தட்டாரப்பூச்சி

(தும்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தட்டாரப்பூச்சி அல்லது தட்டான் (இலங்கை வழக்கு: தும்பி, dragonfly) என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் கண்ணைக் கவரும் பூச்சிக் குடும்பங்களின் அழகான, ஒல்லியான, பறக்கும் பூச்சித் தனியன்களாகும். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இப்பூச்சி வகைகளைத் தும்பி என்றும் அழைக்கிறார்கள். இவற்றைத் தட்டாம்பூச்சி என்றும் அழைப்பர்.

தட்டாரப்பூச்சி
புதைப்படிவ காலம்:Upper Carboniferous–Recent
மஞ்சள்-சிறகுத் தட்டான்
Sympetrum flaveolum
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
ஓடோனாட்டா
Suborder:
எப்பிப்புரோக்டா
Infraorder:
அனிசோப்டெரா

செலிசு, 1854[1]
குடும்பங்கள்
  • Aeshnoidea
    • Aeshnidae (hawkers or darners)
    • Austropetaliidae
    • Gomphidae (clubtails)
    • Petaluridae (petaltails)
  • Cordulegastroidea
    • Chlorogomphidae
    • Cordulegastridae (spiketails)
    • Neopetaliidae
  • Libelluloidea
    • Corduliidae (emeralds)$
    • Libellulidae (skimmers, etc)
    • Macromiidae (cruisers)
    • Synthemistidae (tigertails)
$Not a clade

இப்பூச்சிகளின் உடல், கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டு இருக்கும். தட்டாரப்பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. இவை வலைபோலவும் மிகமிக மெல்லிய, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு, திறமையுடன் பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிமீ வரையிலும் விரைவாக பறக்க வல்லன. தட்டான் பூச்சிகளுக்கு இரண்டு பெரிய கூட்டடுக்குக் கண்களும் ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய மயிர் போன்ற இழைகள் நெடுகிலும் உண்டு. தட்டாம் பூச்சிகள் மற்ற கொசு போன்ற பிற சிறு பறக்கும் பூச்சிகளையும் பிற சிறு உயிரினங்களையும் உண்டு வாழ்வதால் கொன்றுண்ணிப் பூச்சிகளில் ஒன்றாகும்.

தட்டாரப்பூச்சிகள் ஆண்டிற்கு 8000 கி.மீ தொலைவு பறக்கக்கூடியன என முன்பு அறிஞர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் பிப்ரவரி 2016ல் பிலாசு ஒன் (PLOS ONE) இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி தட்டாரப்பூச்சிகள் 14000 முதல் 18000 கி.மீ வரைப் பறக்கக்கூடியன என நிறுவுகிறது.[2]

தட்டாரப்பூச்சிகள், உயிரினப் வகைப்பாட்டில் “பல் இருக்கின்ற” என்று பொருள்படும் ஓடோனட்டா என்னும் வரிசையில், எப்பிப்புரோக்டா என்னும் துணைவரிசையைச் சேர்ந்த உயிரினங்களாகும். தட்டாரப்பூச்சிக் குடும்பங்களின் அறிவியற் பெயர் அனிசோப்டெரா (Anisoptera) என்பதாகும். அனிசோப்டெரா என்னும் சொல் கிரேக்க மொழியில் உள்ள இரண்டு சொற்களின் கூட்டு. கிரேக்க மொழியில் ανισος anisos, அனிசோசு என்றால் "சீரில்லாத, ஏற்றத்தாழ்வான" என்று பொருள், அதனோடு πτερος pteros, ப்டொரொசு என்றால் இறக்கை அல்லது சிறகு[3], என்று பொருள், எனவே அனிசோப்டெரா (Anisoptera) என்பது சீரிலாயிறகி என்பதாகும். முன் இறக்கைகள் உடலோடு சேரும்போது, அங்கே இறக்கையின் அகலத்தைவிட, பின் இறக்கையின் அடிப்பகுதி சேரும் இடம் அகலமாகும். இதுவே "சீரிலாயிறகி" என்பதன் பொருள்.

நிப்பானின் நீலத் தட்டான்

தட்டாரப்பூச்சிகளைப் போலவே ஆனால் இன்னும் மெல்லிய உடல் கொண்ட ஊசித்தட்டாரப் பூச்சி (அல்லது ஊசித்தட்டான், ஊசித்தும்பி) என்னும் பிறிதொரு உள்வரிசையும் உண்டு. இந்த ஊசித்தட்டான் சைகோப்டெரா (Zygoptera) என்னும் உயிரியல் உள்வரிசையைச் சேர்ந்தது. சைகோப்டெரா என்பது கிரேக்க மொழியில் உள்ள "சைகோ" + "ப்டெராசு" என்ற இருசொற்களின் கூட்டு. "சைகோ" என்றால் "ஒன்றிணைந்த", "சேர்ந்திருக்கும்" என்று பொருள், "ப்டெராசு" என்பது இறகு அல்லது சிறகு. ஊசித்தட்டான்கள் அமர்ந்திருக்கும் பொழுது தன் இறக்கைகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து இருக்கும், இதனாலும், இதன் இறக்கைகள் உடலில் சேரும் இடத்தில் ஒத்த அகலங்கள் கொண்டதாகவும் இருப்பதாலும், சைகோப்டெரா அல்லது சேர்சிறகி அல்லது இணைசேரிறகி என்று அழைக்கப்படுகின்றது.

உலகில் தட்டான், ஊசித்தட்டான் பூச்சிகளில் ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் 503 தட்டான் இனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வாழ்கின்ற ஓர் உயிரினம். இப்பூச்சி இனம் நில உலகில் மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிவுற்ற தொன்மாக்களுக்கும் மிக முன்னதாகவே, ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்துவரும் ஓர் உயிரினம்.

உடலமைப்பு

தொகு
 
தட்டான் பூச்சி

தட்டான் பூச்சியின் உடலை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலில் தலைப்பகுதி. அடுத்து நெஞ்சுப் பகுதி கடைசியாக ஒல்லியாக நீண்ட குச்சி போல் உள்ள பகுதி வயிறு.

தலைப் பகுதியில் பெரிய இரண்டு கூட்டுக்கண்களும், வாயும், இரண்டு உணர்விழைகளும் உண்டு. நடுப்பகுதியாகிய நெஞ்சுப்பகுதியில் இறக்கைகள் சேர்வதும், கால்கள் இணைந்திருப்பதும் முக்கியக் கூறுகளாகும். நீண்ட ஒல்லியான கம்பி போன்ற வயிற்றுப்பகுதியில் பல முக்கியமான உறுப்புகள் உள்ளன. இப்பகுதியில், கழிவுவாய், முள் போன்ற கொடுக்கு, பெண்தும்பிக்கு முட்டையிடும் உறுப்பு, ஆண்தும்பிக்கு விந்துகளைச் சேமித்து வைக்கும் துணை இனப்பெருக்க உருப்பு போன்றவை அடங்கும். தட்டானுக்குக் கீழிறக்கை மேலிறக்கையை விட அகலமாகக் காணப்படும்.

வாழ்முறை

தொகு
 
உண்ணும் வாய்

பெண் தட்டாம்பூச்சி, தன்னுடைய சில நூறு முதல் சில ஆயிரம் முட்டைகளை நீரிலோ, நீரருகே உள்ள மண்ணிலோ, நீர்ச்செடிகளிலோ இடுகின்றது. வெப்ப நாடுகளில் உள்ளவை சில நாட்கள் முதல் (5-15 நாள்கள் முதல்) ஒரு மாத அளவிலே பொரிக்கும். குளிர் நாடுகளில் இரண்டு மாதம் முதல் 7 மாதங்கள் வரை கூட ஆகலாம்[4]. அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் இளவுயிரி தட்டான்

 
இனப்புணர்ச்சி; மேலே இருப்பது ஆண் தட்டான். கீழே இருப்பது பெண் தடான்; ஆண் தட்டாரப் பூச்சி, தன் நீண்ட வயிற்றுபகுதியின் கடைசியில் இருக்கும் இடுக்கி போல் உள்ள பகுதியால் பெண் தட்டாரப்பூச்சியின் தலையை அல்லது கழுத்துப் பகுதியைப் பிடித்திருக்கும். இந்த இடுக்கி போன்ற கடைப்பகுதி இனத்துக்கு இனம் சிறிது மாறுபடும் எனவே, இனப்பெருக்கம் தன்னினத்துக்குள்ளேயே நடப்பது காக்கப்படுகின்றது

நீருக்குள்ளேயே தன் வாழ்க்கையை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாழும். அப்பொழுது இதற்கு இறக்கைகள் இருக்காது. இந்த நிலையிலும் இவற்றுக்கு நல்ல கண்பார்வை உண்டு, பெரிய கீழ்வாய்த் தாடை உண்டு. இவ் இளவுயிரிகள் செவுள் கள் மூலம் மூச்சுவிடுகின்றன.

ஊட்டம்

தொகு

இளவுயிரிகள் இந்நிலையில் நிறைய நீர்வாழ் உயிரினங்களையும் இளம் கொசுக்களையும், இளவுயிர் கொசுக்ளையும் உண்டு வாழும். இதனால் இவை கொசுக்களை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்குவகிக்கின்றன.[5] தன் நீர்வாழ் நாள்களில் இவை 10-15முறை புறத்தோல்களைக் களையும். கடைசி தோலுரிப்பின் பின் நீரில் இருந்து வெளிப்பட்டு பறக்கத் தொடங்குகிவிடுகின்றது. முழு வளர்ச்சி அடைந்து, பறக்கும் தட்டானாக ஆன பின்பு, அது சில கிழமைகளோ (வாரங்களோ) அல்லது ஓரிரண்டு மாதங்களோதான் உயிர்வாழ்கின்றன. முழு வளர்ச்சி அடைந்து பறக்கும் தட்டான் பறந்து கொண்டே கொசு , ஈ, பட்டாம்பூச்சி போன்ற சிறு பறக்கும் பூச்சிகளை உண்ணும். பறக்கும் பொழுது தன் ஆறு கால்களையும் ஒரு சிறு கூடை போல் வைத்துக்கொண்டு பறக்கும். அப்பொழுது அதில் மாட்டும் பூச்சிகளையும் உண்ணும். இவற்றின் கண்பார்வை, அசையாது இருக்கும் பொருளை, ஏறத்தாழ 2 மீட்டர் தொலைவில் காணக்கூடியதாகும், ஆனால் நகரும் பொருளாயின் அதைப்போல் 2-3 மடங்கு தொலைவில் உள்ளதையும் பார்க்க இயலும்.[6]

பறக்கும் திறன்

தொகு

இவற்றின் பறக்கும் திறன், மற்ற பறக்கும் பூச்சிகள் யாவற்றைக் காட்டிலும் திறன் மிக்கது ஆகும். தும்பிகள் பறந்துகொண்டே ஒரே இடத்தில் நிற்கக்கூடிய திறம் கொண்டவை. இப்படி பறந்து கொண்டே இரே இடத்தில் நிற்பதை ஞாற்சி என்பர். அது மட்டும் அல்லாமல் பறந்துகொண்டே திடீர் என்று 180 பாகை திரும்பி, பின் திசை நோக்கிப் பறக்கவும், முன்னால் பறக்காமல் பின்னோக்கி நகருமாறு பறக்கவும் இயலும்[4]. பொதுவாக மணிக்கு 20-30 கி.மீ விரைவில் பறக்கும் திஅம் கொண்டவை, ஆனால் மணிக்கு 80-100 கி.மீ விரைவில் பறப்பதைப் பற்றியும் ஆய்வாளர்கள் அறிந்திருக்கிறார்கள்

உசாத்துணை

தொகு
  1. Selys-Longchamps, E. (1854). Monographie des caloptérygines (in French). Vol. t.9e. Brussels and Leipzig: C. Muquardt. pp. 1–291 [1–2]. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.60461.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Tiny dragonfly shatters insect migration record
  3. Odonata at Tree of Life web project. Retrieved 2011-09-18.
  4. 4.0 4.1 K.A.Subramanian (2005) Dragonflies and Damselflies of Peninsular India-A Field Guide. E-Book of Project Lifescape. Centre for Ecological Sciences, Indian Institue of Science and Indian Academy of Sciences, Bangalore, India. 118 pages
  5. "பார்வையால் பிடித்து மகிழ்வோம் தட்டான்களை!". தி இந்து (தமிழ்). 4 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
  6. World Book Encylopedia, 1985 Edition

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டாரப்பூச்சி&oldid=3930625" இலிருந்து மீள்விக்கப்பட்டது