திருத்துறையூர் அருள்நந்தி தேவநாயனார்

அருணந்தி சிவாசாரியார்  (கி.பி. 1180-1275) திருவாவடுதுறை ஆதீன பரம்பரையில் வந்தவர். சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். சந்தான குரவர்களில் ஒருவர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய நூல்களை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.

இவர் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.எனவே சகலாகமப்பண்டிதர் என்ற‌ காரணப்பெயருடன் அழைக்கப்பட்டார். மெய்கண்டதேவநாயனாருடைய பெற்றோர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் குல குருவான இவரிடம் சென்று விசாரித்து, இவர் சொன்ன வார்த்தையின் படி செய்ததால் பிறந்தவர் தான் மெய்கண்ட தேவ நாயனார். ஆனால் பிற்காலத்தில் அந்த மெய்கண்ட தேவ நாயனாரிடமே இவர் மாணாக்கராக சேர்ந்தார். மெய்கண்ட தேவநாயனாரிடம் மாணாக்கராக சேர்ந்த பிறகு அருள் நந்தி சிவாச்சாரியார் என்ற தீட்சை பெயர் பெற்றார்.