தேசவழமைச் சட்டம்

தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது.[1][2]

பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர் 1869 இலும் பின் 1911 இலும் கடைசியாக 1947 இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளை விபரிக்கின்றது.[2]

இலங்கையில் பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமும் ஒன்று. ஏனையவை இரண்டும், கண்டிச் சட்டம், இசுலாமியச் சட்டம் ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது கண்டி வாழ் பெளத்தர்களுக்கும், இசுலாமியச் சட்டமானது இலங்கை வாழ் இசுலாமியர்களுக்கும், தேசவழமைச் சட்டமானது வட மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் மாத்திரமே இயல்புடையதாகிறது.[2]

வரலாறுதொகு

கிபி 1620 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் வடபகுதியில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான நாடு இருந்தது. இதுவே யாழ்ப்பாண அரசு அல்லது யாழ்ப்பாண இராச்சியம் எனப்படுகின்றது. முடியாட்சி முறையின் கீழ் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண இராச்சியத்தில், சட்டம் ஒழுங்கு முதலியவை எழுத்தில் இல்லாத ஆனால், குறைந்தது மூன்று, நான்கு நூற்றாண்டுகளாகவாவது நடைமுறையில் இருந்து வளர்ந்த ஒரு சட்டமுறை இருந்திருக்கிறது.[3] கி.பி 1620 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பின்னரும், அவர்கள், யாழ்ப்பாணத்தின் உள்ளூர் முதலிமார்கள் ஊடாகவே மக்களைக் கட்டுப்படுத்தி வந்தமையால் பழைய நடைமுறைகளே யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன.

ஒல்லாந்தர் ஆட்சியில் சட்டவாக்கல்தொகு

1658 இல் யாழ்ப்பாணம் போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. எனினும், முன்போலவே, மரபு வழியான விடயங்கள் எல்லாவற்றிலும் பழைய நடைமுறைகளே, அதாவது வழமைகளே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் குடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை எழுத்து மூலமாகத் தொகுக்கும் பொறுப்பு, அன்றைய டச்சு ஆளுனர் கோர்னெலிஸ் ஜோன் சைமன்ஸ் (Cornelis Joan Simons) என்பவரால் யாழ்ப்பாணத்தில் திசாவை (Dessave) பதவி வகித்த கிளாஸ் ஈசாக்ஸ் (Class Issaksz) என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், யாழ்ப்பாணத்து முதலியார்கள் 12 பேரின் உதவியுடன் நாட்டின் வழமைகளைத் தொகுத்தார். இதுவே தேசவழமைச் சட்டம் எனப்படுகின்றது. ஜூன் 4, 1707 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசினால் யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டம் டச்சு மொழியில் எழுதப்பட்டுத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்தொகு

கிளாஸ் ஈசாக்ஸ், இத் தொகுப்புக்காகத் தான் எழுதிய முன்னுரையில் இத் தொகுப்பு தொடர்பான பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

  • தொகுப்பில் அடங்கியவை யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில் நடந்து வருகிற வழமைகள் என்பது.
  • இத் தேசத்தவரின் சென்மசுபாவமான வழமைகளின்படி நியாயத் தலங்களில் நீதி செலுத்தப்பட்டு வருகிறது என்பது.

ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை.

"தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்".[4]

சொத்துடைமைகள்தொகு

தேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது.

ஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது.

மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருவதுடன் தேடிய தேட்டத்தில் ஐம்பது சதவிகிதமும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். பெண்ணின் சீதனத்தில் ஆண் செலவு செய்திருப்பின் அத்தொகையும் பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும்.

இச்சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்ததுடன், சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அக்காலச் சமூகத்தில் விதவைக்கும் விவாகரத்தாகிய பெண்ணுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கும் அனுகூலமான சட்டமாக இதனைக் கருதலாம்[5]

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

  • John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, Tellippalai, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003)

மேற்கோள்கள்தொகு

  1. "Thesavalamai Tamil Law". Encyclopædia Britannica Inc. பார்த்த நாள் 4 March 2021.
  2. 2.0 2.1 2.2 "UPDATE: Legal Research and Legal System in Sri Lanka". New York University School of Law. பார்த்த நாள் 4 March 2021.
  3. சிவகுமாரன், கே. எஸ். (28 ஆகத்து 2008). "As I Like It Thesavalamai Law explained". தி ஐலண்ட். பார்த்த நாள் 4 சூன் 2014.
  4. கீத பொன்கலன், ச., பௌத்த சிங்களவரும் சிறுபான்மையினரும், சென்னை, 1987
  5. பெண்களும் தேச வழமையும், தினகரன் வாரமஞ்சரி, ஆகஸ்ட் 22, 2009

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசவழமைச்_சட்டம்&oldid=3114928" இருந்து மீள்விக்கப்பட்டது