திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம்
|
திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | திருநெல்வேலி |
சைவ வித்தியா விருத்திச் சங்க செயற்பாடுகள்
தொகுஈழத்தில்சைவமும் தமிழும் காக்க சேர்.பொன் இராமநாதன் தலைமையில் 1923.12.09 அன்று ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமே சைவ வித்தியாவிருத்திச் சங்கம் ஆகும். இச்சங்கம் 1960களின் தொடக்கம் வரை 187 நிறுவனங்களை (பாடசாலைகள், ஒரு சைவாசிரியர் கலாசாலை, தொழிற்பயிற்சி நிலையங்கள், இரு சிறுவர் இல்லங்கள்) நடாத்தியது. பாடசாலைகளையும் சைவாசிரியர் கலாசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் சங்கம் இரு சிறுவர் இல்லங்களை மட்டும் நிர்வகித்து வருகின்றது.
நிர்வாகம்
தொகுஇச்சங்கம் தலைவர், செயலாளர், நிதிச்செயலாளர் உள்ளிட்ட இருபத்தைந்து பணிப்பாளர்களைக் கொண்ட சபையால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்களுள் இல்லம், கல்வி, மருத்துவம், சமயம், பண்ணை, தொழிற்பயிற்சி எனும் ஆறு முக்கிய விடயங்களுக்கு உரிய திட்டப் பணிப்பாளர்களும் உள்ளடங்குவர், பொதுச்சபையே இப்பணிப்பாளர் சபையை நியமிக்கின்றது. இப்பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் "ஊதியம் பெறாது" சேவை மனப்பான்மையோடு தொண்டாற்றி வருகின்றனர். இங்கு நிர்வாக அலுவலர் ஒருவர், முகாமைத்துவ உதவியாளர் நால்வர், அலுவலக உதவியாளர் ஒருவர், தையற் பயிற்சியில் இருவர், நூலகர் ஒருவர், அறிவகத்தில் இருவர், விடுதிக்காப்பாளர் இருவர், விடுதிக்காப்பாளர் பதினொரு பேர், சிற்றூழியர் ஒருவர், சாரதி ஒருவர், காவலாளிகள் அறுவர், சமையலாளர்கள் ஐவர் என அமைந்த ஆளணியினர் சங்கச் செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு உதவி வருகின்றனர்.
சங்கத்தின் பணிகள்
தொகுஇப்பொழுது சங்கம் பல்வேறு பணிகளை சமூகத்தின் தேவைக்கேற்றப முன்னெடுத்து வருகின்றது. இல்லங்கள்
சைவ வித்தியாவிருத்திச் சங்கதால் தற்போது கீழ்வரும் இல்லங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன:
- சைவச்சிறுவர் இல்லம் (ஆண் )
- சைவச்சிறுவர் இல்லம் (பெண் )
- கருணை இல்லம் (பெண்)
சைவச்சிறுவர் இல்லம்
தொகுசைவ வித்தியா விருத்திச் சங்கம் ஆரம்ப காலம் (1928) தொடக்கம் இரு சிறுவர் இல்லங்களை கலாசாலை வீதி, திருநெல்வேலியில் நடாத்தி வருகின்றது. அவற்றில் ஒன்று ஆண்கள் இல்லமாகவும் மற்றையது பெண்கள் இல்லமாகவும் விளங்குகின்றன. ஆண்கள் இல்லத்தில் தற்போது 61 ஆண் பிள்ளைகளும் பெண்கள் இல்லத்தில் தற்போது 106 பெண் பிள்ளைகளும் தங்கியுள்ளனர். உரும்பிராயில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் தற்போது 38 பெண் பிள்ளைகளும் தங்கியுள்ளனர்.
இல்லம் தொடர்பான தொடர்புகளிற்கு
தொகுபணிப்பாளர்கள் :25
தலைவர் :திரு.V.Tசிவலிங்கம்
செயலாளர் :திரு.தி.செல்வமனோகரன்
நிதிச் செயலாளர் :திரு.நா.நித்தியானந்தன்
Telephone No :021 222 6525 , 021 320 7897
E-mail :hindu Board
Website :www.thehinduboard.org
சைவ சிறுவர் இல்லத்தின் தோற்றம்
தொகுசபாபதியார் மாளிகை போன்ற மேல்மாடியினை வைரமான வேப்பமரம் கொண்டமைத்து ஏழைப்பிள்ளைகளை அங்கே ஓடி விளையாட வைத்து உணவு உடை அளித்து உறங்க வைத்தார். பிறர் பிள்ளைகளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும் என்ற நாகரிகத்தை சபாபதியார் நன்கு அறிந்தவர். அவர் தனது மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகளை ஏழைப்பிள்ளைகளுக்கு உணவூட்டப் பழக்கியவர் அந்த வகையில் அவரின் பேரக்குழந்தைகள் மண்சோறு ஆக்கி விளையாடாமல் உண்மையில் விளையாட்டுத் தோழர் தோழியர்களிற்கு உணவு ஊட்டியவர்கள். இளமையிலே ஏழைகளுக்கு சமையல் புரிந்த ஒருவர் திருவாட்டி குழந்தையம்மா குமாரசாமி என்பவராவர். திருவாளர் குமாரசாமி அந்த காற்றுப் பட்டமையால் போலும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் இயக்குனராகவும் பிற்காலத்தில் கடமையாற்றினார். சபாபதிப்பிள்ளை அவர்கள் தன் மனையில் ஆரம்பித்த சைவ சிறுவர் இல்லத்தை சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினர் 1928 ம் ஆண்டு விஜய தசமி நாளில் பொறுப்பேற்று நடத்த தொடங்கினார்கள். அன்று தொடக்கம் சைவப் பெரியார் இராசரத்தினம் அவர்கள் எண்ணற்ற பிள்ளைகளுக்குத் தந்தையானார்.
சைவப்பிரபுக்கள் அனாதைகள் மேலிரங்கி ஆளுக்கொரு பிள்ளையாவது வளர்க்கக் கை கொடுக்கலாம் என்று சங்கத்தார்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அல்லது உணவிற்கு உதவும் முகமாக நெல், அரிசி, தேங்காய், காய்கறி ஏதாவது கொடுங்கள் என்று கூறினார்கள். உடுக்கத் துணி கொடுங்கள் என்று தன்மையாகக் கேட்டார்கள்.
பிள்ளைகள் கல்வியோடு கைத்தொழில் ஒன்றைக் கற்று கவலையின்றி வாழ்வதற்கு வழிகாட்டினார்கள். விவசாயம், நெசவு, அச்சுக்கலை, தச்சுவேலை இவற்றில் ஏதாவது ஒரு துறையின் அபிவிருத்திக்கு பொது மக்களிடம் உதவி கோரினார்கள். அந்தக் காலத்தில் 1928 ம் ஆண்டளவில் ஒரு பிள்ளைக்கு மூன்று வேளை போதியளவு உணவும் வேறு தேவைகளையும் கொடுத்து வளர்ப்பதற்கு எட்டு ரூபா ஐம்பது சதம் செலவாகும் என பரிந்து கேடடார்கள்.
தாய் தந்தை இல்லாதவர்கள் இறைவன் இருக்கும் போது அனாதைகளாக மாட்டார்கள். அவர்கள் இறைவனின் குழந்தைகள் சிவன் பிள்ளைகள் வாழும் இல்லம் சைவச் சிறுவர் இல்லம் .சைவ சமயத்தவர்கள் மெய்யடியார்களான தனியடியார்கள் அறுபத்துமூவர் என எண்ணிக்கொள்ளும் வண்ணம் அங்கே அறுபத்து மூன்று பிள்ளைகள் வந்து கூடினர்.அவர்களில் சிலர் போதிய கல்வி பெற்று முன்னேறினார்கள்.
இறைவனின் திருவருளாலும் சபாபதிப்பிள்ளையாரின் தூண்டுதலாலும் மனம் மகிழ்ந்த திருநெல்வேலி கந்தையா அவர்களும் அவருடைய மனைவியாரும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பைச் சைவ சிறுவர் இல்லம் அமைப்பதற்கு மகிழ்வுடன் அளித்தனர். ஏழைப்பிள்ளைகளின் வாழ்விற்காக சபாபதியார் எதனையும் கொடுக்க ஆயத்தமானார். காணி வாங்குதல், உறுதி எழுதுதல், கொட்டிலமைத்தல் ,கட்டில் இடுதல், உணவு கொடுத்தல் எதற்கும் அவரது வலது கை கொடுப்பதற்கு நீண்டது. இவ்வாறே சைவ சிறுவர் இல்லம் ஆரம்பித்து வளர்ச்சியடைந்து பல ஏழைக்குழந்தைகளிற்கு வாழ்வளித்து வருகின்றது.
மாணவர் அனுமதி
தொகுசிறுவர் நன்னடத்தை பிரிவினராலும் நீதிமன்றாலும் இல்லங்களுக்குச் சிறுவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது திருநெல்வேலி சைவச்சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்கள் நன்னடத்தை உத்தியோகத்தராக திரு.A.ரெஜினோல்ட்ராஜ் அவர்களும் உரும்பிராய் கருணை இல்லத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராக திரு.K.கமலதாஸ் அவர்களும் தொழிற்படுகின்றனர். இவர்கள் தமக்குரிய நிகழ்ச்சி நிரலின்படி தத்தம் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
கல்விச் செயற்பாடுகள்
தொகுஇரு சைவச் சிறுவர் இல்லங்களையும் சேர்ந்த சிறார்கள் யாழ்/முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றனர். கருணை இல்லத்தில் தங்கியுள்ள சிறார்கள் 18 பேர் யாழ்/உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், 20 பேர் யாழ்/உரும்பிராய் இந்துக்கல்லூரியிலும் கல்வி பயில்கின்றனர்.
மாணவர்களுக்கு புறநிலைக் கற்கை வகுப்புக்கள் கிரமமாக நடைபெறுகின்றன. 20 ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். வகுப்பு 6-11 வரை கட்டாய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களும் உயர்தர வகுப்பிற்கு சகல பாடங்களும், மேலதிக வகுப்புக்களும் நடைபெறுகின்றன. அதை விட கற்றலில் பின் தங்கிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான விசேட கற்பித்தல் நடைபெறுகின்றது.
அண்மையில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி கா.பொ.த (சா/த) மாணவர்கள் 50 வீதமும், கா.பொ.த (உ/த) 100 வீதமும் சித்தி பெற்றுள்ளார்கள்.
பிரத்தியேக வகுப்புக்கள்
தொகுஇல்லச் சிறார்களுக்கான அனைத்துப் பாடங்களும் பிரத்தியேக வகுப்புக்கள் அவ்வவ்வில்லங்களில் நடைபெற்று வருகின்றன. இவ்வகுப்புக்களில் இணைப்பாட விதானங்களும் கவின்கலை வகுப்புக்களும் உள்ளடங்குகின்றன. இப்பிரத்தியேக வகுப்புச் செயற்பாட்டிற்கு ஏறத்தாழ 100,000 த்திற்கு மேல் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கவின்கலை வகுப்புக்கள்
தொகுசிறார்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் முகமாக சங்கீதம், பண்ணிசை, வஜலின், வீணை, மிருதங்கம், நடனம், நாடகம் ஆகிய வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இதன் மூலம் மாணவர் மன்றங்கள், இல்ல நிகழ்வுகள் மற்றும் பாடசாலை பொது நிகழ்வுகளிலும் சிறார்கள் தமது கலை சார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்தோடு வட இலங்கை சங்கீத சபை நடாத்தும் கவின்கலை சார்ந்த பரீட்சைகளிலும் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர்.
கணிணிப் பயிற்சி
தொகுசிறார்களை தொழிநுட்ப உலகிற்கேற்பத் தயார்படுத்தும் முகமாக கணிணிப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அடிப்படைக் கணினி அறிவோடு நெசனல ஊடாக ஒரு கற்கை நெறியும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடையாளிகள் சிலர் கணினிகள் அன்பளிப்புச் செய்தனர். அக்கணினிகளைக் கொண்டு கணினிப்பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டது அதில் ஒரு போதனாசிரியர் தரம் 06க்கு மேற்பட்ட மாணவர்களிற்குப் பயிற்சி வழங்கி வருகிறார். உயர் தர மாணவர்கள் மென் பொருள் தயாரிப்பில் முன்னேற்றமடைந்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
தொழிற் பயிற்சிகள்
தொகுஅனைத்துச் சிறார்களிற்கும் இல்லங்களிலேயே தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
விவசாயப்பயிற்சி
தொகுசைவச்சிறுவர் இல்லத்தில் உள்ள பண்ணையில் தென்னைகளும், எலுமிச்சைகளும் , வாழைகளும் பயிரிடப்பட்டுள்ளன. மிகுதிக்காணியில் வெங்காயம், வெண்டி, கீரை, மிளகாய் போன்றன பயிரிடப்படுகின்றன. செம்மணியில் உள்ள சங்கத்தின் வயலில் கடந்த இரு வருடங்களாக நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இச் செயற்பாடுகளில் சிறார்கள் ஈடுபடுவதனூடாகத் தமக்குரிய விவசாயப் பயிற்சியினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தையற்பயிற்சி
தொகுதையல் பயிற்சி நிலையத்தினால் பெண் பிள்ளைகளுக்கான ஆடைகள் தைத்து வழங்கப்படுகின்றன. வகுப்பு 4 முதல் சகல பெண் பிள்ளைகளுக்கும் தையற் பயிற்சி வழங்கப்படுகிறது. கா.பொ.த (சா/தா) (உ/த) வகுப்பு மாணவர்கள் தையல் இயந்திரத்தில் தைப்பதற்கு பயிற்சி பெற்று ஓய்வு நேரத்தில் சிறார்களின் உள்ளாடைகள், வீட்டு உடுப்புக்கள் தைக்கின்றார்கள். இல்லப் பிள்ளைகளுக்குத் தேவையான ஆடைகள் இங்கேயே தைத்து வழங்கப்படுகிறன. இல்லத்தில் இருந்து விலகிய மற்றும் ஊர்ப் பெண் பிள்ளைகளுக்குத் தையற்பயிற்சி வழங்கப்படுகின்றன. முதலாவது குழு தையற்பயிற்சி பெற்று வெளியேறியுள்ளது. அத்துடன் NAITA நிறுவனத்துடன் இணைந்த பயிற்சிகளும் நடாத்தப்பட்டுச் சான்றுதழ்கள் வழங்கப்படுகின்றன.
சிறுகைத்தொழில் மையம்
தொகுவீட்டிலிருந்து பெறக்கூடிய ஊறுகாய், ஒடியல், புளுக்கொடியல், மோர்மிளகாய், உற்பத்திகளும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. கைப்பணிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
புத்தகங்கட்டுதல்
தொகுபுத்தகங்களை உரிய முறையில் கட்டுவதற்கான பயிற்சி சிறார்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதனுடாக எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
மின்னிணைப்பு
தொகுசிறுவர்களுக்கு (ஆண்) மின்னிணைப்பிற்குரிய பயிற்சி வழங்கப்படுவதோடு NAITA நிறுவனத்துடன் இணைந்த பரீட்சைகளை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மரவேலை
தொகுசிறுவர்களுக்கு (ஆண்) மரவேலைகளுக்குரிய உபகரணங்கள் வாங்கப்பட்டு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முறைசாராக்கல்வி
தொகுயாழ் கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவினர் எமது சிறார்களுக்குக் கணினி, கைப்பணி, முக அலங்காரம் முதலான பயிற்சி நெறிகளை மேற்கொண்டு அதற்கான பரீட்சைகளையும் நடாத்தி சித்தியெய்தும் சிறுவர்களுக்குச் சான்றுதல் வழங்கி வருகின்றனர்.
விளையாட்டு
தொகுமாணவர்கள் யா/முத்துத்தம்பி மகா வித்தியாலய மைதானத்திற்கு விளையாட அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெண்கள், ஆண்களுக்குமான காற்பந்தாட்ட அணிகள் தனித் தனியே உருவாக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சீர்மிய வகுப்புக்கள்
தொகுசிறார்களுக்கு உளவள ஆலோசனை வழங்கும் முகமாக "ஆறுதல்" நிறுவனம் சீர்மிய வகுப்புக்கள் நடாத்தி வருகின்றது. இதனால் சிறார்கள் கல்வி, ஒழுக்கம் என்பவற்றில் சீர்படுவதோடு மனவமைதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.
சுற்றுலா
தொகுசிறார்களை வருடத்தில் இருமுறை சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். 2015 சித்திரை மாதத்தில் மாத்தளை, கண்டி, பேராதனைப்பூங்கா , ஹக்கலைப் பூங்கா, எல்லே, நீர்வீழ்ச்சி, றம்பொடை, தலதாமாளிகை , நுவரெலியா, கதிர்காமம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அத்துடன் மார்கழி மாத விடுமுறைக்கு வீடு செல்லாத சிறுவர்களை புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம், ஒட்டிசுட்டான் தான்றோன்றிச்சரம், இரணைமடுக்குளம் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெற்றோர் பாதுகாவலர் ஒன்றுகூடல்
தொகுவருடந்தோறும் ஆவணி மாத நடுப்பகுதியில் பெற்றோர்,பாதுகாவலர் ஒன்றுகூடல் நடைபெறுகின்றது. இதில் நிர்வாகம் சார்ந்த அனைவரும் கலந்துகொள்வர். ஏனைய காலங்களில் பெற்றோர் பாதுகாவலர் இல்லச் சிறார்களை மாதமொருமுறை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சேவையடிப்படையில் கடமையாற்றும் ஆசிரியர்கள்
தொகுயாழ் கல்வி வலய ஓய்வு பெற்ற மனைப்பொருளியல் ஆசிரிய ஆலோசகரான த.யோகேஸ்வரி அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்து எமது சிறார்களின் கல்வி, ஒழுக்கம் என்பவற்றில் கவனம் செலுத்திப் பெரும் பணி புரிந்து வருகின்றார் செல்வி வெ.விஜயபாரதி அவர்களும் ஊதியமற்று எமது சிறார்களுக்கு வீணை வகுப்புக்களை நடாத்தி வருகின்றார்.
உயர்கல்வி மாணவர்களுக்கான நிதியுதவி
தொகுஇலங்கை பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியர் கல்லூரிகள், வெளிவாரிக் கற்கைநெறி என்பவற்றை மேற்கொள்ளும் 24 மாணவர்களிற்கு சங்கம் அவர்களின் கல்வி நடவடிக்கைகளிற்கான நிதியுதவியை மாதாந்தம் வழங்கி வருகின்றது.
நூலகம்
தொகுசங்கம் சிறந்த நூலக வசதிகளைச் சிறார்களிற்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. மிகத் தொன்மையான நூல்களோடு வருட வருடம் 100 000/= ற்கு மேற் பெறுமதியுடைய நூல்களைச் சிறார்களின் பயன்பாட்டிற்காக வாங்கி வருகின்றது. அத்தோடு மாணவர்களின் நலன் கருதி இவ்வாண்டின் நடுப்பகுதியிலிருந்து புதிதாக நூலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் பூங்கா
தொகு26.06.2015 அன்று சங்கத்தின் S.R.கனகநாயகம் சிறுவர் பூங்கா வெகு சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் S.R.கனகநாயகம்அவர்களின் மகன் திரு.கனக.ஈஸ்வரன் (ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களும் அவரது மகன் திரு.க.சிவான் (சட்டத்தரணி)அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.இப்பூங்காவை சிறார்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பயன் படுத்தி வருகிறார்கள்.
அபிவிருத்திச் செயற்பாடுகள்
தொகுபுதிய ஆண்கள் விடுதி
தொகு08.02.2015 அன்று பணிப்பாளர் சபையால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்கள் இல்லப் புதிய கட்டடம் 27.04.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது திரு.இ.ஜெயசேகரம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தி.வேல்நம்பி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு இக் கட்டடத்தை திறந்து வைத்தனர்.திரு.கனக.ஈஸ்வரன் (ஜனாதிபதி சடடத்தரணி) அவர்கள் தனது தந்தையாரான திரு S.R. கனகநாயகம் அவர்களின்(முன்னாள் தலைவர்,சைவ வித்தியா விருத்திச் சங்கம் )நினைவாக ஒரு அறைக்கான செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவ்வறைக்கு அவரின் பெயர் பொறிக்கப்பட்டு சங்கத்தின் உபதலைவர் திருV.T.சிவலிங்கம் அவர்களால் அப்பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டது. இதன் மேற் பகுதிக்கான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய தேவையில் தற்போது உள்ளது.
தங்கம்மா மண்டபம்
தொகுதங்கம்மா மண்டபத்தின் நிறைவுறாதிருந்த 50 அடி நீளமான கட்டடப்பகுதி தூண்கள் நிறுவி கூரை போடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிகழ்வுகள் நடத்துவதற்கான மேடையுடன் கூடிய மண்டபமாக இதனை அமைத்தல் வேண்டும். பெண்கள் இல்ல புதிய கட்டடத்தின் மேன்மடிப் பகுதிக்குரிய கூரை போடும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சமய நிகழ்வுகள்
தொகுசிவராத்திரி, நவராத்திரி, நாயன்மார் குருபூசைகள் , அறநெறி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை தோறும் பிரசங்கம் நாள்தோறும் காலையும் மாலையும் வழிபாடு என்ற வகையில் இல்லங்களில் சமய நிகழ்வு நடைபெறுகின்றது. சிவராத்திரி தினமன்று சிறார்களிற்கு தீட்சை வழங்கப்படுகின்றது. நவராத்திரி தினங்களில் பிரசங்கங்கள் நடைபெறுகின்றன. அத்தோடு மாணவர்களுக்கிடையே கோலம் போடுதல், பாமாலை, பேச்சு முதலான போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் விஜயதசமி அன்று வழங்கப்படுகிறன. அருகிலுள்ள ஆலயங்களாலும் மற்றும் சமய நிறுவனங்களாலும் நடத்தப்படுகின்ற போட்டிகளில் சிறார்கள் பங்குபற்றி வருகின்றனர்.அத்தோடு சங்கத்தால் இந்து கலாச்சார அமைச்சின் அறநெறிப் பாடசாலை நடத்தப்பட்டு வருகின்றது.
மருத்துவம்
தொகுவருடத்தில் இருமுறை மருத்துவ முகாம் நடாத்தப்பட்டு மாணவர்களின் சிறார்களின் உடல், உள நலன்கள் பேணப்படுகின்றன. யாழ் போதனா வைத்திசாலையிலேயே சிறார்களுக்குரிய மருத்துவ சேவைகள் நிறைவு செய்யப்படினும் உடனடித்தேவைகளுக்கு தனியார் மருத்துவமனைகளின் சேவைகளையும் பெறுவதுண்டு.
விழாக்கள்
தொகுதைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி, கார்த்திகை விளக்கீடு போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக சித்திரைப் புத்தாண்டு விழா கருணை இல்லத்திலும், தீபாவளித் திருநாள் சைவச் சிறுவர் இல்லத்திலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு கொண்டாடப்பட்டு வருகின்றன. வருடத்தின் ஜூலை 04ஆம் திகதியும் சங்கத்தில் இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் பிறந்தநாள் விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தோடு 2015இல் இருந்து "இல்லக விளக்கு" மலரும் வெளியிடப்பட்டு வருகின்றது. இது சங்கத்தின் செயற்பாடுகளையும் மாணவர்களின் ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.
2014 இல் இருந்து வருடந்தோறும் "விடுதிக்காப்பாளர் தினம்" ஒக்டோபர் 06 ஆம் திகதியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே போல "ஆசிரியர் தினமும்" வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது.
கொடைகள் தொடர்பானவை
தொகுசமூக சேவைத் திணைக்களம் ஒரு பிள்ளைக்கு மாதம் ரூபா 500/= வழங்குகின்றது. இத்தொகை ஒரு பிள்ளையை மூன்று நாள் பராமரிப்பதற்கே போதுமானது. எனவே உலகெங்கும் வாழும் அன்பு உள்ளங்களின் ஆதரவை சங்கத்தினர் நாடுகின்றனர். ஒரு பிள்ளையின் தேவைகளை நிறைவு செய்ய மாதம் ரூபா 5000/= தேவை. லண்டன் ஸ்ரீகனக துர்க்கை அம்மன் அறநிதியமும், மற்றும் ஒரு சில அன்பர்களும் 85 பிள்ளைகளின் பராமரிப்பைப் பொறுப்பேற்றுள்ளனர். ஏனைய பிள்ளைகளுக்கும் பராமரிப்பாளர்களை நிர்வாகத்தினர் நாடி நிற்கின்றனர்.