தென்னிந்திய கருந்தலை மாங்குயில்

பறவை துணையினம்

மதராசபடாணசு கருந்தலை மாங்குயில் (அறிவியல் பெயர்: Oriolus xanthornus maderaspatanus) என்பது கருந்தலை மாங்குயிலின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. இது மத்திய மற்றும் தென்னிந்தியாவில் காணப்படுகிறது.

விளக்கம் தொகு

மைனா அளவுள்ள மதராசபடாணசு கருந்தலை மாங்குயில் சுமார் 25 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு இளஞ்சிவப்பு நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திலும், கால்கள் நீலங்கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் தலை அடர் கறுப்பாக இருக்கும். மேலும் தொண்டையும், மேல் மார்பும் கூட கறுப்பாக இருக்கும். இதன் வாலிலும், இறக்கைகளிலும் கறுப்பான பகுதிகளைக் காண இயலும். ஆண் பறவையும் பெண் பறவையும் பெரிதாக வேறுபாடுகளற்றுக் காணப்படும். முழுவளச்சியடையாத பறவைகளின் தலையில் கறுப்பிடையே மஞ்சள் கோடுகள் காணப்படும்.[2]

பரவலும் வாழிடமும் தொகு

இது மத்திய மற்றும் தென்னிந்தியாவில் காணப்படுகிறது. இவை பொதுவாக மரங்களடர்ந்த காடான சமவெளிப் பகுதிகளில் ஆண்டு முழுக்கக் காணப்படுகிறது. இவை மலைகளில் காணப்படுவதில்லை.[2]

நடத்தை தொகு

மதராசபடாணசு கருந்தலை மாங்குயிலானது மரங்களில் உயர தனித்தோ, இணையாகவோ திரியக் காணலாம். நகர்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் சிற்றூர் பகுதிகளில் உள்ள தோப்புகளிலும் காண இயலும். தரையில் இறங்கும் பழக்கமற்ற இப்பறவைகள் மரங்களில் உயரத்தில் இருந்து இனிய குரலில் ஒலி எழுப்பும். சிறு பழங்களையும், பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும்.[2]

இவை மார்ச் முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நார், வேர், சிலந்தி வலையில் உள்ள நூல் முதலியவற்றைக் கொண்டு சிறு கிளைகளுக்கு இடையை தொட்டில் போல தொங்கக்கூடிய கூட்டை அமைக்கும். இளஞ்சிவப்புத் தோய்ந்த வெண்மையான இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டைகளில் கறுப்பும் செம்பழுப்புமான புள்ளிகள் மிகுதியாகக் காண இயலும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 352-353.