தையல் ஊசி
தையல் ஊசி (Sewing needle) என்பது துணிகளின் இரண்டு பக்கங்களை ஏதோவொரு நூலால் இணைத்துப் பிணைக்கப் பயன் படும் ஒரு கருவி. ஊசி என்பது மீண்டும் மீண்டும் நூலை துணியின் வழியே உட்புகுத்தி வெளியே எடுத்து பிணைக்கப் பயன்படும் கருவி. ஊசியை நூலோட்டி என்றே கூறலாம். ஊசி நூல் கோக்க மிகச் சிறு துளையுடன் (இதற்கு கண் என்று பெயர்) கொண்ட மெல்லிய கூர்மையன கருவி. இது இன்று பெரும்பாலும் இரும்பு போன்ற உறுதியான மாழையால் (உலோகத்தால்) செய்யப்படுகின்றது, ஆனால் நூலால் கலைநுணுக்கத்துடன் பூக்கள், பறவைகள், மற்றும் அடையாள முத்திரைகள் போன்ற படங்கள் உருவாக்கும் பூந்தையல் (embroidery) பணிகளுக்குப் பயன்படும் உயர்தரம் கொண்ட ஊசிகள் பிளாட்டினம் கலந்த ஊசிகளாகவும் இருக்கும். தொழில்நுட்பம் வளராத பழங்காலத்திலும், மக்கள் எலும்பிலோ, மரத்திலோ செய்யப்பட்ட மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தினர்.
ஊசிகள் பட்டுநூலால் நெய்த மெல்லிய ஆடைத்துணி முதல் மிகுந்த எடையுடைய பொருள்களை அடைத்து வைக்கும் கோணிப்பைகள், மற்றும் கெட்டியான தோல் பொருட்கள் (செருப்புகள், பணப்பைகள், குளிராடைகள்) முதலியவற்றைத் தைக்கவும் பயன்படுமாறு பல அளவுகளிலும் தடிப்புகளிலும் வருகின்றன. பொதுவாக தைக்கும் ஊசி அதன் அளவைக் குறிக்க 1 முதல் 10 வரையான எண்களால் குறிப்பிடப்படுகின்றன. எண் 10 என்பது மிக மிக மெல்லிய ஊசி. எண் 1 ன்பது மிகத்தடிப்பான ஊசி.
மெத்தை தைக்கும் ஊசி (upholstery needle) என்பது படுப்பதற்கும் அமர்வதற்கும் பயன்படும் மெத்தைகளைத் தைப்பதற்குப் பயன்படும் ஊசி. அருகிலுள்ள படத்தில் இடது மேற்புறமுள்ள வளைந்த ஊசி மெத்தைத் தைக்கப் பயன்படுத்தப்படும் ஊசியாகும்.