தில்லி-லாகூர் சதி

தில்லி-லாகூர் சதி (Delhi-Lahore Conspiracy) அல்லது தில்லி சதிவழக்கு (Delhi conspiracy case) என்பது 1912ல் பிரித்தானிய இந்தியாவின் வைசுராய் ஹார்டிங் பிரபுவைப் படுகொலை செய்ய இந்திய புரட்சியாளர்கள் தீட்டிய திட்டத்தைக் குறிக்கிறது.

1911ல் பிரித்தானிய் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது. இதைக் குறிக்கும் வண்ணம் டிசம்பர் 23, 1912ல் தில்லியில் ஒரு அரசு விழா எடுக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ள இந்திய வைசுராய் ஹார்டிங் தன் மனைவியுடன் ஒரு யானை அம்பாரியில் அமர்ந்து தில்லியின் முக்கிய சந்தை வீதியான சாந்தினி சவுக் வழியாக வலம் வந்தார். அப்போது அவரது அம்பாரி மீது இந்திய புரட்சியாளர்கள் வெடுகுண்டு ஒன்றை வீசினர். இந்த குண்டுவெடிப்பில் ஹார்டிங்கும் அவர் மனைவியும் காயங்களுடன் தப்பினர், அவர்களது யானைப்பாகன் கொல்லப்பட்டார். வங்காளம் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டுவந்த ராஷ் பிஹாரி போஸ் தலைமையிலான புரட்சி இயக்கம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது.

வைசுராய் படுகொலை முயற்சி தோற்றபின்னர் போசின் புரட்சி இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு பெருமுயற்சி மேற்கொண்டது. போஸ் காலனிய காவல்துறையினரிடமிருந்து தப்பிவிட்டார். இப்படுகொலை தொடர்பாக பசந்த குமார் பிஸ்வாஸ், அமீர் சந்த், ஆவாத் பிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். வைசுராயின் அம்பாரி மீது குண்டை எறிந்தவர் பிஸ்வாஸ் என்று கூறப்பட்டாலும் இன்றுவரை அது உறுதிப்படுத்தப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி-லாகூர்_சதி&oldid=1584669" இலிருந்து மீள்விக்கப்பட்டது