துமு நெருக்கடி

வடக்கு யுவான் அரசமரபு மற்றும் மிங் அரசமரபுக்கு இடையே நடைபெற்ற 1449ஆம் ஆண்டு எல்லைச் சண்டை

துமு நெருக்கடி (எளிய சீனம்: 土木之变; மரபுவழிச் சீனம்: 土木之變; மொங்கோலியம்: Тумугийн тулалдаан) என்பது வடக்கு யுவான் அரசமரபு மற்றும் மிங் அரசமரபு ஆகியவற்றிற்கு இடையே எல்லைப் பகுதியில் நடந்த ஒரு சண்டை ஆகும். செப்டம்பர் 1, 1449 ஆம் ஆண்டு வடக்கு யுவானின் ஒயிரட் ஆட்சியாளரான எசன் தைசி, மிங்கின் பேரரசர் இங்சோங்கைப் பிடித்துச் சென்றார்.[2]

துமு நெருக்கடி

துமு கோட்டை நெருக்கடி
நாள் செப்டம்பர் 1, 1449
இடம் குவாய்லய் மாகாணம், வடக்கு ஜிலி, மிங் அரசமரபு
மங்கோலிய பெற்றி, பேரரசர் இங்சோங் பிடிக்கப்படுதல், போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்புதல்
பிரிவினர்
வடக்கு யுவான் அரசமரபு மிங் அரசமரபு
தளபதிகள், தலைவர்கள்
 • மிங்கின் பேரரசர் இங்சோங் (கைதி)
 • வாங் சென் 
 • ஜங் பு 
பலம்
சுமார் 20,000 5,00,000[1]
இழப்புகள்
குறைவு சுமார் 2,00,000

பெயர்

தொகு

இந்த நிகழ்வானது துமு கோட்டை நெருக்கடி (எளிய சீனம்: 土木堡之变; மரபுவழிச் சீனம்: 土木堡之變) அல்லது துமு யுத்தம் (சீனம்: 土木之役) என்றும் அழைக்கப்படுகிறது.

சண்டையின் தொடக்கம்

தொகு

சூலை 1449 ஆம் ஆண்டு தனது கைப்பாவை ககான் தோக்தக்-புகாவுடன் மிங் அரசமரபின் மீது பெரிய அளவிலான மும்முனைத் தாக்குதலை எசன் தைசி நடத்தினார். ஆகத்து மாதத்தில் ததோங் (வடக்கு சான்சி மாகாணம்) நகரத்தை நோக்கித் தானே முன்னேறினார். எசனுக்கு எதிரான யுத்தத்தில் பேரரசரே அவருடைய இராணுவங்களுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று மிங்கின் 22 வயது பேரரசர் இங்சோங்கை, மிங் அவையில் ஆதிக்கம் செலுத்திய திருநங்கையாக்கப்பட்ட அதிகாரியான வாங் சென் ஊக்குவித்தார். எசனின் இராணுவத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால் சரியான ஊகத்தின் படி சுமார் 20,000 வீரர்கள் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மிங் இராணுவத்தில் 5 லட்சம் பேர் இருந்தனர். அது அவசர அவசரமாக ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. மிங் இராணுவத்திற்கு 20 அனுபவம் வாய்ந்த தளபதிகள் மற்றும் உயர்தர அதிகாரிகளின் ஒரு பெரிய பரிவாரம் ஆகியோர் தலைமை தாங்கினார். வாங் சென்னும் களத்தில் இருந்தார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி சீனப்பெருஞ்சுவருக்கு சற்றே உள்புறமாக எசனின் இராணுவமானது ஏங்கே மாகாணத்தில் உதவிப் பொருட்களைச் சரியாக பெறாத மிங் இராணுவத்தை நொறுக்கியது. அதே நாளில் பேரரசர் தனது ஒன்றுவிட்ட சகோதரனான சு கியூவைப் பிரதிநிதியாக நியமித்தார். அடுத்த நாள் பேரரசர் சுயோங் கணவாய்க்குச் செல்ல பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். சுவான்பு கோட்டை வழியாக மேற்கே இருந்த ததோங் நகரத்திற்கு ஒரு குறுகிய, துல்லிய அணிவகுப்பை மேற்கொள்வது, புல்வெளிப் பகுதிகளுக்குள் ஒரு தாக்குதலை நடத்துவது, பிறகு உசோவு மாகாணம் வழியான தெற்குப் பாதை வழியாக பெய்ஜிங்கிற்குத் திரும்புவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கடும் மழை காரணமாக அணிவகுப்பானது சேற்றிலும் சகதியிலும் நடைபெற்றது. சுயோங் கணவாயில் அரசு அதிகாரிகள் மற்றும் தளபதிகள் அணிவகுப்பை நிறுத்தி ஓய்வெடுக்க விரும்பினர். பேரரசரை மீண்டும் பெய்ஜிங்கிற்கு அனுப்ப விரும்பினர். ஆனால் அவர்களின் அறிவுரைகள் வாங் சென்னால் மீறப்பட்டன. ஆகஸ்ட் 16ஆம் தேதி இராணுவமானது சடலங்கள் பரவியிருந்த ஏங்கே யுத்தகளத்திற்கு வந்தது. இந்த அணிவகுப்பானது ஆகஸ்ட் 18ஆம் தேதி ததோங்கை அடைந்தது. அப்போது புல்வெளிக்குள் சென்று தாக்குதல் நடத்துவது மிக ஆபத்தானது என கோட்டையில் இருந்த தளபதிகளிடம் இருந்து வாங் சென்னுக்கு வந்த தகவல்கள் அறிவுறுத்தின. "போர்ப்பயணமானது" வெற்றிகரமான முடிவை எட்டியதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20ஆம் தேதி இராணுவமானது மீண்டும் மிங்கிற்குத் திரும்பியது.

வாங் சென்

தொகு

ஓய்வற்ற போர்வீரர்கள் ஊசோவில் உள்ள தன் தோட்டங்களுக்குச் சேதம் விளைவிப்பார்களோ என்று அஞ்சிய வாங் சென் வடகிழக்குப் பகுதியைத் தாக்கிவிட்டு வந்த வழியான அம்பலப்பட்ட வழியிலேயே திரும்பிச் செல்லலாம் என முடிவெடுத்தார். இராணுவமானது சுவான்பு மாவட்டத்தை ஆகத்து 27 ஆம் தேதி அடைந்தது. ஆகத்து 30 ஆம் தேதி சுவான்புவுக்குக் கிழக்கே மிங்கின் பின்பகுதி படையினரை வடக்கு யுவான் படைகள் துடைத்து அழித்தன. எவோயர்லிங்கில் மூத்த தளபதி சு யோங் தலைமையிலான ஒரு சக்திவாய்ந்த புதிய பின்பகுதி குதிரைப் படையையும் சற்றுநேரத்தில் அவர்கள் நிர்மூலமாக்கினர். ஆகத்து 31 ஆம் தேதி ஏகாதிபத்திய இராணுவமானது துமுவில் இருந்த நிலையத்தில் முகாமிட்டது. 45 கிலோமீட்டர் முன்னிருந்த, சுவர்களையுடைய குவாய்லாய் நகரத்தில் பேரரசரைத் தஞ்சம் அடைய வைக்கலாம் என்ற மந்திரிகளின் பரிந்துரைக்கு வாங் சென் மறுப்புத் தெரிவித்தார்.

 
மங்கோலியர்களால் பிடிக்கப்பட்ட மிங் அரசமரபின் இங்சோங் பேரரசர்.

மிங் முகாமினரை அவர்களுக்குத் தெற்கிலிருந்த ஆற்றின் நீரை அணுகவிடாமல் தடுக்க எசன் ஒரு முன் படையை அனுப்பினார். செப்டம்பர் 1 ஆம் தேதி காலை அவர்கள் மிங் இராணுவத்தைச் சுற்றி வளைத்தனர். பேச்சுவார்த்தைக்கு அளிக்கப்பட்ட எந்த வாய்ப்புகளையும் வாங் சென் நிராகரித்தார். குழப்பமடைந்திருந்த இராணுவத்தை ஆற்றை நோக்கி முன்னேறுமாறு ஆணையிட்டார். எசனின் முன்படையினர் மற்றும் ஒழுங்கற்ற மிங் இராணுவத்துக்கிடையே ஒரு யுத்தம் தொடங்கியது. இந்த யுத்த களத்தில் எசன் இல்லை. மிங் இராணுவம் அடிப்படையில் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டது. பெரும்பாலான மிங் துருப்புகளைக் கொன்ற அதேநேரத்தில் வடக்கு யுவான் படைகளானவை ஏராளமான ஆயுதங்கள் மற்றும் கவசங்களைக் கைப்பற்றின. அனைத்து உயர் மிங் தளபதிகள் மற்றும் அவை அதிகாரிகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். சில ஆதாரங்களின்படி வாங் சென் தனது சொந்த அதிகாரிகளாலேயே கொல்லப்பட்டார். பேரரசர் பிடிக்கப்பட்டார். செப்டம்பர் 3 ஆம் தேதி சுவான்புவுக்கு அருகில் இருந்த எசனின் மைய முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டார்.

பின்விளைவுகள்

தொகு

இந்த ஒட்டுமொத்தப் போர்ப்பயணமும் தேவையற்றது, தவறாக ஊகிக்கப்பட்டது மற்றும் மோசமாக வழிநடத்தப்பட்டதாக இருந்தது. வடக்கு யுவானின் வெற்றியானது ஒருவேளை 5,000 என்கிற அளவுக்குக் குறைவான அளவில் இருந்த முன் படை குதிரைப் படையால் வெல்லப்பட்டிருக்கலாம். எசனும் தன் பங்கிற்கு, இந்த அளவிலான பெரிய வெற்றிக்கு அல்லது மிங் பேரரசரைப் பிடிப்பதற்குத் தயாராகி இருக்கவில்லை. பிடிக்கப்பட்ட பேரரசரை வைத்து பிணைப்பணத்தை அதிகப்படுத்துவது மற்றும் வணிக உரிமைகள் உள்ளிட்ட ஒரு சாதகமான ஒப்பந்தத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகிவற்றுக்கு எசன் முதலில் முயற்சி செய்தார்.[3] எனினும் தலைநகரத்தில் இருந்த மிங் தளபதி உ கியானின் உறுதியான தலைமைப் பண்பால் எசனின் திட்டம் முறியடிக்கப்பட்டது. மிங் தலைவர்கள் எசனின் சலுகையை நிராகரித்தனர். பேரரசரின் வாழ்க்கையைவிட நாடு மிக முக்கியமானது என உ கூறினார்.

 
மிங்கின் பாதுகாப்பு அமைச்சர் உ கியான்.

பேரரசரை மீட்பதற்காக பணத்தை என்றுமே மிங் செலுத்தவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எசன் பேரரசரை விடுவித்தார். மிங் மேல் தான் பெற்ற வெற்றியைப் பயன்படுத்திக் கொள்வதில் அடைந்த தோல்வி காரணமாக எசன் மேலான விமர்சனமும் அதிகரித்தது. யுத்தத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 1455இல் எசன் அரசியல் கொலை செய்யப்பட்டார்.[4]

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
 1. Nolan, Cathal J. The Age of Wars of Religion, 1000-1650, Volume 1: An Encyclopedia of Global Warfare and Civilization Greenwood Press (January 2006) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33733-8 p.151 [1]
 2. Nolan, Cathal J. The Age of Wars of Religion, 1000-1650, Volume 1: An Encyclopedia of Global Warfare and Civilization Greenwood Press (January 2006) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33733-8 p.151 [2]
 3. Barfield 1992, ப. 241.
 4. Barfield 1992, ப. 242.

மேற்கோள் நூல்கள்

தொகு
 • Barfield, Thomas J (1992). The Perilous Frontier. Cambridge, Massachusetts: Blackwell publishers. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55786-043-2.

மேலும் படிக்க

தொகு
 • "Cambridge History of China, Volume 7, The Ming Dynasty", edited by Twitchett and Mote, 1988.
 • Frederick W. Mote. "The T'u-Mu Incident of 1449." In Chinese Ways in Warfare, edited by Edward L. Dreyer, Frank Algerton Kierman and John King Fairbank. Cambridge, MA: Harvard University Press, 1974.
 • The Perilous Frontier, Chapter 7, 'Steppe Wolves and Forest Tigers: The Ming, Mongols and Manchus', Thomas J Barfield
"https://ta.wikipedia.org/w/index.php?title=துமு_நெருக்கடி&oldid=3511293" இலிருந்து மீள்விக்கப்பட்டது