திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் (ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்)
புவியியல் ஆள்கூற்று:8°28′58″N 76°56′37″E / 8.482785°N 76.943692°E / 8.482785; 76.943692
பெயர்
பெயர்:திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் (ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்)
அமைவிடம்
ஊர்:திருவனந்தபுரம்
மாநிலம்:கேரளா
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ பத்மனாபசுவாமி (விஷ்ணு)
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
வரலாறு
வலைதளம்:http://sreepadmanabhaswamytemple.org/

வரலாறு

தொகு

இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து, பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பொ.ஊ. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12008 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.[1]

ராஜாவின் தானப் பட்டயம்

தொகு

பொ.ஊ. 1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்பட்டனர்.[1] இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.

தல வரலாறு

தொகு
 
பத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.
 
பத்மனாப தீர்த்தம்

வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், "உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு' எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, ""பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், "இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் "உண்ணிக் கண்ணனாக' இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. "பத்மநாப சுவாமி' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

 
கோவில் முன்புள்ள சாலை

சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர், மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து "குஞ்சு தம்பிகளை" போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந்த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12008 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாபன் விக்ரகம் 18 அடி நீளம் உடையது குறிப்பிடத்தக்கது.

இதிகாச புராணம்

தொகு

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக சகந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன.இந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.

வேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.

அதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்படுகிறது.

கோயில் சிறப்பம்சம்

தொகு

மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.

பத்மதீர்த்ததிற்கு அருகில், திராவிடக் கட்டிடக்கலை மரபில் 7 அடுக்குக் கொண்ட கோபுரமும், அக்கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவினதாக இருக்கின்றது.

இறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது. திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றும் ஸ்ரீ பத்மநாபர் போற்றப்படுகிறார்.

108 திவ்ய தேசங்களில், அதாவது மகாவிஷ்ணுவுன் மிகவும் புனிதமான கோவில்களில், விஷ்ணுவின் விக்ரகம் மூன்று நிலைகளில் பொதுவாக ஒரு நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ அல்லது சயனித்துக் கொண்டோ இருப்பதாகக் காணலாம். ஆனால் குறிப்பாக பத்மநாபசுவாமி கோவிலில் மட்டும் ஈசன் மூன்று நிலைகளிலும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். கர்பக் கிரகத்தில் இருக்கும் மூலவரை மூன்று வாதில்களில் இருந்து பார்க்கும் பொழுது அவர் சயனித்துக் கொண்டும், நடு வாயில் வழியாகப் பார்க்கும் பொழுது ஈசன் நின்று கொண்டும், மேலும் உற்சவங்களின் பொழுது திரு வீதி உலாவில் பல்லக்கில் கொண்டு செல்லும் உற்சவ மூர்த்தி அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்.

அண்மையில் வெளியான ஒரு உண்மை என்ன என்றால், இறைவன் பத்மனாபரின் விக்ரகம் முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும். இஸ்லாமியர்கள் கோவிலுக்குப் படையெடுத்து அழிப்பதை தவிர்ப்பதற்காகவே காட்டு சர்க்கரை யோகம் என்ற வெளிப்பூச்சு விக்ரகத்தின் மீது பூசியதாக தெரிய வருகிறது. இறைவனின் கிரீடம் மற்றும் குண்டலங்கள், மற்றும் கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய சாலிக்கிராம மாலை மற்றும் அவர் அணிந்திருக்கும் அழக்கான பூணூல் கயிறும் தங்கத்தால் ஆனதே. ஈசனின் மார்பில் காணப்படும் அலங்கார மாலைகள், வலது கரத்தில் பரம சிவரை பாதுகாக்கும் வண்ணம் அமைந்த கங்கணம், இடது கையில் அவர் வைத்திருக்கும் தாமரை மலர் ஆகிய யாவும் தங்கத்தால் ஆனதே. இறைவனின் நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் மிகவும் சுத்தமான தங்கத்தால் இழைத்ததாகும். இறைவனின் திருவடிகளும், தங்கத்தால் ஆனதே.

காட்டு சர்க்கரை யோகம் என்பது மிகவும் கூர் அறிவுடன் செய்யப்பெற்ற மிகவும் அழகான திட்டமாகும், அதன் மூலம் கோவிலை சூறையாட வந்த கூட்டத்தினரின் திசையை திரும்ப வைக்க மேற்கொண்ட திறம் படும் யுக்தியாகும்.

கோவில் கோபுரம்

தொகு

இந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் (அதாவது தாமரைகள் அடங்கிய குளம்) அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும், இங்கே காணப்பெறும் ௩௬௫ மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப் பெற்றதாகும், இவற்றை காணக் கண் கோடி வேண்டும் என்பதே நிஜமாகும். கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோவில் வாசலில் தொடங்கி கோவிலின் கர்பக்கிரஹம் வரைக்கும் இந்த தாழ்வாரம் நீண்டதாக காணப்படுகிறது. தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது. கோபுரத்தின் கீழ்த்தளம் (கிழக்கு வசமுள்ள முதன்மை வாசல்) நாடக சாலை என அறியப்படுகிறது, இங்கே வருடந்தோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கர்பக்கிரகம்

தொகு

கோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகா விஷ்ணு அனந்தன் அல்லது ஆதி செஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் விளங்கும் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஈசரின் வலது கரம் பரமசிவரின் மீது தொங்குவது போல காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம். இந்த சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 10008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தெரிவு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சாலிக்கிராமத்தின் மீது, "காட்டு சர்க்கரை யோகம்" என வழங்கும் ஒரு சிறப்பான ஆயுர்வேத மூலிகைகளின் கலவை பூசி, கொண்டு வரப்பட்டது. இந்தக் காட்டு சர்க்கரை விக்ரகத்தை பூச்சிகள் மற்றும் இதர உயிரினங்கள் ஆண்ட விடாமல் தடுக்கும். இறைவனுக்கு செய்துவரும் அபிசேகமானது பரம்பரை வழி வந்த வழிபாடு அல்ல. தினமும் மலர்களால் இறைவன் அர்ச்சிக்கப் படுகிறார் ஆனால் அபிஷேகத்திற்கு சிறப்பான வேறுபட்ட விக்ரகங்கள் பயன் படுத்தப் படுகின்றன. மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள்.

கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை "ஒற்றைக்கல் மண்டபம்" என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் "ஒற்றைக்கல் மண்டபத்தின்" மீது ஏறவேண்டும். இறைவனை மூன்று வாதில்களில் இருந்து சேவிக்கலாம், - முதல் வாதில் வழியாக இறைவனின் அழகிய திருமுகம் மற்றும் அவர் கையின் அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தையும் நாம் காணலாம், இரண்டாவது வாதில் வழியாக நாம் இறைவனின் நாபியில் இருந்து தாமரை மலரில் எழுந்தருளும் பிரம்ம தேவனையும், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அன்னைமார்களையும், மகா விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகளையும், இதர விக்ரகங்களையும் நாம் காணலாம், மேலும் மூன்றாவது வாதில் வழியாக இறைவனின் திருவடிகளை மனமுவந்து சேவிக்கலாம். இந்த "ஒற்றைக்கல் மண்டபத்தில்" வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகா ராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த "ஒற்றைக்கல் மண்டபத்தில்" இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த மகா ராஜா என்பவர் கூட "பத்மநாப தாசராக", அல்லது இறைவன் மகா விஷ்ணுவின் சேவகனாக, போற்றப்படுகிறான். மதப்பற்று கொண்டுள்ள அனைவரும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஆட்சி புரிவது மகா விஷ்ணுவே ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பிற தெய்வங்கள்

தொகு

இந்துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன, குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஐயப்பர் , ஸ்ரீ கணேஷர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. மேலும் கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை, விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை, மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.

ஸ்ரீ பத்மநாப சுவாமி மகாத்மியம்

தொகு

அனந்த சயனத்தில் காணப்படும் இறைவனின் விக்ரகம் 12008 சாலிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சாலிக்ராமங்கள் தனிப்பட்டவையாகும், ஏன் என்றால் அவை நேபாள நாட்டை சார்ந்ததாகும் மேலும் புனிதமான கண்டகி நதிக்கரையில் இருந்து பெற்றவையாகும், மேலும் ஆடை அலங்காரம் மற்றும் மேள தாளத்துடன் அவற்றை யானைகளில் மேல் வைத்து வழிபட்டுக்கொண்டே இங்கு எடுத்து வரப்பட்டதாகும். இறைவனின் சிலை வடிவத்தின் மீது, அதற்குப் பின்னர், "காடுசர்க்கரை யோகம்", நவரத்தினங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஆயுர்வேதக் கலவை ஆகியவற்றைக் கொண்டு மேல் பூச்சு பூசியதாகும். இறைவன் மீது அளவற்ற பற்று கொண்டவர்கள் இன்றும் இறைவனே நேராக பல முறைகள் எழுந்தருளி திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி இருப்பதாக அடித்துக் கூறுகின்றனர்.

நைவேத்யம்

தொகு

பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யம் பொதுவாக அரிசியால் ஆன பிரசாதம் இங்கு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், அடியார்களின் விருப்பத்திற்கு இணங்க, இதர பிரசாதங்களையும் இறைவனுக்கு படைத்து பிரசாதமாகப் பெறலாம்.
அவற்றில் இரத்தின பாயாசம் என்பது இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைத்த பாயாச வகைகள்.
மேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், நெய்யால் சுவையூட்டியது.
ஒற்றை துலா பாயாசம், பால் மாங்கா, பந்தரனு கலப் பாயாசம், மற்றும் பால் பாயாசம் போன்றவை அனைத்தும் மிகவும் பிரபலமாகும்.
வியாழக்கிழமைகளில், இறைவன் நரசிம்ஹருக்கு சிறப்பான பானக நைவேத்தியம் வழங்கப்பெறும்.
இறைவனுக்கு உண்ணி அப்பம், மோதகம், வேல்லத்துடன்கூடிய அவல் பிரசாதம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்யம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்த தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.
வில்வமங்கலத்து திவாகர அசார்யார் என்ற ஒரு பெரிய முனிவர் ஒரு பழுக்காத மாங்காயை இறைவருக்கு இதே சிரட்டையில் படைத்தார் மேலும் அதே சிரட்டையில் மேலும் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிபாகத்தில் பொதிந்து, இன்று வரை பாதுகாத்து வருகிறது.

நம்மாழ்வார் மங்களாசாசனம்

தொகு

இக்கோயிலில் நம்மாழ்வாரின் பாடல்கள் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே

ராஜாவின் தானப் பட்டயம்

தொகு

1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்பட்டனர்.இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.

திருவிழாக்கள்

தொகு
 
ஆராட்டு முடிந்து திரும்பும் நரசிம்மரும், பத்மனாபசுவாமியும்
 
ஆராட்டு முடிந்து திரும்பும் கிருஷ்ணர்
 
பங்குனி திருவிழாவின் போது வைக்கபடும் பாண்டவர்களின் சிலை

இந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா அக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.

ஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.

இந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

தரிசனம்

தொகு

தரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.

கோவில் விதிமுறைகள்

தொகு

பக்தர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட ஆடை அணிகலன்களையே அணிய வேண்டும்.
ஆண் மக்கள் இடுப்பிற்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும்.
இரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது.
இதன் பொருளானது ஆண் மக்கள் கால்சட்டைகள் அணியக்கூடாது மற்றும் பெண்கள் சூரிதாரை அணியக்கூடாது.
லாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்)அறையில் இருந்து தோதிகளை வாடகைக்குப் பெறலாம் அதற்கான கட்டணம் ரூபாய் 15.
கால்சட்டைகள் அல்லது சூரிதார் மேல் ததியை அணியலாம்.
கோவிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் காமராக்கள் கொண்டு செல்லக்கூடாது.
தொலைபேசிகளை கோவில் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம், அதற்கான கட்டணம் ஒரு தொலைபேசிக்கு ரூபாய் பதினைந்து ஆகும்.
கைப்பைகளை கோவிலின் உள்ளே கொண்டு செல்லலாம்.

பாதாள அறை

தொகு

கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உமயம்ம ராணி எனும் ராணியின் ஆட்சிக்கால சமயம் முகில்கான் எனும் வெளிநாட்டினன் மணக்காடு எனும் பகுதியில் தங்கி இத்திருக்கோயிலைக் கொள்ளையடிக்க முயற்சி செய்தபொழுது, திருவனந்தபுரத்து முஸ்லீம்களால் தாக்கி விரட்டப்பட்டான். [2]

இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது [3] ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.[4]

2012 ஆம் ஆண்டு இந்த செல்வ வளத்தை தேச நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமென கொச்சிப்பகுதியைச் சார்ந்த கிறித்துவர் ஜேக்கப் மாப்பிளசேரி பொது நல மனுச்செய்தார்.[5][6]

கணக்கு தணிக்கை

தொகு

கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வௌ்ளி போன்றவற்றின் விவரங்களை மீண்டும் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.[7]

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்-1
  2. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=448
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.
  4. http://articles.economictimes.indiatimes.com/2011-07-02/news/29730610_1_temple-chamber-precious-items
  5. http://www.dinamalar.com/news_detail.asp?id=379297&Print=1
  6. குமுதம் ஜோதிடம்;27.01.2012; பக்கம் 1;
  7. பத்மநாபசுவாமி கோயில் கணக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு