தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் செய்திகள்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளளது. அவற்றில் முதலாவது எழுத்ததிகாரத்தில் எட்டாவது இயலாக அமைந்துள்ளது இந்தப் புள்ளிமயங்கியல்.
பண்டைய தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யில் முடிவதில்லை. (இக்காலத்தில் பிறமொழிச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதும்போது கார்க், மார்ச், பந்த், சர்ப் என்று எழுதுகின்றனர்). றகார எழுத்து தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து ஆகையால் இந்த ஒலியில் முடியும் சொல் பிறமொழியில் இல்லை.
மெல்லின, இடையின எழுத்துக்கள் 12.
இவற்றில் ஙஃகான் நீங்கலாக ஏனைய 11 எழுத்துக்களில் முடியும் சொற்கள் தமிழில் உள்ளன.
இவற்றில் முடியும் சொற்கள் நிலைமொழியாக நின்று புணரும் பாங்கு இந்த இயலில் கூறப்படுகின்றது.
வருமொழிக்கு மொழிமுதல் எழுத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மொழிமுதல் எழுத்துக்கள் மொத்தம் 22.
(உயிரெழுத்து 12, மெய்யெழுத்து க ச த ப ஞ ந ம ய வ ஆகிய 9, நுந்தை என்னும் குற்றியலுகரம் 1)
(நுந்தை என்னும் சொல் புணர்மொழியில் முற்றியலுகரமாகவே ஒலிக்கப்படும்)
செய்திகள் நூற்பா வரிசை எண்ணிட்டுத் தரப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைப் பின்பற்றியவை.
மெல்லொற்று
தொகுஞ ஒற்று
- ஞ ஒற்றில் முடியும் சொல் உரிஞ் எதுவாயினும் உகரம் இடையில் சேர்ந்து புணரும்
- (தோலைக் குறிக்கும்போது இது பொயர்ச்சொல். உரிஞ்சுதலைக் குறிக்கும்போது வினைச்சொல்)
- உரிஞுக் கடிது, உரிஞுச்சிறிது, உரிஞுத்தீது, உரிஞுப்பெரிது என வல்லினம் வரும்போது எழுவாய்த்தொடர் அல்வழியில் மிக்கது,
- உரிஞுக் கடுமை, உரிஞுச்சிறுமை, உரிஞுத்தீமை, உரிஞுப்பெருமை என வேற்றுமையில் மிக்கது -1
- மெல்லினம் வரும்போது
- உரிஞு ஞான்றது, உரிஞு நீண்டது, உரிஞு மாண்டது, உரிஞு வாடிற்று
- உரிஞு ஞாற்சி, உரிஞு நீட்சி, உரிஞு மாட்சி, உரிஞு வலிமை என வரும் -2
ந ஒற்று
- ந ஒற்றில் முடியும் சொல் இரண்டு பொருந், வெரிந் என்பன அவை.
- (பொருந் என்பது பாட்டுக்கேற்ப நடித்தலையும், போரிடுதலையும் குறிக்கும். – தொழிற்பெயர்)
- பொருநுக் கடிது, பொருநுச் சிறிது, பொருநுத் தீது, பொருநுப் பெரிது என அல்வயியில் வல்லினம் மிக்கது -3
- பொருநக்கடுமை, பொருநச்சிறுமை, பொருநத்தீமை, பொருநப்பெருமை, பொருநஞாற்சி, பொருநநீட்சி, பொருநமாட்சி, பொருநவலுமை என வேற்றுமையில் உகரம் கெட்டு அகரம் வந்தது -4.
- வெரிங்குறை, வெரிஞ்செய்கை, வெரிந்தலை, வெரிம்புறம் என வேற்றுமையில் வல்லினம் அல்லாதவை வரும்போது உகரம் கெட்டு அதன் எழுத்து மிக்கது -5
- வெரிக்குறை, வெரிச்செய்கை, வெரித்தலை, வெரிப்புறம் என வல்லினம் மிகுதலும் உண்டு -6
ண ஒற்று
- மட்குடம், மட்சாடி, மட்டூதை(மண்+தூதை), மட்பானை என வேற்றுமையில் ணகாரம் டகாரம் ஆகும் -7
- ஆண், பெண் என்னும் சொற்கள் ஆண்கை, ஆண்செவு, ஆண்தலை, ஆண்புறம் \ பெண்கை, பெண்செவி, பெண்தலை, பெண்புறம் என இயல்பாகும் -8
- ஆண் என்னும் சொல் மரத்தைக் குறிக்குமாயின் இசை மரத்துக்குச் சொன்னது போல் ஆணங்கோடு, ஆணஞ்செதிள், ஆணந்தோல் (ஆணம்பழத்தின் தோல்), ஆணம்புறம் என முடியும் -9 \
- விண் என்பது காயப்பெயர் -10. இது என தொழிற்சொல் வரும்போது செய்யுளில் ‘விண்ணத்துக் கொட்கும்’ என அத்துச்சாரியை பெறும்.
- மண் என்னும் சொல் குளித்தலைக் குறிக்கும் மொழிற்பெயராயின் மண்ணுக் கடிது, மண்ணுக் கடுமை என உகரம் பெற்று முடியும் -11
- உமண் என்பது உப்புவணிகரைக் குறிக்கும் கிளைப்பெயர். இது உமண்குடி, உமண்சேரி, உமண்தோட்டம், உமண்பாடி எனத் திரிபின்றி வரும் -12 \
- எள்ளைக் குறிக்கும் எண் என்னும் சொல் அல்வழியிலும் எட்கடிது, எட்சிறிது, எட்டீது, எட்பெரிது என டகரமாகத் திரியும் -13
- முரண் என்னும் தொழிற்பெயர் முரண்கடிது, முரண்சிறிது, முரண்டீது, முரண்பெரிது என இயல்பாக அமையும் -14
ம ஒற்று
- வேற்றுமையில் மரக்கோடு, மரச்செதிள், மரப்பூ என அமையும்போது மஃகான் கெட்டு வல்லினம் மிக்கது -15
- மராஅடி (மரம்+அடி), குளாஅம்பல் (குளம்+ஆம்பல்) என வரும் -16
- குளங்கரை, குளக்கரை, குளஞ்சேறு, குளச்சேறு, குளந்தாது, குளத்தாது, குளம்பூழி, குளப்பூழி (பூழி = புழுதி) என மெல்லினம் உறழ்ந்தும் வரும் -17 \
- இல்லம் என்பது மரத்தைக் குறிக்கும்போது இல்லங்கோடு என வரும் -18 \
- அல்வழியில் மரங்குறிது என மெல்லெழுத்துப் பெறும் -19 \
- அகம்+கை என்பது அங்கை எனவும், அகங்கை எனவும் வரும் -20 \
- இலம்+படு என்பது செய்யுளில் ‘இலம்படு புலவர்’ என வரும் -21
- ஆயிரம்+ஒன்று என்பது ஆயிரத்தொன்று என அத்துச்சாரியை பெற்று வரும் -22
- ஆயிரம் என்னும் சொல் அடைமொழியோடு வந்தாலும் பதினாயிரத்திரண்டு என அத்துச்சாரியை பெற்றே வரும் -23
- ஆயிரம்+கலம் என்பது ஆயிரக்கலம் என வரும் (கலம் – அளவுப்பெயர்). ஆயிரக்கழஞ்சு (கழஞ்சு – நிறைப்பெயர்) -24
- வேற்றுமைப்பொருள் தரும் படர்க்கையில் எல்லாம்+தங்கை எனில் எல்லார்தங்கையும் (தம் கைகளெல்லாம் என்பது பொருள்) என்றும், முன்னிலையில் எல்லாம்+நுங்கை எனில் எல்லீர்நுங்கையும் என்றும் வரும் -25
- அல்வழிப்புணர்ச்சியில் தம், நும் இடையில் வராமல் எல்லாரும் குறியர் என வரும் -26
- எல்லாம் என்னும் சொல் வேற்றுமையில் சாரியை பெறும். அல்வழியில் சாரியை பெறாது. எல்லாக் குறியவும் என அஃறிணையில் வரும் -27
- எல்லாங் குறியவும் எனினும் மானம் (குற்றம்) இல்லை -28
- எல்லாநங்கையும் என்பது உயர்திணை முடிபு (தன்மை) -29
- நும்+கை என்பது நுங்கை என வரும் -30
- (நீர்+குறியிர்) நும்+குறியிர் என்பது நீயிர் குறியிர் என வரும் -31
- ஆங்கிலத்தில் It is I என்று சொல்வதில்லை. It is me என்று சொல்கிறோம். இது இந்தத் தொல்காப்பிய மரபு.
- செம் என்னும் சொல் செம்புக் கனிமத்தால் கலன்கள் செய்தலைக் குறிக்கும். இச்சொல் செம்முக்கடிது என உகரம் பெற்று வரும் -32
- ஈம் = உடலுக்கு ஈயப்படும் பிணம் சுடும் தொழில். கம் = கலை உருவம் செய்யும் கம்மாளர் தொழில். உரும் = மேகம் உருமுதல். இவையும் ஈமுக் கடிது, கம்முக் கடிது, உருமுக் கடிது என உகரம் பெற்று முடியும் -33
- ஈம், கம் என்பவை வேற்றுமைப் பொருளில் ஈமக்குடம், கம்மக்குடம், ஈமச்சாடி, கம்மச்சாடி, ஈமத்தூதை, கம்மத்தூதை, ஈமப்பானை, கம்மப்பானை என வரும் -34
- வ வந்தால் மகரம் குறுகும். அது நிலம்வலிது என வரும் -35
- மகம் என்னும் நாட்பெயர் மகத்தாற் கொண்டான் என வரும் -36
ன ஒற்று
- வல்லெழுத்து இயையின் பொன்+குடம் என்பது பொற்குடம், பொற்சாடி, பொற்றூதை, பொற்பானை என னகார றகார மாற்றம் நிகழும் -37
- மன், சின், ஆன், ஈன், பின், முன் என்னும் இடைச்சொற்களும், னகர முடிவு கொண்ட வினையெஞ்சு கிளவியும் னகார றகார மாற்றம் கொள்ளும் -38
- அதுமற் கொண்கன் தேரே (மன்),
- காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் (சின்),
- ஆற்கொண்டான் (ஆன் - அவ்விடத்தில் கொண்டான்), ஈற்கொண்டான் (ஈன் - இவ்விடத்தில் கொண்டான்)
- பிற்கொண்டான் (பின் – பின்புறம் மறைவாகக் கொண்டான்)
- முற்கொண்டான் (முன் – முன்புறமாக நேருக்கு நேர் கொண்டான்)
- வரிற்கொள்ளும் (வரின் = வந்தால்) அவ்வயிற் கொண்டான், இவ்வயிற் கொண்டான், உவ்வயிற் கொண்டான் (சுட்டுமுதல் வயின் திரிந்தது) எவ்வயிற் கொண்டான் (எகரமுதல் வயின் திரிந்தது) -39
- குயின்குழாம், குயின் செலவு, குயின் தோற்றம், குயின் பறைவு (=மேகத்தின் பறத்தல்) எனக் குயின் என்னும் சொல் இயற்கையாகும் -40
- எகினங்கோடு (புளியைக் குறிக்கும் மரப்பெயர் அம்-சாரியை பெற்றது) -41
- எகினக்கால் (எகினம் = அன்னம்) -42
- எயின்குடி (எயின் = எயினர் என்னும் வேடர் சுற்றத்தைக் குறிக்கும் பெயர்) -43
- மீன்கண், மீற்கண் (மீன் என்னும் சொல் இயல்பும், திரிபுமாக உறழ்ந்து வந்தது) -44 \
- தேன்குடம், தேற்குடம், -46 \
- தேஞெரி (=தேன் பிழிவு) -47 \
- தேனிறால் (=தேன்கூடு) -48 \
- தேத்திறால் -49 \
- மின், பின், பன், கன் என்பன தொழிற்பெயர் -50 (=மின்னுதல், பின்னுதல், பன்னிப் பன்னிப் பேசுதல், திருட்டுச்சாவி போன்ற கன்னக்கோல் தொழில்)
- மின்னுக் கடிது, மின்னுக் கடுமை, பின்னுக் கடிது, பின்னுக்கடுமை, பன்னுக் கடிது, பன்னுக் கடுமை, கன்னுக் கடிது, கன்னுக் கடுமை
- கன்னக் குடம் -51 \
- சாத்தன்+தந்தை என்பது சாத்தந்தை எனவும், கொற்றன்+தந்தை என்பது கொற்றந்தை எனவும் வரும் -52
- ஆதன்+தந்தை = ஆந்தை, பூதன்+தந்தை = பூந்தை -53
- பெருஞ்சாத்தன்றந்தை -54
- சாத்தன்+கொற்றன் = சாத்தங்கொற்றன், கொற்றன்+கொற்றன் = கொற்றங்கொற்றன் -55
- தான், பேன், கோன் என்பவை இயற்பெயர். -56
- தான்+தந்தை = தான்றந்தை (=தான் தந்தை, இவன் மகன்), பேன்றந்தை (=தலைப்பேனின் தந்தை), கோன்றந்தை (=அரசனின் தந்தை), தான்+கை = தன்கை, யான்+கை = என்கை -57
- தான் குறியன் (அல்வழிப் புணர்ச்சி), தான்+புகழ் = தற்புகழ் (வேற்றுமைப் புணர்ச்சி) -58 \
- அழன்+குடம் = அழக்குடம், அழச்சாடி, அழத்தூதை, அழப்பானை -59
- முன்+இல் = முன்றில் -60
- பொன்+படை = (செய்யுளில்) பொலம்படை -61
இடையொற்று
தொகுய ஒற்று
- நாய்க்கால் (வேற்றுமையில் மிகல்) -62
- தாய்கை (வேற்றுமையில் மிகாமை) (உயர்திணை முன் என்க) -63
- மகன்றாய்க் கலாம் (=மகனுக்கும் தாய்க்கும் சண்டை, இங்குத் தாய் என்பது அஃறிணை) -64
- வேய்ங்குறை, வேய்க்குறை (வேய்+குறை) -65
- நாய் கடிது (அல்வழியில் இயல்பு) -66
ர ஒற்று
- தேர்க்கால் (வேற்றுமை) -67
- ஆர், வெதிர், சார், பீர் என்பவை மரப்பெயர். ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங்கோடு என மெல்லெழுத்து பெறும். -68
- சார்க்காழ் (வல்லெழுத்து பெற்றது) -69
- பீரங்கோடு (அம் பெற்றது) -70
ல ஒற்று
- கற்குறை (ல்-ற் திரிவு) -71
- கன்ஞெரி (கல்+ஞெரி) (ஞெரி = நெரிந்த துகள்) கன்னுனி (கல்+நுனி), கன்முறி (கல்+முறி) (=கல்வெட்டு) -72
- கல் குறிது, கற்குறிது (உறழ்) -73
- கஃறீது (கல்+தீது), கற்றீது (கல்+தீது) (த வரும்போது) -74
- பால் கடிது (நெடியதன் முன் இயல்பு) -75
- நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்போர்
- செல் = நெல்லைக் கொறிக்கும் செல்லுப்பூச்சி. கொல் = கொல்லன் தொழில்
- நெல், செல், கொல், சொல் ஆகிய சொற்கள் அல்வழியிலும் ல்-ற் திரிபு நிகழும். -76
- இல்லைக் கல், இல்லை கல், இல் கல், இல்லாக் கல், சுளை, துடி, பறை (இல் என்னும் சொல் இல்லை என்னும் பொருளில் வரும்போது) -77
- வல்லுக் கடிது, வல்லுக் கடுமை, வல்லு ஞாற்சி (வல் என்னும் சொல் வல்லாட்டத்தைக் குறிக்கும் தொழிற்பெயர்) -78
- வல்லநாய் (வல்+நாய்), வல்லப்பலகை (வல்+பலகை) -79
- பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு (பூல், வேல், ஆல் ஆகிய மரப்பெயர்கள் அம் பெற்று வரும்) -80
- கல்லுக் கடிது, கல்லு மாண்டது, கல்லுக் கடுமை (கல் என்பது தொழிற்பெயர்) (கல் = தோண்டுதல், கற்றல்) -81
- வெயிலத்துக் கொண்டான் (வெயில்+கொண்டான்) (அத்துச்சாரியை பெற்றது) -82
வ ஒற்று
- அவற்றுக்கோடு (அவ்+கோடு), இவற்றுக்கோடு, உவற்றுக் கோடு செவி, தலை, புறம் -83
- அஃகடிய (அல்வழி) -84
- அஞ்ஞாண், அந்நூல், அம்மணி என மெல்லினம் வரும்போது வரும் -85
- அவ்யாழ் என வரும் -86
- தொழிற்பெயர் தெவ்வுக் கடிது என வரும் (தெவ் = பகைமைகொள்) -87
ழ ஒற்று
- பூழ்க்கால் என வரும் -88
- தாழக்கோல் (தாழ்+கோல் = சாவி) என அகரம் பெற்று வரும் -89
- தமிழக் கூத்து, தமிழச் சேரி, தமிழத்தோட்டம், தமிழப்பள்ளி (தமிழ் என்னும் சொல் அகரம் பெறல்) -90
- குமிழங்கோடு, குமிழமரம் (குமிழ் என்னும் மரப்பெயர் அ பெறல்)வரும் -91
- பாழ்ங்கிணறு, பாழ்க்கிணறு, சேரி, தோட்டம், பாடி
- (பாழ் என்னும் சொல் உறழ்) -92
- ஏழ் என்னும் எண் ஏழன் காயம் , சுக்கு, தோரை, பயறு என வரும் -93
- (காயம் = பெருங்காயம்)
- அளவும், நிறையும் வந்தால் என உ பெற்று வரும்.
- ஏழு கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு (அளவை)
- ஏழு கழஞ்சு, தொடி, பலம் (நிறை)
- எழுமூன்று, எழுநான்கு என எண்ணுக்கும் கொள்க -94
- எழுபஃது (ஏழ்+பத்து) -95
- ஏழாயிரம் (ஏழ்+ஆயிரம்) -96
- ஏழ் நூறாயிரம் (ஏழ்+நூறாயிரம்) -97
- தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன அல்பெயர். (கணக்கில் இல்லாத எண்ணுப்பெயர்
- ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் -98
- ஏழகல், ஏழுழக்கு (உயிர் வரும்போது)
- கீழ்குளம், கீழ்க்குளம் (உறழ்) -100
- கூழ்(குடிக்கும் கூழ்)
ள ஒற்று
- முட்குறை (முள்+குறை) (ளகாரம் டகாரம் ஆனது) -101
- முண்நீண்டது (ளகாரம் ணகாரம் ஆனது) -102
- முள்கடிது, முட்கடிது (அல்வழியில் உறழ்) -103
- முஃடீது, முட்டீது (தஃகான் வரும்போது உறழ்) -104
- வாள் கடிது, கோள் கடிது, தோட்கடிது, நாட்கடிது நெட்டெழுத்து மொழி உறழ் -105
- துள்ளுக்கடிது (தொழிற்பெயர் உகரம் பெற்று வரும்) -106
- இருளத்துக் கொண்டான் -107
- புள்ளுக் கடிது, வள்ளுக் கடிது, புள்ளுக் கடுமை, வள்ளுக் கடுமை, புட்கடுமை, வட்கடுமை
- (புள், வள் என்பவை தொழிற்பெயர் போல அமையும்)
- (புள் = புண் ஆக்கு, வள் = வளை) -108
- “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே” (தொல்காப்பியம்)
- மக்கள் என்னும் உயர்திணைப்பெயர் ளகாரம் டகாரம் ஆகி வரும் -109
புறனடை
தொகுஉணரும்படி கூறிய இந்த மொழிமரபுகளை எண்ணிப் பார்த்து தக்கவழி உணர்ந்துகொள்ள வேண்டும். -110