தொகாநிலைத்தொடர்
சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர். சொற்றொடரென்பது வாக்கியத்திலிருந்து வேறுபட்டது. சொற்றொடரில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை தனித்தனியே வந்தால் சொற்றொடராகா. பல சொல்லோ பல சொற்றொடர்களோ (தனித்தனியே) வரின் அது வாக்கியமாகும்.
எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய - தொல்காப்பியர்
ஒரு தொடரில் இரண்டு சொற்கள் அமைந்து அவற்றுக்கிடையில் சொல்லோ, உருபோ (தொக்காமல்) மறையாமல் நின்று பொருளை உணர்த்துவது "தொகாநிலைத்தொடர்" எனப்படும்
தொகாநிலைத்தொடர்கள்
தொகு“ | "முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை"[1] |
” |
என்ற நூற்பா தொகாநிலைத் தொடர்கள் எவை எனக்கூறுகிறது.
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத்தொடர்
- வினையெச்சத்தொடர்
- வேற்றுமைத்தொடர்
- இடைச்சொற்றொடர்
- உரிச்சொற்றொடர்
- அடுக்குத்தொடர்
எழுவாய்த்தொடர்
தொகுஎழுவாயைத்தொடர்ந்து பயனிலைவரும் தொடர் "எழுவாய்த்தொடர்" எனப்படும்.
சான்று: 'முல்லைவந்தாள்'.
இத்தொடரில் 'முல்லை' என்ற எழுவாயைத்தொடர்ந்து 'வந்தாள்' என்ற பயனிலை வந்துள்ளது.
விளித்தொடர்
தொகுஒருவரை அழைத்தற்பொருட்டு விளிக்குந்தொடர் விளித்தொடர் எனப்படும். அவ்வாறு விளியேற்கும் போது பெயர்ச்சொல்லின் கடை நீண்டு ஒலித்தல் இயல்பு.
சான்று: முருகாவா
இத்தொடரில் முருகனை விளித்தலால் விளித்தொடர் ஆகும்.
. இதுவே ’முருகா, வா’ என வந்தால் அது விளித்தொடராகாது. பலர் இருக்கையில் அதில் முருகனைக்குறிப்பிட்டு அழைக்கும்போது ‘முருகாவா’ என்று முருகனுக்கு பொருட்சிறப்புக்கொண்டுவருவதே விளித்தொடர். நின்றுகொண்டிருக்கும் முருகனை, வா என்று அழைக்கும்போது ‘முருகா வா’ என்று ’வா’ என்பதற்கு பொருட்சிறப்புக்கொண்டுவந்தால் வா தனித்துநிற்கும், அது சொற்றொடராகாது.
வினைமுற்றுத்தொடர்
தொகுஒரு வினை, முற்றுப்பெற்றதைக் குறித்த வினைமுற்று முதலில் வந்து பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் எனப்படும்
சான்று: 'கண்டேன்சீதையை'
இத்தொடரில் 'கண்டேன்' என்ற வினைமுற்று முதலில்வந்து 'சீதை' என்ற பெயர் தொடர்கிறது.
பெயரெச்சத்தொடர்
தொகுஒரு எச்சவினை பெயர்ச்சொல்லோடு முடிந்தால் அது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
சான்று: 'பாடியப் பாட்டு'
இத்தொடரில் 'பாடிய' என்ற எச்சவினை 'பாட்டு' என்ற பெயரைக்கொண்டு முடிந்தது.
வினையெச்சத்தொடர்
தொகுஒரு எச்சவினை வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் வினையெச்சத்தொடர் எனப்படும்.
சான்று: 'ஓடிவந்தான்'
இத்தொடரில் 'ஒடி' என்ற எச்சவினை 'வந்தான்' என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்தது
வேற்றுமைத்தொடர்
தொகுவேற்றுமையுருபு மறையாமல் வெளிப்படையாக வருந்தொடர் 'வேற்றுமைத்தொடர்' எனப்படும்
சான்று: 'வீட்டைக்கட்டினான்'
இத்தொடரில் 'ஐ' என்ற வேற்றுமையுருபு மறையாமல் வெளிப்படையாக வந்துள்ளது.
இடைச்சொற்றொடர்
தொகுதில், மன், மற்று, மற்றை, கொல், சோவென, பொள்ளென, திடுக்கென, போன்ற இடைச்சொற்கள் பெயரையோ, வினையையோ தொடர்ந்து வருவது இடைச்சொற்தொடர் எனப்படும்.
சான்று: 'மற்றொன்று', 'சோவெனப் பெய்தது'.
இத்தொடர்களில் 'மற்று', 'சோவென' ஆகிய இடைச்சொற்கள் முறையே, 'ஒன்று' என்ற பெயரையும், 'பெய்தது' என்ற வினையயும் தொடர்ந்து வந்தது.
உரிச்சொற்றொடர்
தொகுஒரு தொடரில் பெயரயும், வினையையும் தொடர்ந்து உரிச்சொல் வருமாயின் அது 'உரிச்சொற்றொடர்' எனப்படும்
சான்று: 'மாமுனிவர்', 'கடிநகர்', 'இயம்பலுற்றேன்'
இத்தொடர்களில் 'மா', 'கடி', 'இயம்பல்' என்பன உரிச்சொற்களாகும். இவை முறையே, முனிவர், நகர், என்ற பெயர்களையும், 'உற்றேன்' என்ற வினையையும் தொடர்ந்துவந்தது.
ஒரேசொல் பலமுறை அடுக்கிவந்தால் அது "அடுக்குத்தொடர்" எனப்படும்.
சான்று: வாழ்க வாழ்க!, அருமை அருமை!, தீதீதீ!, பாம்பு பாம்பு!
இத்தொடரில் ஒரேசொல் பலமுறை அடுக்கி வந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- நன்னூல் - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வெளியீடு சென்னை, பதிப்பு-2004.
- தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- இளம்பூரணர் உரை. அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.