தெ. து. ஜயரத்தினம்

தெ. து. ஜயரத்தினம் (அக்டோபர் 15, 1913 - அக்டோபர் 29, 1976) ஈழத்துக் கல்வியாளர் ஆவார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் அதிபராக இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பெரும்பணி ஆற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை, தையல்நாயகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் ஜயரத்தினம். மகாஜனக் கல்லூரியை 1910 ஆம் ஆண்டிலே "மகாஜன உயர்கலைக் கழகம்" என்ற கல்விக் கூடத்தை தெல்லிப்பழை என்னும் ஊரில் நிறுவியவரும் அவ்வூரின் தபால் நிலையம், புகையிரத நிலையம், கூட்டுறவுக் கழகம் ஆகியன தோன்றுவதற்கு முன்னின்றுழைத்த முதன்மைப் பிரமுகரும் மாணவர் மனத்திலே சைவசமயத்தெளிவும் செந்தமிழ்ச் செழுமையும் ஆங்கிலத் தேர்ச்சியும் பெருக்கி வழிப்படுத்திய தலைமை ஆசியருமாகிய பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளையின் மறைவுக்குப்பின் தந்தையின் வழி ஆசிரியப் பணியையேற்று கல்விக்கூடம் தரமுயர்த்தப்பட்டதும் அதன் முதலாவது அதிபராகப் பணியேற்று இளைப்பாறும்வரை பணியாற்றினார்.

ஜயரத்தினம் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து தந்தையார் நிறுவிய மகாஜன உயர்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்கப் புகுந்தார். அங்கு கற்று 8ம் வகுப்புப் பரீட்சையில் முதன்மைத் தேர்ச்சி பெற்றுச் சித்தியடைந்தார். 1929 ஆம் ஆண்டு தந்தையாரின் மறைவை அடுத்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்த ஜயரத்தினம் "லண்டன் மட்ரிக்குலேஷன்" பரீட்சையில் தேறி யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலானார். அங்கு கற்கும் காலத்தில் ஆசிரியராகச் சேர்வதால் நலன் பெறலாம் என எண்ணி 1932 ஆம் ஆண்டு கல்வியை நிறுத்திவிட்டு மகாஜன உயர்கலைக் கழகத்தில் ஓர் உதவி ஆசிரியராகப் பதவியேற்றார். அதன்பின் கல்வியைத் தொடர்ந்து "இன்டர்" பரீட்சையில் சித்தியடைந்தார்.

ஆசிரியப் பணிதொகு

பின்னர் கொழும்பில் இருந்த ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று "பயிற்றப்பட்ட" ஆசிரியராக வெளிவந்து மீண்டும் மகாஜன உயர்கலைக் கழகத்தில் தமது பணியைத் தொடர்ந்தார். தொடர்ந்து கல்வியை மேற்கொண்டு கலைமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1945 இல் தலைமையாசிரியராக இருந்த கா.சின்னப்பாவின் மறைவிற்குப் பின் அத்தலைமைப் பீடத்தையேற்று தமது பணியைச் சிறப்பான முறையில் தொடர்ந்தார். ஜயரத்தினம் தலைமையேற்று சில நாட்களிலேயே மகாஜன உயர்கலைக் கழகம் "மகாஜனக் கல்லூரி" என்று பெயர் மாற்றம் பெற்றது. தரத்தில் மிக உயர்ந்த மகாஜனாவின் அதிபர் உயர் தனித்தர அதிபராகப் பதவியேற்றம் பெற்றார். சலியா உழைப்பும் சிந்தனையாற்றலும் கொண்ட ஜெயரத்தினத்திற்கு கல்வி நிர்வாக சேவைப்பணி தேடிவந்ததும் அதை விரும்பாது தந்தையார் தொடக்கிவைத்த கல்வி நிறுவனத்தின் உயர்வை நாடி உழைத்தார்.

சமூக சேவைதொகு

1946 இல் வடமாகாண ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் 1949 இல் அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு வட மாகாண அதிபர்கள் சங்கச் செயலாளராகவும் 1967, 1968 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும் சேவையாற்றினார். இதுமட்டுமன்றி, சமயப் பணிகளிலும் நாட்டம் கொண்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருப்பணிச் சபையின் பொருளாளராகவும் இருந்து திருப்பணி நிறைவுறத் துணை நின்றார். தெல்லிப்பழை துர்க்கை அம்பாள் ஆலயத் திருப்பணிச்சபை, தர்மகர்த்தாக்கள் சபை ஆகியவற்றின் தலைவராகவும் இருந்து பணியாற்றினார். பொதுநல சேவையில் நேர்மையுடன் பணியாற்றி மக்களின் மதிப்புக்குரியவராக மாறினார். 25 ஆண்டுகள் அதிபராக இருந்து இளைப்பாறியபின் துர்க்கை அம்மன் ஆலயப் பணிகளோடு அமைதியான வாழ்வை மேற்கொண்டார்.

உசாத்துணைதொகு

  • கல்விப் பேராசான் தெ.து.ஜயரத்தினம், த.சிவசுப்பிரமணியம், தினக்குரல், நவம்பர் 1, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ._து._ஜயரத்தினம்&oldid=3130916" இருந்து மீள்விக்கப்பட்டது