தில்லைக் கலம்பகம்

தில்லைக் கலம்பகம் [1] என்னும் சிற்றிலக்கியம் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர் பாடிய நூல்களில் ஒன்று, இவர்கள் திரு ஆமாத்தூர்க் கலம்பகம் என்னும் கலம்பக நூலும் பாடியுள்ளனர். தில்லைக் கலம்பகம் தில்லையில் குடிகொண்டுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பட்டது. காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் இதில் உள்ளன.

சிவபெருமான் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலம், நடனமாடிய சபைகள் முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. மற்ற தலங்களுக்கு உரிய பூசாபத்ததி [2] காமிகாகமம் [3]. இத் தலத்துக்கு உரிய பத்ததி மகுடாகமம் [4] [5] தில்லையின் நான்கு கோபுரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. [6]

சொல்லாட்சி தொகு
துரை - ஆங்கிலேயனைக் குறிக்கும் 'துரை' என்னும் சொல் இந்த நூலில் வருகிறது. [7]
பயல் - பையல் என்னும் சொல்லே பழமையானது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிங்க நிகண்டில் பையல் என்னும் சொல் வருகிறது. புகழேந்திப் புலவர் பூசலில் ஒட்டக்கூத்தர் இச்சொல்லைக் கையாண்டுள்ளார். [8] இந்தக் கலம்பகத்தில் இச்சொல் கீழ்மகனைக் குறிக்கும் சொல்லாகப் 'பயல்' என மருவி வருகிறது.
கப்பல் - கப்பல் என்னும் சொல் இந்த நூலில் உள்ளது. [9] கண்ணுடைய வள்ளல் (1375-1425) தம் ஒழிவிலொடுக்கம் என்னும் நூலில் இச் சொல்லை கையாண்டுள்ளார். [10]

இவற்றால் இந்த நூலின் காலம் புலப்படுகிறது.

முந்தைய ஞானாசிரியர்கள் தொகு

சீர்காழி சிற்றம்பல நாடிகள் சீர்காழியில் பல மாணவர்களுடன் இருந்துகொண்டு சைவப் பயிர் வளர்த்துவந்தார். இவரது முதல்-மாணவர் சம்பந்த முனிவர். இவர் தன் உடலை எரிக்கவோ, சுடவோ வேண்டாம் என்று கூறியவர். இவர்களை அறிந்திருந்த இந்த இரட்டையர் இந்தக் கலம்பகத்தில் பாடியுள்ளனர்.

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலும் இப் பாழ் உடலம்
கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப் படினும்
புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக் கட்டி
இழுத்துச் செத்தாலும் சிதம்பரத்தே சென்று இறத்தல் நன்றே.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 24. 
  2. கும்பம், பிடித்து வைத்த பிள்ளையார், தெய்வச் சிலைகள் முதலானவற்றை வழிபடுவது
  3. காமிக ஆகமம் - அருள் வேண்டும் வழிபாடு
  4. மகுட ஆகமம் - ஆகாயமாகிய விண்ணுலக மகுடத்தை வேண்டும் வழிபாடு.
  5. இதனை இக் கலம்பகத்தில் உள்ள 65 ஆம் பாடல் குறிப்பிடுகிறது
  6. இந்த 4 கோபுரங்களும் வெவ்வேறு காலத்தில் கட்டப்பட்டவை. இக் கலம்பகம் பாடப்பட்ட காலத்தில் அவை கட்டி முடிக்கப்பட்டிருந்தன
  7. எனக்கு நீ ஒரு துரை அலவோ இனி
    உமக்கு நான் ஒரு பயல் அலவோ தயவு - இலையோதான்
  8. அங்குசப் பையல் யான்
  9. பெருங்கப்பல் கடல் மீனுடன் தந்து இக் கரை சேர் பெரும்பற்றப் புலியூரே
  10. கப்பல் பிழைத்துக் கரை காணுமாப் போல
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லைக்_கலம்பகம்&oldid=1881455" இலிருந்து மீள்விக்கப்பட்டது