தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை, 2001
தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (சிங்களம்: "ஹீனி கல", ஏப்ரல் 25, 2001 - ஏப்ரல் 27, 2001) என்பது இலங்கை அரசபடையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அளவிலான இராணுவ (படைத்துறை) நடவடிக்கையாகும். ஏற்கனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம்.
இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ 20,000 இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள்.
நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்த பகுதி 6 கிமீ அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம் கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கிமீ வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.
புலிகள் பீரங்கிகள் கொண்டு இராணுவத்தினரைத் தாக்கினர். 3 நாள் சண்டையிலும் களத்திற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. இலங்கை வான்படையும் இத்தாக்குதலில் இணைந்திருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீரங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல் பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன.
புலிகளின் இராணுவ எதிர்ப்புச் சமரில் வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்களே. அவர்கள் காயமுற்றோரையும் போராளிகளையும் வாகனங்களில் ஏற்றி இறக்கினார்கள்.
இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கியது. 3 நாட்களில் ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் பின்வாங்கியது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை ஏப்ரல் 27, 2001 இல் முடிவுக்கு வந்தது. இந்த எதிர்ப்புச் சமரில் களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.