயத்தில் அகுஸ்தீன் மனிக்கேய சமயத்தில் முதல் படியில் இருந்தார்.
அகுஸ்தீன் கிறித்தவ மதத்தைத் தழுவுதல்
தொகுமிலானில் ஆசிரியப்பணி ஆற்றிய காலத்தில் அகுஸ்தீனின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. முதலில் அவர் மனிக்கேய மதத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு சமயத்தையும் பின்பற்றாத நிலைக்குச் சென்றார்.
அதே நேரத்தில், புளோட்டினஸ் என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "புது-பிளேட்டனிசம்" (Neo-Platonism) என்னும் கொள்கை அவரைக் கவர்ந்தது. அது ஆன்மிக ஆர்வத்தை அகுஸ்தீனின் உள்ளத்தில் தூண்டிய போதிலும், அவருடைய அன்னை மோனிக்கா தம் மகன் கிறித்தவ சமயத்தை ஏற்க மாட்டாரா என்ற ஏக்கத்தோடு இருந்தார். தம் மகன் அகுஸ்தீன் மன மாற்றம் பெற்று கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று மோனிக்கா இரவும் பகலும் கண்ணீரோடு வேண்டுதல் செய்துவந்தார் என்று அகுஸ்தீன் தாம் எழுதிய "தன்வரலாற்றில்" கூறுகிறார்.
மோனிக்கா தம் மகன் அகுஸ்தீனோடு மிலானுக்குச் சென்றிருந்தார். அங்கு தம் மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அகுஸ்தீன் தாம் முதலில் அன்புசெய்த பெண்ணை மறக்கவில்லை. எனவே வேறொரு பெண்ணை மணக்க தயங்கினார். பின்னர் மண ஒப்பந்தம் ஆனது. ஆனால் அது முறிந்தது.
386ஆம் ஆண்டு கோடைகாலத்தில் அகுஸ்தீன் புனித வனத்து அந்தோனியார் (Saint Anthony of the Desert) என்னும் துறவியின் வாழ்க்கையைப் படித்தார். அதிலிருந்து தாமும் தூய வாழ்வு நடத்த வேண்டும் என்றும், தவறான கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்றும் முடிவுசெய்தார். அம்முடிவோடு தம் ஆசிரியப் பணிக்கு முற்று வைத்தார். திருமணம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார். கடவுளுக்கே தம்மை முற்றிலும் அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.
ஒருநாள் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது அகுஸ்தீன் ஒரு குழந்தையின் குரலைக் கேட்டார். அக்குரல் அவரிடம் "எடுத்து வாசி" (இலத்தீன்: tolle et lege = "take up and read") என்று கூறியது. முதலில் அக்குரலின் பொருளை அவர் உணரவில்லை. பிறகு, புனித வனத்து அந்தோனியாரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் தம் வாழ்விலும் உண்மையாவதை அவர் உணர்ந்தார். "எடுத்து வாசி" என்னும் குரல் உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்ததாகவும், கடவுளுடைய வார்த்தை அடங்கிய திருவிவிலியத்தை எடுத்து வாசித்தால் தம் வாழ்வின் பொருளை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் உள்ளூர உணர்ந்தார்.
உடனேயே திரும்பிச் சென்று விவிலியத்தைத் திறந்து வாசித்தார். அப்போது அவர் கண்களில் பட்டது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் ஒரு பகுதி. இதோ:
“ | களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் (உரோமையர் 13:13-14) | ” |
இச்சொற்களை வாசித்த அகுஸ்தீன் தம் வாழ்வில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார். கடவுளே தம் உள்ளத்தில் பேசுகிறார் என்பதையும் அறிந்தார். தம் தாய் மோனிக்கா கடவுளிடம் வேண்டிய மன்றாட்டுகள் வீண் போகவில்லை என்பதை அகுஸ்தீன் உணர்ந்ததோடு, மிலான் நகர ஆயராகிய அம்புரோசு[2] விவிலியத்தை விளக்கியுரைத்த பாணியாலும் கவரப்பட்டார். கிறித்தவ சமயத்தில் கடவுளின் உண்மை உள்ளது என்று ஏற்றுக் கொண்டார்.
எனவே, மிலான் நகர ஆயராகிய அம்புரோசை அணுகி, தமக்குத் திருமுழுக்கு அளித்து தம்மைக் கிறித்தவ சமயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அம்புரோசும் அதற்கு இணங்கி அகுஸ்தீனுக்கும் அவருடைய மகன் ஆதோயோதாத்துசுக்கும் அகுஸ்தீனின் நெருங்கிய நண்பரும் அவருக்குக் கிறித்தவத்தில் ஆர்வத்தை எழுப்பியவருமாகிய அலீப்பியுஸ் (Alypius) என்பவருக்கும் திருமுழுக்கு அளித்து அவர்களைக் கிறித்தவ சபையில் ஏற்றுக் கொண்டார்.