தெற்கத்தியக் காட்டு மைனா

பறவை துணையினம்

தென்னிந்தியக் காட்டு மைனா (அறிவியல் பெயர்: Acridotheres fuscus mahrattensis) என்பது காட்டு மைனாவின் துணையினம் ஆகும்.

விளக்கம்

தொகு

தென்னிந்தியக் காட்டு மைனா பறவையானது மைனா அளவில் சுமார் 23 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் அலகு ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும், விழிப்படலம் நீலங் கலந்த வெண்மையாகவும், கால்கள் மஞ்சளாகவும் இருக்கும். இது தோற்றத்தில் சாதாரண மைனாவை ஒத்தது. இதற்கு சில மைனாக்களுக்கு இருப்பதுபோன்று கண்களைச் சுற்றித் தூவிகளற்ற மஞ்சள் பகுதி இல்லை. அலகடியிலும் நெற்றியின் முன் பகுதியிலும் சில கறுப்புத் தூவிகள் செங்குத்தாக நிற்கும். உடலின் பழுப்பு நிறம் சற்று சாம்பல் நிறம் தோய்ந்து காணப்படும்.[1]

பரவலும் வாழிடமும்

தொகு

தென்னிந்தியக் காட்டு மைனா மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் விளை நிலங்களைச் சார்ந்த காட்டுப் பகுதிகளிலும் ஊர்ப்புறங்களிலும் காணலாம். மலைகளில் சுமார் 1500 மீட்டர் உயரம் வரை காணப்படும்.[1]

நடத்தை

தொகு

இந்தக் காட்டு மைனா இணையாகவும் சிறு கூட்டமாகவும் கருந்தலை மைனா போன்றவற்றுடன் கலந்து திரியும். மேய்ச்சல் நிலத்தில் ஆடு மாடுகள் போன்ற பாலூட்டிகள் மீதும் அவற்றின் காலடியிலும் அமர்ந்திருந்து அவறின் அசைவினால் புற்களில் இருந்து எழும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். சிறு பழங்களையும் ,மலர்த் தேனையும் உணவாக கொள்ளும். இதன் குரல் மைனாவைப் போன்று இருக்கும்.[1]

இவை பெபுரவரி முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்கின்றன.[2] மரங்கொத்தி, குக்குறுவான் போன்றவை மரங்களில் அமைத்த பழைய பொந்தில் குச்சி, புல், வேர் ஆகியன கொண்டு கூடு அமைத்து மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இதன் முட்டைகள் பசுநீலமாக இருக்கும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 368.
  2. Baker, E.C.S. (1926). The Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume III.