தொண்டி (சேரர் துறைமுகம்)
தொண்டி சேர நாட்டுத் துறைமுகங்களில் ஒன்று. முசிறி, பந்தர், கொடுமணம் ஆகியவை சேரநாட்டிலிருந்த பிற துறைமுகங்கள் ஆகும். இவற்றைப்பற்றிப் பெரிப்ளஸ் குறிப்பிடுகிறார். இந்தத் தொண்டியின் அழகை சங்கப்பாடல்களில் சில மகளிரின் அழகோடு ஒப்பிட்டுப் போற்றுகின்றன. இந்த ஊரின் அரசன் இன்னின்னார் எனவும் பாடல்கள் தெரிவிக்கின்றன.
பெரிபிளசின் குறிப்புகள்
தொகுஇந்தியாவுக்கு வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளசு சேர மன்னர்களின் தொண்டி பற்றிக் குறிப்பிடுகிறார்.[1] இவர் கி.பி. 40-50 கால இடைவெளியில் இந்தியாவில் இருந்தார். தொண்டியை இவர் ‘திண்டிஸ்’ எனக் குறிப்பிடுகிறார். முசிறி (முசிறிஸ்) போலவே கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குக் கப்பல்கள் அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டிக்கும் முசிறிக்கும் இடைவெளி 500 கண்ணிய தூரம். [2] தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் நெல்சிந்தா ஊர் உள்ளது. இது பாண்டிய நாட்டு ஊர். நெல்லினூரும் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில் உள்ளது.
தொண்டியின் அழகு
தொகுதொண்டியில் நெல்வயல் மிகுதி. [3] தொண்டியில் விளைந்த வெண்ணெல் அக்காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டது. [4] தொண்டியில் வாழ்ந்த மகளிர் அவல் இடிக்கும் உலக்கையை வரப்பில் சார்த்திவிட்டு வண்டல் விளையாடி மகிழ்வார்களாம். [5]
அம்மூவனார் காட்டும் தொண்டி
தொகுஐங்குறுநூறு சங்கநூல் தொகுப்பில் அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடல்கள் 100 உள்ளன. அவற்றில் 'தொண்டிப் பத்து' எனத் தலைப்பிடப்பட்டுள்ள பாடல்கள் 10. அவை தொண்டியின் அழகைத் தலைவியின் அழகோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.
- தலைவியின் தோள் போல் இன்பம் தரும் ஊர் தொண்டி. [6]
- தொண்டி ஒரு கடல்நீர்த் துறை [7] நெய்தல் பூ மணக்கும் ஊர் [8] முண்டகம் மணக்கும் [9] அழகால் வருத்தும் அணங்குகள் நடமாட்டம் உள்ள ஊர் [10] மகளிரின் பண்பும் பயனும் கொண்ட ஊர் [11]
- நண்டு தாக்கி இறால்மீன் பிறழும் [12]
- செங்குட்டுவன் ஊர். [13]
- தொண்டியில் வாய்ந்த பரதவர் கடலில் பிடித்துவந்த சுறாமீனை தொண்டிப் பாக்கத்துக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்து தருவார்களாம். [14]
தொண்டி அரசர்கள்
தொகு- தொண்டி, வஞ்சிச் சேரன் குட்டுவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.[15]
- வஞ்சிச் சேரன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டிக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்தான். [16]
- தொண்டியைக் கருவூர்ச் சேரன் இளஞ்சேரல் இரும்பொறை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். [17]
- கருவூர் அரசன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டியைப் போரிட்டு வென்றான். [18]
- கருவூர்ச் சேரன் பொறையன் ஆட்சிக் காலத்தில் தொண்டி அரசியல் போராட்டம் இல்லாமல் அவனது ஆளுகையின் கீழ் அமைதியாக இருந்தது. [19] [20] [21] அதனால் பொறையன் தன் பகைவனான மூவனோடு போரிட்டு அவனது பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் இரண்டாவது தலைநகர் தொண்டியின் கோட்டைக் கதவில் வெற்றிச் சின்னமாகப் பதித்துக்கொண்டான். [22]
அடிக்குறிப்பு
தொகு- ↑ 54. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea. The Voyage around the Erythraean Sea
- ↑ ஸ்டேடியம் கண்ணுக்கெட்டிய தூரம்.
- ↑ உழவர் நெல் அறுக்கும்போது அறுபட்ட செய்தல் பூ பூப்பது போன்று தலைவியின் கண் பூக்குமாம்.
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி,
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. (நற்றிணை 195) - ↑
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி (குறுந்தொகை 210) - ↑
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் (குறுந்தொகை 238) - ↑ ஐங்குறுநூறு 171, 180
- ↑ வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி (ஐங்குறுமூறு 172)
- ↑ தொண்டித் தண் நறு நெய்தல் நாறும் (குறுந்தொகை 173)
- ↑ ஐங்குறுநூறு 177
- ↑ அணங்குடைப் பனித் துறைத் தொண்டி (ஐங்குறுநூறு 174)
- ↑ தொண்டி அன்ன நின் பண்பு (ஐங்குறுநூறு 175), பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி,(ஐங்குறுநூறு 176)
- ↑ அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் (ஐங்குறுநூறு 179)
- ↑ ஐங்குறுநூறு 178
- ↑ அம்மூவனார் அகம் 10
- ↑
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, (அகம் 290) - ↑ தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்து (பதிற்றுப்பத்து – பதிகம் 6)
- ↑ வளைகடல் விழவின் தொண்டியோர் பொருநன் (பதிற்றுப்பத்து 87)
- ↑
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந! (புறநானூறு 17) - ↑ திண் தேர்ப் பொறையன் தொண்டி (அகம் 60)
- ↑
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி; (குறுந்தொகை 128) - ↑
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி நற்றிணை 8 - ↑
மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், நற்றிணை 18