தூய எல்மோவின் சுடர்

வானிலை நிகழ்வு

தூய எல்மோவின் சுடர் (அல்லது தூய எல்மோவின் ஒளி[1][2]) என்பது இடிப்புயல், எரிமலைக் குமுறல் போன்றவற்றின்போது வளிமண்டலத்தில் ஏற்படும் வலுவான மின்புலத்தால், கூர்நுனியுள்ள பொருட்களில் ஒளிவட்ட மின்னிறக்கம் காரணமாக ஒளிரும் மின்மக் கலவையொன்று உருவாகின்ற வானிலை நிகழ்வைக் குறிக்கிறது.

கப்பலொன்றில் தூய எல்மோவின் சுடர்

இடியுடன் கூடிய பெருமழையின்போது சில சமயம் கப்பல்களில் ஒளிப்பிழம்பாக இந்நிகழ்வு தோன்றக் கண்ட கடலோடிகள் பயபக்தியுடன் அணுகினர். எனவே கடலோடிகளின் காவற்புனிதரான தூய எல்மோவின் பெயரால் இது வழங்கப்படலாயிற்று.[3] காவல் புனிதர் தம்முன் தோன்றி தமக்குத் துணையிருப்பதைச் சுட்டும் நல்ல நிமித்தமாக தூய எல்மோவின் சுடரைக் கடலோடிகள் கருதியிருக்கலாம்.[4]

இயல்புகள்

தொகு

உயரமான, கூர்நுனியுள்ள அமைப்புகளில் மிளிர் நீல அல்லது ஊதா நிற ஒளிர்வாக ஏற்படும் தூய எல்மோவின் சுடர் சில நேரம் தீப்பிழம்பாகவும் தோற்றமளிக்கும். இடிதாங்கிகள், கப்பலின் பாய்மரங்கள், கோபுர உச்சிகள், புகைப்போக்கிகள், விமான இறக்கைகள், விமான மூக்குப்பகுதி போன்றவற்றில் இது நிகழ்கிறது. இலைகளிலும், புற்களிலும், கால்நடைகளின் கொம்புநுனிகளிலும் கூட இச்சுடர் தோன்றக்கூடும்.[5] பல நேரங்களில் ஒளிர்வோடு கூடவே மெல்லிய ரீங்காரம் போன்ற ஒலியொன்றும் கேட்கும்.

இந்நிகழ்வு சில சமயங்களில் பந்து வடிவ மின்னலோடு குழப்பிக்கொள்ளப்படுவதுண்டு.

இடியுடன் கூடிய பெருமழையின்போது கூர்த்த இரும்புக் கம்பியின் நுனியானது தீப்பற்றும் என்ற கருதுகோளை 1751-இல் பெஞ்சமின் பிராங்கிளின் முன்வைத்திருக்கிறார்.[6][7]

காரணம்

தொகு

தூய எல்மோவின் சுடரானது விண்மீன்கள், உயர் வெப்பநிலையுள்ள பிழம்பு ஆகியவற்றில் உருவாவதும், மின்னலால் தோற்றுவிக்கப்படுவதுமான மின்மக்கலவையே ஆகும். குறிப்பிட்ட பொருளைச் சுற்றியுள்ள மின் புலமானது சூழ்ந்துள்ள காற்று மூலக்கூறுகளை அயனியாக்கம் செய்யும்போது ஒரு ஒளிர்வு உண்டாகும். இதை வெளிச்சம் குறைவான சமயங்களில் நன்றாகவே காணலாம். இடிப்புயலின்போது முகில்களுக்கும் நிலத்துக்கும் இடையே அதிகமான மின்னழுத்த வேறுபாடு நிலவுவது தூய எல்மோவின் சுடர் தோன்றுவதற்குச் சாதகம் ஆகிறது. காற்றில் மின்னிறக்கம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ 100 கிவோ/ மீ அளவிலான மின்புலம் அவ்விடத்தில் தேவைப்படும். மின்புலத்தின் அளவானது பொருளின் வடிவத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும். வளைபரப்புகளில் மின்புலம் அதிகம் செறிந்திருப்பதால் கூர்நுனிகளிலேயே பொதுவாக மின்னிறக்கம் ஏற்படுவதோடு கடுமையாகவும் இருக்கும்.

இச்சுடர் நீலம் அல்லது ஊதா நிறத்தில் ஒளிர புவியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரசனும் ஆக்சிசனுமே காரணம். இது நியான் விளக்குகளில் நடப்பது போன்றதே.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Darwin, Charles R. (1839). Narrative of the surveying voyages of His Majesty's Ships Adventure and Beagle between the years 1826 and 1836, describing their examination of the southern shores of South America, and the Beagle's circumnavigation of the globe. Journal and remarks. 1832–1836. London: Henry Colburn. p. 619.
  2. The Complete Work of Charles Darwin Online
  3. Eyers, Jonathan (2011). Don't Shoot the Albatross!: Nautical Myths and Superstitions. A&C Black, London, UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-3131-2.
  4. Bergreen, Laurence. Over the Edge of the World: Magellan's Terrifying Circumnavigation of the Globe. New York: Morrow, 2003. Print.
  5. Heidorn, K., Ph.D. Weather Elements: The Fire of St. Elmo. Retrieved on July 2, 2007.
  6. Van Doren, Carl. Benjamin Franklin, The Viking Press, New York, 1938. p. 159. Quoted text from May 1751 letter published in Gentleman's Magazine at http://www.math.tamu.edu/~stecher/489/Ben/science.shtml.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Additional reference may be made from Yale University's The Papers of Benjamin Franklin பரணிடப்பட்டது 2006-02-14 at the வந்தவழி இயந்திரம் collection
  8. "What causes the strange glow known as St. Elmo's Fire? Is this phenomenon related to ball lightning?". Scientific American.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
St. Elmo's Fire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய_எல்மோவின்_சுடர்&oldid=3675689" இலிருந்து மீள்விக்கப்பட்டது