திருபாய் அம்பானி

இந்திய தொழிலதிபர்.

திருபாய் என்று அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி (28 டிசம்பர், 1932 - ஜூலை 6, 2002) இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் தனது உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்கினார். அம்பானி தனது (ரிலையன்ஸ்) நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக்கினார். 2007 வாக்கில் குடும்பத்தின் இணைந்த சொத்துக்கள் (மகன்கள் அனில் மற்றும் முகேஷ் ஆகிய இருவருடையதும்) 60 பில்லியன் டாலர்களாக இருந்தது.[மேற்கோள் தேவை] அம்பானிகள் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்தனர்.[மேற்கோள் தேவை]

Dhirubhai Ambani 2002 stamp of India.jpg
திருபாய் அம்பானி
Ambani
பிறப்புதிசம்பர் 28, 1932(1932-12-28)
குஜராத், பிரித்தானிய இந்தியா
இறப்புசூலை 6, 2002(2002-07-06) (அகவை 69)
மும்பாய், இந்தியா
பணிதொழிலதிபர்
சொத்து மதிப்புGreen Arrow Up.svg US$6.10 பில்லியன்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
கோகிலாபென் அம்பானி
பிள்ளைகள்முக்கேஷ் அம்பானி
அனில் அம்பானி
நீனா கோத்தாரி
தீப்தி
வலைத்தளம்
www.ril.com

தொடக்ககால வாழ்க்கைதொகு

திருபாய் அம்பானி குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும் ஜமுனாபென்[1] னுக்கும் மகனாய்ப் பிறந்தார். ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் உயர்த்தப்பட்டார்.

அவருக்கும் கோகிலா எனும் பென்னுக்கும் திருமணம் நடந்தது. முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோதாரி மற்றும் ரினா சல்கோன்கர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

மஜின் வணிக நிறுவனம்தொகு

திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக 350 sq ft (33 m2)அது இருந்தது. ஆரம்பத்தில், தங்களுக்கு வணிகத்தில் உதவ இரண்டு உதவியாளர்களை அவர்கள் அமர்த்திக் கொண்டனர். 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். இருவரும் வெவ்வேறான வணிக மனோநிலை கொண்டிருந்தனர் என்றும் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தனர் என்றும் நம்பப்படுகிறது. திரு.தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார். திருபாய் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாதவர். அவர் கையிருப்புகளை குவித்து, விலை உயர்வை எதிர்நோக்கி, லாபத்தை குவிப்பதில் நம்பிக்கையுற்றிருந்தார்.[8]() 1968-ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு விலையுயர்ந்த மாளிகை வீட்டிற்கு அவர் இடம் பெயர்ந்தார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1970களின் பிற்பகுதியில் சுமார் 10 லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

"அவரது மனிதவள நிர்வாகத் திறன் அபாரமானது. அவர் எப்போதும் 'திறந்த கதவு' கொள்கையைப் பின்பற்றினார். ஊழியர்கள் அவரது அறைக்குள் சென்று தங்களது பிரச்சினைகளை அவருடன் நேரடியாக விவாதிக்க முடியும். ஊழியர்களோ, பங்குதாரர்களோ, பத்திரிகையாளர்களோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ யாராயிருந்தாலும் சரி, வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு என தனி வகை கையாளும் முறைகளை அம்பானி கொண்டிருந்தார்.” என்று ஆசியா டைம்ஸ் மேற்கோளிடுகிறது[2]: அதிகாரிகளை விலைக்கு வாங்கி சட்டங்களை தனக்கு பொருந்தும் வகையில் மாற்றி எழுதிக் கொண்டார் என அம்பானியின் போட்டியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வணிகம் தொடங்கிய நாட்களையும், இந்திய அதிகார மைய கட்டுப்பாடுகள் அப்போது இருந்த குறைபாடுகளுடனான அமைப்பை பயன்படுத்தி பொருளீட்டும் கலையில் அவர் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பதையும் அவர்கள் நினைவு கூறுகின்றனர். மிளகாயை அவர் ஏற்றுமதி செய்தார், பல சமயங்களில் இதில் நஷ்டம் தான் இருக்கும், மறுநிரப்பல் உரிமங்களை ரேயான் இறக்குமதி செய்ய அவர் பயன்படுத்திக் கொண்டார். பின் ரேயான் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட துவங்கிய பின், மீண்டும் அவர் ரேயான் ஏற்றுமதி செய்தார், இதுவும் நஷ்டத்தில் செய்து நைலானை இறக்குமதி செய்தார். அம்பானி எப்போதும் தனது போட்டியாளர்களை விட ஒரு அடி முன்னால் நின்றார். அவர் இறக்குமதி செய்த பொருட்களுக்கு பெரும் தேவை இருந்ததால், அவரது லாப விழுக்காடு 300 சதவீதத்துக்கு குறைவது என்பதே அரிதாகத் தான் நிகழ்ந்தது."

ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ்தொகு

துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார். துணிகள் பாலியஸ்டர் இழை நூல் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன.[3] திருபாய் "விமல்" என்னும் வியாபாரப் பெயரை தொடக்கி வைத்தார். இது அவரது மூத்த சகோதரரான ரமனிக்லால் அம்பானியின் மகனான விமல் அம்பானியின் பெயரால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டில் செய்த மிகப் பரந்த சந்தைப்படுத்தலின் காரணமாக "விமல்" வீட்டுக்கு வீடு அறிந்த பெயரானது. சில்லறை விற்பனை உரிமையகங்கள் துவங்கப்பட்டன. அவை "ஒன்லி விமல்" என விமல் டெக்ஸ்டைல் வியாபாரப் பெயரை மட்டும் விற்கப் பயன்படுத்தப்பட்டன. 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது."வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது" என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது.[4]'

பொதுப் பங்கு வெளியீடுதொகு

இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது. 1977-ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 58,000 க்கும் அதிகமான சிறு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாவது லாபகரமானது என்று குஜராத்தின் கிராமப் பகுதிகளின் ஏராளமான சிறு முதலீட்டாளர்களை திருபாயால் நம்பச் செய்ய முடிந்தது.

ஆண்டுப் பொதுக் கூட்டங்களை விளையாட்டு அரங்கங்களில் நடத்திய முதல் தனியார் துறை நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் தான். 1986-ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கிராஸ் மெய்டன், மும்பையில் நடந்தது. இதில் 35,000 க்கும் அதிகமான பங்குதாரர்களும், ரிலையன்ஸ் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

முதல்முறையாக முதலீடு செய்யும் பெரும் எண்ணிக்கையிலான சில்லறை முதலீட்டாளர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்யும் வகையில் திருபாய் அம்பானியால் நம்பிக்கையேற்படுத்த முடிந்தது.

1980களின் ஆரம்பத்தில் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

திருபாயின் கட்டுப்பாட்டில் பங்குச் சந்தைதொகு

1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது.[5] தங்களது பங்கு விலைகள் ஒரு இம்மியளவு கூடக் குறையாத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. வாய்ப்பை உணர்ந்த, கரடிச் சந்தையில் லாபமீட்டும் கல்கத்தாவைச் சேர்ந்த பங்குத் தரகர்கள் குழு ஒன்று ரிலையன்ஸ் பங்குகளை அதிக விலையில் விற்று பின் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் கையிருப்பிலில்லாமல் விற்கத் துவங்கியது. இதனை எதிர்கொள்ள, மற்றுமொரு பங்குத் தரகர்கள் குழு - இன்று வரை இவர்கள் "ரிலையன்ஸின் நண்பர்கள்" என்று தான் குறிப்பிடப்படுகிறார்கள் - மும்பை பங்குச் சந்தையில் கையிருப்பு இல்லாத நிலையில் விற்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கத் துவங்கினர்.

காளைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய போதுமான பணம் இல்லாது போய் விடும். அப்போது அவர்கள் மும்பை பங்குச் சந்தையின் "பத்லா" வர்த்தக ஏற்பாட்டுக்கு தயாராய் இருப்பார்கள். இதன் அடிப்படையில் தான் கரடிச் சந்தையில் லாபமீட்டும் கூட்டம் பங்குகள் கையில் இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருந்தது. காளைகள் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். பரிமாற்ற நிறைவுத் தேதி வரையிலும் ஒரு பங்கு ரூ. 152 என்கிற நிலையே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது. நிறைவுத் தேதியில், காளைகள் பங்குகளின் பத்திரங்களை சமர்ப்பிக்க கோரியபோது இந்த கரடிச்சந்தை லாபமீட்டும் குழு திகைத்துப் போனது. ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியிருந்த பங்குத் தரகர்களுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை திருபாய் அம்பானியே வழங்கினார். பங்கு பத்திரங்களை வழங்க முடியாத நிலையில், காளைகள் "அன்பத்லா" (அபராதத் தொகை) தொகையாக பங்குக்கு ரூ.35 கோரினர். இதனால், பங்குகளின் தேவை அதிகரித்து, ரிலையன்ஸ் பங்குகளின் விலை சில நிமிடங்களிலேயே 180 ரூபாய்க்கும் அதிகமாய் விட்டது. இந்த வர்த்தகமானது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருபாய் அம்பானி பங்குச் சந்தைகளின் முடிசூடா மன்னராகியிருந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மோதுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை தனது எதிர்ப்பாளர்களுக்கு அவர் நிரூபித்தார்.

இந்த சூழ்நிலைக்கு ஒரு தீர்வினைக் காண, பம்பாய் பங்குச் சந்தை மூன்று வணிக நாட்களுக்கு மூடப்பட்டது.மும்பை பங்குச் சந்தை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, கரடிச் சந்தையில் லாபமீட்டும் குழு பங்குகளை அடுத்த சில நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் "அன்பத்லா" தொகையை பங்குக்கு ரூ.2 என குறைத்தனர். இதனால் அதிகமான விலை அளவுகளில் சந்தையில் இருந்து ரிலையன்ஸ் பங்குகளை வாங்கும் நெருக்கடி கரடிச்சந்தையில் லாபமீட்டும் குழுவுக்கு நேர்ந்தது. அத்துடன் திருபாய் அம்பானியே அந்த குழுவுக்கு பங்குகளை அதிகமான விலையில் வழங்கி கனமான ஆதாயம் ஈட்டினார் என்பதும் பிறகு தெரிய வந்தது.[6]

இந்த நிகழ்விற்கு பிறகு, அவரது எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வரை நூல் வணிகம் செய்து கொண்டிருந்த ஒருவர் எப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் இவ்வளவு பெரும் பணத்தைப் புரட்ட முடிந்தது என்பதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கான பதிலை அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வழங்கினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1982-83 காலத்தில் ரிலையன்ஸில் ரூ.22 கோடியை முதலீடு செய்திருந்ததாக அவையில் அவர் தெரிவித்தார். குரோக்கடைல், லோட்டோ மற்றும் ஃபியாஸ்கோ ஆகிய பல நிறுவனங்கள் வழியாக அவர்களது முதலீடுகள் திருப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சுவையான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்கள் அல்லது முதலாளிகளின் துணைப்பெயர்களும் ஷா என ஒரேபெயரில் முடிவதாய் இருந்தது. இந்த விடயம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட விசாரணை ரிலையன்ஸ் அல்லது அதன் முக்கிய பங்குதாரர்கள் எந்த முறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தீர்மானித்தது.[7]

பல்வகைப்படுத்துதல்தொகு

காலப் போக்கில், திருபாய் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். முதன்மையான சிறப்புக்கவனம் பெட்ரோலிய வேதிகள் துறையில் இருக்க, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தப்பட்டது.

விமர்சனம்தொகு

அவர் மீது முறையற்ற செயல்களில் ஈடுபட்டார், அரசாங்க கொள்கைகளை தனது சொந்த தேவைகளுக்கு ஏற்ற வகையில் சாதகமாக்கிக் கொண்டார், அரசாங்க தேர்தல்களில் மன்னர்களைப் படைக்கும் ஆற்றலுடன் செயல்பட்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் உண்டு [8]. அனேக ஊடகங்கள் வணிக-அரசியல் தொடர்பு குறித்து பேச முற்படுகின்றன என்றாலும், நாடெங்கிலும் புயல் கிளப்பும் ஊடகப் புயல்களில் இருந்து எப்போதும் அம்பானியின் வணிகக்குடும்பம் கூடுதல் பாதுகாப்பையும் ஆதரவையும் பெற்று வந்திருக்கிறது.

நஸ்லி வாடியா உடனான மோதல்தொகு

பாம்பே டையிங் நிறுவனத்தின் நஸ்லி வாடியா, ஒரு சமயத்தில் திருபாய் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கான மிகப்பெரும் போட்டியாளராகத் திகழ்ந்தார். நஸ்லி வாடியா மற்றும் திருபாய் இருவருமே அரசியல் வட்டங்களில் தங்கள் செல்வாக்கிற்கும், தாராளமயமாக்கலுக்கு முந்தைய பொருளாதார காலகட்டத்தில் மிகக் கடினமான உரிமங்களையும் பெறும் திறனிற்கும் நாடறிந்தவர்களாக இருந்தனர்.

1977 - 1979 இடையிலான ஜனதா கட்சி ஆட்சியின் போது, ஆண்டுக்கு 60,000 டன்கள் டை-மெத்தில் டெரப்தலேட் (DMT) தயாரிக்கும் ஆலையை நிறுவுவதற்கான அனுமதியை நஸ்லி வாடியா வாங்கினார். எண்ணக் கடிதம் உரிமமாக மாறுவதற்கு முன்பே, பல தடைகள் அவருக்கு முன் தோன்றத் துவங்கின. இறுதியாக, 1981 ஆம் ஆண்டில், நஸ்லி வாடியாவுக்கு ஆலைக்கான உரிமம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் இரு தரப்புக்கும் இடையே ஒரு வினையூக்கியாக செயல்பட்டு போட்டியை இன்னும் மோசமாக்கியது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைகள்தொகு

ஒரு சமயத்தில், ராம்நாத் கோயங்கா திருபாய் அம்பானியின் நண்பராக இருந்தார். ராம்நாத் கோயங்கா நஸ்லி வாடியாவுக்கும் நண்பராகக் கருதப்பட்டார். பல சந்தர்ப்பங்களில், இரண்டு போட்டி தரப்புகளுக்கும் இடையில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவர ராம்நாத் கோயங்கா முயற்சி செய்தார். அம்பானியின் முறைகேடான வணிகப் பழக்கங்களும், அவரது சட்டத்திற்கு புறம்பான செயல்களும் கோயங்காவுக்கு நிறுவனத்தில் சரியான உரிய பங்கினை கிடைக்கச் செய்யாமல் செய்தது தான் கோயங்காவும் அம்பானியும் எதிரிகளாவதற்கு முக்கிய காரணம் எனப்பட்டது. பிற்காலத்தில், ராம்நாத் கோயங்கா நஸ்லி வாடியாவை ஆதரிக்க முடிவு செய்தார். ஒரு சமயத்தில், "நஸ்லி ஒரு ஆங்கிலேயர். அவரால் அம்பானியைக் கையாள முடியாது. நான் ஒரு வணிகன். அவரை எப்படி முடிப்பது என்பது எனக்குத் தெரியும்...." என்று ராம்நாத் கோயங்கா கூறியதாகக் கூறப்படுகிறது.

நாட்கள் செல்லச் செல்ல, அவர் வெளியிட்ட அகலத்தாள் நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அம்பானிக்கு எதிரான தொடர்ச்சியான பல கட்டுரைகளைத் தாங்கி வரத் துவங்கியது. அவற்றில் திருபாய் லாபத்தை அதிகப்படுத்த முறையற்ற வணிக முறைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் புலன்விசாரணைக்கு தனது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர்களை ராம்நாத் கோயங்கா பயன்படுத்தவில்லை. மாறாக தனது நெருங்கிய நண்பர், ஆலோசகர் மற்றும் பட்டய கணக்காளரான எஸ்.குருமூர்த்தியை இந்த பணிக்காக அவர் நியமித்தார். எஸ். குருமூர்த்தி தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர் பட்டியலில் இல்லாத இன்னுமொரு பத்திரிகையாளரான மானெக் தவாரும் செய்திகளை பங்களிக்கத் தொடங்கினார். அம்பானிகளுக்கு எதிரான ஜம்னாதாஸ் மூர்ஜானி என்னும் தொழிலதிபரும் இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக இருந்தார்.

அம்பானி மற்றும் கோயங்கா இருவருமே சமூகத்தின் பிரிவுகளால் விமர்சிக்கப்படவும் செய்தனர், பாராட்டப்படவும் செய்தனர். தனிநபர் பகைக்காக ஒரு தேசியப் நாளேட்டை பயன்படுத்துவதாக கோயங்காவை மக்கள் விமர்சித்தனர். இதைவிட மோசமான முறையற்ற, சீர்கேடான நடைமுறைகளைப் பின்பற்றிய தொழிலதிபர்கள் நாட்டில் இன்னும் பலர் இருந்தனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு அம்பானியை மட்டுமே கோயங்கா இலக்காகக் கொள்வதாக விமர்சகர்கள் நம்பினர். இந்த கட்டுரைகளை தனது வழக்கமான ஊழியர்களின் உதவியின்றியே வெளியிடும் திறன் குறித்து கோயங்காவை விமர்சகர்கள் பாராட்டவும் செய்தனர். இதனிடையில் திருபாய் அம்பானியும் கூடுதலான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுக் கொண்டிருந்தார். திருபாயின் வணிக நுட்பத்தையும், அமைப்பினை தனது விருப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் அவரது திறனையும் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போற்றத் துவங்கினர்.

திருபாய் அம்பானி முடக்கு நோயால் பாதிக்கப்பட்ட பின் தான் இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது. திருபாய் அம்பானி சான் டியகோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது பிள்ளைகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் வணிகத்தை கவனித்துக் கொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ரிலையன்ஸுக்கு எதிராக தனது கணைகளைத் திருப்பியிருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தண்டிக்காததற்கு அது அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம் சாட்டியது. வாடியா - கோயங்கா மற்றும் அம்பானிகளுக்கு இடையிலான யுத்தம் ஒரு புதிய திசையை எட்டி தேசிய நெருக்கடியானது. குருமூர்த்தியும் மற்றுமொரு பத்திரிகையாளரான முல்கோகரும் ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் உடன் பேசிவைத்துக் கொண்டு, பிரதமருக்கு அவர் சார்பாக ஒரு கடுமையான கடிதத்தையும் எழுதிக் கொடுத்தனர். ஜனாதிபதியின் கடித வரைவினை ஒரு பரபரப்பு செய்தியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. ஆனால் ராஜீவ் காந்திக்கு அனுப்பும் முன்னர் ஜெயில் சிங் தனது கடிதத்தில் மாற்றங்கள் செய்திருந்ததை பத்திரிகை உணரவில்லை. இந்த புள்ளியில் தான் அம்பானி இந்த சண்டையில் வெற்றி பெற்றார். இப்போது, மோதல் நேரடியாக பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ராம்நாத் கோயங்காவுக்கும் இடையில் என்றானது. அம்பானி சத்தமில்லாமல் வெளியில் சென்று விட்டார். பின் அரசாங்கம் டெல்லியின் சுந்தர் நகரில் இருந்த எக்ஸ்பிரஸ் விருந்தினர் இல்லத்தில் சோதனை செய்து, திருத்தங்களுடனான மூல வரைவினை முல்கோகரின் கையெழுத்தில் கண்டுபிடித்தது. 1988-89 வாக்கில், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு எதிரான ஏராளமான வழக்குகள் மூலம் ராஜீவின் அரசாங்கம் பதிலடி கொடுத்தது. அதன்பின்னும் கூட, கோயங்கா தனது மதிப்புமிகுந்த உருவத்தை தொடர்ந்து கொண்டிருக்க முடிந்ததென்றால், அதன் காரணம் பலருக்கு அவசரநிலை பிரகடனத்தின் போது [மேற்கோள் தேவை] அவரது துணிச்சலான எதிர்ப்புநிலை கண்முன் தோன்றியதே காரணம்.

திருபாய் மற்றும் வி.பி.சிங்தொகு

ராஜீவ் காந்திக்கு பிறகு இந்தியாவின் பிரதமரான விஸ்வநாத் பிரதாப் சிங் உடன் திருபாய்க்கு சுமூகமான உறவுகள் இருக்கவில்லை. 1985-ஆம் ஆண்டில், தூய்மைப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்வதை திறந்த பொது உரிம வகையில் இருந்து வி.பி.சிங் திடீரென்று நிறுத்தி விட்டார். பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தியில் இது ஒரு வெகு முக்கிய மூலப்பொருளாகும். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு செயல்பாடுகளைத் தொடர்வதை இது கடினமாக்கியது. அரசாங்க ஆணை விநியோகிக்கப்படும் நாளன்று ஒரு முழு ஆண்டிற்கு தேவையான தூய்மை படுத்தப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்ய தேவையான கடன்தொகை உத்தரவாத கடிதத்தை பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் ரிலையன்ஸ் பெற்று விட்டது.

1990-ஆம் ஆண்டில், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் செய்த முயற்சிகளுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அரசு நிறுவனங்கள் முட்டுக்கட்டை போட்டன. தோல்வியை உணர்ந்த அம்பானிகள், நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து இராஜினாமா செய்தனர். 1989 ஏப்ரலில் எல்&டி தலைவர் ஆகியிருந்த திருபாய் தனது பதவியை ராஜினாமா செய்ய, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாயவின் முன்னாள் தலைவரான டி.என். கோஷ் தலைவரானார். திருபாயின் வரி ஏய்ப்பினை கண்டுபிடித்ததன் நேரடியான விளைவு தான் வி.பி.சிங் பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டது என்றும் கருதப்படுகிறது.

இறப்புதொகு

ஜூன் 24, 2002 அன்று ஒரு பெரும் மாரடைப்பு திருபாய் அம்பானியைத் தாக்கியது. மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு இரண்டாவது மாரடைப்பு. பிப்ரவரி 1986-ஆம் ஆண்டில் வந்திருந்த முதலாவது மாரடைப்பில் அவரது வலது கை செயலிழந்திருந்தது. ஒரு வாரத்திற்கும் அதிகமாக சுயநினைவற்ற நிலையில் இருந்த அவர் ஜூலை 6, 2002 அன்று இரவு சுமார் 11.50 (இந்திய நேரம்) மணியளவில் காலமானார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் வணிகத் துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான சாதாரண மக்களும் கலந்து கொண்டனர். அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஜூலை 7, 2002 அன்று மும்பையின் சந்தன்வாடி சுடுகாட்டில் மாலை சுமார் 4:30 மணியளவில் (இந்திய நேரம்) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

அவருக்கு கோகிலாபென் அம்பானி என்னும் மனைவியும், முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகிய இரண்டு மகன்களும், நீனா கோத்தாரி மற்றும் தீப்தி சல்கோன்கர் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

பம்பாயில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராகத் தான் திருபாய் அம்பானி தனது நெடும் பயணத்தைத் துவக்கினார். இந்த வணிகப்புலிக்கு மரியாதையளிக்கும் விதமாக, மும்பை துணி வணிகர்கள் ஜூலை 8, 2002 அன்று கடையடைப்பு செய்திருந்தனர். திருபாய் இறந்த சமயத்தில், ரிலையன்ஸ் குழுமம், மொத்த விற்றுமுதலாய் ரூ.75,000 கோடி அல்லது 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டிருந்தது. 1976-77 காலத்தில், ரிலையன்ஸ் குழுமம், ஆண்டு விற்றுமுதலாக ரூ.70 கோடியை மட்டுமே கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது. அத்துடன் திருபாய் வெறும் ரூ.15,000(US$350) கொண்டே தனது வணிகத்தைத் துவக்கினார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

திருபாய்க்கு பின் ரிலையன்ஸ்தொகு

2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், முகேஷ் அம்பானி அளித்த ஒரு நேர்காணலில், சகோதரர் அனில் அம்பானியுடன் தனக்கு "உரிமைத்துவ சிக்கல்கள்" விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இந்த கருத்துவேறுபாடுகள் "தனிப்பட்டு மனதளவில்" மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். தொழில்முறையில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வலிமைமிகுந்த நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில், இந்த கருத்துவேறுபாடு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விடயம் ஊடகங்களில் விரிவான இடத்தைப் பிடித்தது.[9]

அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பராகத் திகழ்ந்த ஐசிஐசிஐ வங்கி[10] யின் நிர்வாக இயக்குநரான குண்டபூர் வாமன் காமத், இந்த பிரச்சினையைத் தீர்க்க உதவுபவராக ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார். பிரச்சினையை தீர்ப்பதில் சகோதரர்கள் தங்கள் தாய் கோகிலாபென் அம்பானி மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். ஜூன் 18, 2005 அன்று, சொத்துபிரிப்பை ஒரு செய்திக் குறிப்பு வழியாக கோகிலாபென் அம்பானி அறிவித்தார்.

ரிலையன்ஸ் குழுமம் அம்பானி சகோதரர்கள் இடையே பிரிக்கப்பட்டது. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) மற்றும் இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்பரேஷன் நிறுவனம் (IPCL) கிடைத்தது. அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்களுக்குத் தலைவரானார். முகேஷ் அம்பானி தலைமையிலான குழுமம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட, அனிலின் குழுமம், அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG) என்று பெயரிடப்பட்டது.

திரைப்படத்தில்தொகு

திருபாய் அம்பானியின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட திரைப்படம் 12, ஜனவரி 2007 அன்று வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த குரு (2007-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்) என்னும் இந்தித் திரைப்படம், ஒரு மனிதன் இந்திய வணிக உலகில் தனது முத்திரையை பதிக்க எங்ஙனம் போராடுகிறான் என்பதை கற்பனையாக சக்தி குரூப் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கொண்டு காட்டுகிறது. இந்த படத்தில் அபிஷேக் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா ராய், மாதவன், மற்றும் வித்யா பாலன் நடித்திருந்தனர். திரைப்படத்தில், அபிஷேக் பச்சன், குரு காந்த் தேசாய் என்னும் பாத்திரத்தை ஏற்றிருந்தார். இது திருபாய் அம்பானியின் குணநலனை ஒத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிதுன் சக்ரவர்த்தி ஏற்றிருந்த மானிக்தா வேடம் உண்மை வாழ்க்கையில் ராம்நாத் கோயங்காவை ஒத்திருந்தது. இந்தியா இதுவரை கண்டவற்றில் மிக உக்கிரமான பெருநிறுவன மோதலில் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக கடும் தாக்குதல்களைத் தொடுப்பதில் முன்னிலை வகித்து தேசிய அளவில் புகழ்பெற்ற எஸ்.குருமூர்த்தியை மாதவன் ஏற்றிருந்த பாத்திரம் பிரதிபலித்தது.

குரு காந்த் தேசாய் என்கிற பாத்திரத்தின் உதவியுடன் திருபாய் அம்பானியின் வலிமையையும் இந்த படம் சித்தரிக்கிறது. "குருபாய்" என்று படத்தில் அபிஷேக் பச்சனுக்கு கொடுக்கப்படும் பெயரும், உண்மை வாழ்க்கையின் "திருபாய்" பெயரை ஒத்ததாக இருந்தது.

விருதுகளும் அங்கீகாரங்களும்தொகு

 • நவம்பர் 2000 - இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கெம்டெக் பவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வேர்ல்டு அமைப்புகள் அவருக்கு 'நூற்றாண்டின் சிறந்த மனிதர்' விருதினை வழங்கின.
 • 2000, 1998 மற்றும் 1996 - ஆசியாவீக் இதழ் வெளியிட்ட 'பவர் 50 -ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்' பட்டியலில் இடம்பெற்றார்.
 • ஆகஸ்டு 2001 - வாழ்நாள் சாதனை க்காக தி எகனாமிக் டைம்ஸ் பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டுக்கான விருது வழங்கியது.
 • இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு (FICCI), திருபாய் அம்பானியை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக த் தேர்வு செய்தது.
 • டைம்ஸ் ஆஃப் இந்தியா 2000-ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று அவரை "நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக" தேர்வு செய்தது.

பிரபல மேற்கோள்கள்தொகு

துவக்கத்தில் இருந்தே திருபாய் மிகுந்த மரியாதைக்குரியவராகவே பார்க்கப்பட்டார். பெட்ரோலிய-வேதித் துறையில் அவரது வெற்றியும் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்த அவரது கதையும் இந்திய மக்களின் மனதில் அவரை ஒரு அடையாள வடிவமாக நிறுத்தியிருக்கிறது. ஒரு வணிக அதிபரின் குணநலத்துடன், அவர் ஒரு சிறந்த ஊக்குவிப்பாளராகவும் இருந்தார். அவர் பொதுக் கூட்ட உரைகள் சிறிய அளவில் தான் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அவர் ஆற்றிய உரைகள் மிகுந்த மதிப்புடன் இன்னமும் கூட நினைவுகூறப்படுகின்றன.

 • "இளைஞர்களுக்கு முறையான சூழலைக் கொடுங்கள். அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களுக்கு தேவையான ஆதரவை அளியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வரம்பற்ற ஆற்றல் உள்ளது. அவர்கள் நடத்திக் காட்டுவார்கள்."
 • "நாங்கள் மக்கள் மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்."
 • "காலக்கெடுக்களை பூர்த்தி செய்வது மட்டும் போதாது. காலக்கெடுக்களை வெல்ல வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு."
 • "மனம் தளரக் கூடாது, துணிச்சல் தான் உள்ள ஊக்கம்." '
 • "நம்மால் ஆள்பவர்களை மாற்ற முடியாது. ஆனால் அவர்கள் நம்மை ஆளும் விதத்தை நாம் மாற்ற முடியும்." '
 • "திருபாய் ஒருநாள் போய் விடுவார். ஆனால் ரிலையன்ஸின் ஊழியர்களும் பங்குதாரர்களும் அதனை பாதுகாப்பார்கள். ரிலையன்ஸ் என்பது அம்பானிகளை நம்பியிராத ஒரு தத்துவமாக இப்போது ஆகியிருக்கிறது."

அங்கீகாரமில்லா வாழ்க்கை வரலாறுதொகு

தூரக் கிழக்கு பொருளாதார மறுஆய்வு க்கான டெல்லி கழகத் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்த ஹமிஷ் மெக்டொனால்டு, அம்பானியின் அதிகாரப்பூர்வமற்ற வாழ்க்கை வரலாற்றை தி பாலியஸ்டர் பிரின்ஸ் என்ற நூலாக 1998 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதில் அவரது சாதனைகள் மற்றும் குறைபாடுகள் இரண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டால் தாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாக அம்பானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.[11]

குறிப்புதவிகள்தொகு

 1. Imprints of a demi-god, Dhirubhai Ambani, By Bina Udeshi ஒரு தெய்வப்பிறவியின் சுவடுகள், திருபாய் அம்பானி, பினா உதேசி ஃப்ரீ பிரஸ் ஜர்னல், ஜூலை 24, 2002
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-07-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. இந்திய ஜாம்பவான்கள், திருபாய் அம்பானி. அணுகல் அக், 28. 2006.http://muraleedharan.tripod.com/legends_dhirubhaiambani.html
 4. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிட்.ல் திருபாய் அம்பானியின் ஒரு சிறு வாழ்க்கை வரலாறு (PDF File) http://www.reliancecommunications.co.in/Communications/Aboutus/pdf/ShortBiography.pdf பரணிடப்பட்டது 2007-10-31 at the வந்தவழி இயந்திரம்
 5. திருபாய் அம்பானியின் இரண்டு முகங்கள், ஆசிரியர் பரன்ஜாய் குஹா தகுர்தா http://www.india-seminar.com/2003/521/521%20paranjoy%20guha%20thakurta.htm
 6. பெரும் இந்திய ஊழல், ரூ. 4000 கோடி தொலைந்த கதை, ஆசிரியர் எஸ்.கே.பரூவா மற்றும் ஜே.எஸ்.வர்மா (ISBN 81-7094-128-8) ப 16 & 17
 7. இந்த போராளிக்கு, வாழ்க்கை என்பது ஒரு பெரும் போராட்டம், ரீடிப்.காமில் மனாஸ் சக்ரவர்த்தி [1] "இது போன்ற நடைமுறைகளால் தான் ஏழைகளை அவர்களது நிலையிலேயே வைத்திருந்து தனது பாக்கெட்டுகளை நிரப்புவது தான் திருபாயின் தத்துவம்" என்று பின்னர் கூறப்பட்டது.
 8. ரிமெம்பரிங் தி பிரின்ஸ் ஆஃப் பாலியஸ்டர் http://www.time.com/time/asia/magazine/article/0,13673,501020722-320795,00.html பரணிடப்பட்டது 2008-11-23 at the வந்தவழி இயந்திரம்
 9. அனிலுடன் கருத்துவேறுபாட்டை ஒப்புக் கொள்கிறார் முகேஷ் அம்பானி - http://in.rediff.com/money/2004/nov/18ril.htm
 10. ரிலையன்ஸ் நாடகத்தின் முக்கிய பாத்திரங்கள்: கே.வி.காமத் http://specials.rediff.com/money/2005/jun/21sld3.htm
 11. அம்பானி: அனைத்து பருவங்களுக்குமான ஒரு வியாபார சக்கரவர்த்திhttp://www.atimes.com/atimes/south_asia/DG09Df01.html பரணிடப்பட்டது 2009-07-15 at the வந்தவழி இயந்திரம்

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருபாய்_அம்பானி&oldid=3509841" இருந்து மீள்விக்கப்பட்டது