திருமயம் பாறை ஓவியங்கள்
திருமயம் பாறை ஓவியங்கள் என்பன, தமிழ் நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரின் மலைக்கோட்டையில் உள்ள பாறையில் தீட்டப்பட்ட ஓவியங்களைக் குறிக்கும். இந்த ஓவியங்கள் 5000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.[1]கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட சித்தன்னவாசல் சுவரோவியங்களை விட திருமயம் பாறை ஓவியங்கள் பழமையானவை.[2]
திருமயம் கோட்டையில் பாறை ஓவியங்கள்
தொகுஇந்தப் பாறை ஓவியங்கள் இப்போதுதான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது என்றும், புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையைக் காட்ட உதவும் முதன்மையான ஆதாரமாகும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தெரிவித்துள்ளார்.[3][2] [4]
மலைக்கோட்டையின் நுழைவாயிலுக்குள் நுழைந்தவுடன் வலது புறத்தில் தலைப்பாகை அல்லது தொப்பி வடிவப் பாறையைக் காணலாம். இப்பாறையின் மேற்குப் பக்கத்தின் கீழ்பகுதியில் மங்கலாக சில ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியத்தின் செய்தியினை அறிய முடியவில்லை.[4] தென்புறம் ஓர் ஆணும் பெண்ணும் படுத்திருப்பது போல ஓர் ஓவியம் காணப்படுகிறது.[3][2][4]
வேறொரு ஓவியத்தின் கீழ்ப்பகுதியில், சில உருவகங்கள் இசைக்கருவிகள் வாசிப்பதற்கேற்ப மற்றவர்கள் ஆடுகின்றனர். ஓர் ஆணும் பெண்ணும் கைகோர்த்தபடி ஆடுகிறார்கள். அருகே இருவர் இசைக்கருவியை இசைத்தவாறு ஆடுகின்றனர்.[2] தலையில் ஒருவர் குஞ்சம் அணிந்தும் மற்றொருவர் அமர்ந்த நிலையில் மத்தளம் போன்ற இசைக்கருவியை இசைத்தவாறு காணப்படுகின்றனர். இந்த ஆட்டத்தை காண்பது போல தோன்றும் வண்ணம் ஒரு பெரிய காணப்படுகிறது. இது இங்கு வாழ்ந்திருந்த கூட்டத்தின் தலைவியைக் குறிப்பிடலாம்.[3][4]
பாறையின் கிழக்குப் பக்கத்தில் காணப்படும் மங்கலான ஓவியத்தில் சண்டையிடுதல் அல்லது வேட்டையாடுதல் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.[4]
மற்றொரு ஓவியத்தில் மனிதன் விலங்கின் மீது மனிதன் அமர்ந்த நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு விலங்கு நீண்ட உருவமாக வரையப்பட்டுள்ளது. இது இடம் விட்டு இடம் பெயர்வதைக் காட்டும் ஓவியம் என்று கருதப்படுகிறது.[3][4] பாறையின் வடக்குப்பக்கத்தில் உள்ள ஓவியத்தில் பல மனித உருவங்கள் காணப்படுகின்றன. ஒரு பெண்ணைப் பின்பற்றி ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து வருவதைப் போலவும், நிற்பது போலவும் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.[3][2][4]
திருமயம் குன்றின் தென்புறத்தில் உள்ள சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் இடையே உள்ள குகையின் மேற்புறத்தில் சில பாறை ஓவியங்களை கண்டதாக அருள்முருகன் கூறியுள்ளார்.[2][3][4] மேலே குறிப்பிட்ட பாறை ஓவியங்கள் செந்நிற வண்ணத்தில் மட்டுமே வரையப்பட்டுள்ளது என்றும் அடர்த்தியான வண்ணப்பூச்சும் கோட்டு உருவங்களும் சில ஓவியங்களில் காணப்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.[3][4]
கால அளவீடு
தொகு"தாய்வழிச் சமுதாயம், வேட்டையாடுதல், கல்லாயுதம் பயன்பாடு, சக்கரத்துக்கு முந்தைய விலங்கின் மீது ஏறிச்செல்லுதல், ஆடல் கலை ஆகியவற்றிலிருந்து திருமயம் பாறை ஓவியங்கள் கி.மு. 5 ஆயிரத்துக்கும் முற்பட்டது" என்று அருள்முருகன் கருதுகிறார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ An Iron Age-Early Historic Motif on the Rock Paintings of Tamil Nadu Veerasamy Selvakumar in Rock Art::Recent Researches and New Perspectives (Festschrift to Padma Shri. Dr. Yashodhar Mathpal). Vol. II Ajit Kumar (ed). Delhi, New Bharatiya Book Corporation 457-460.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Ancient rock murals found in Tamil Nadu's Pudukottai district NDTV November 22, 2013
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Rural murals throw light on life in old Pudukottai Deccan Chronicle November 23, 2013
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 திருமயம் கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு மோகன்ராம் தினமணி நவம்பர் 22, 2013