வல்லாட்டம்
|
வல்லாட்டம் அல்லது வல்லுப்போர் [1] என்பது இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இது வல்லு என்ற சங்கக்காலப் பலகை விளையாட்டுகளில் ஒரு வகையாகும். சதுரங்க விளையாட்டின் தாய் விளையாட்டாக அறியப்படும் இவ்விளையாட்டு பழங்காலத்திலேயே தமிழர்களால் பொது மன்றங்களில் ஆர்வமுடன் விளையாடப்பட்டுள்ளதால் வல்லாட்டமானது தமிழர்களின் சதுரங்கம் (Chess of the Tamils / Tamilar vallattu / தமிழர் வல்லாட்டு) என அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் இவ்விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளமையால் இது ஏறக்குறைய கி.மு.3ஆம் நூற்றாண்டிலேயே விளையாடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
விளையாட்டு
தொகுஇவ்விளையாட்டு ஊர்களின் நடுவே பொது மன்றங்களில் விளையாடப்படும். எண்பேராயம் என்ற சங்கக்கால அரசு முறைமையில் இவ்விளையாட்டு எட்டுக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள காய்களை ஆராய்ந்தபோது அது சதுரங்கம் போன்றதொரு விளையாட்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது[2].
வல்லுப்பலகை
தொகுவல்லாட்டம் ஆடப்படும் பலகை வல்லுப்பலகை என்று அழைக்கப்பட்டதாகக் கலித்தொகைப் பாடல் 94 குறிப்பிடுகிறது. முதியவர்கள் இதனை விளையாடியதாக அகநானூறு 377ஆம் பாடல் குறிப்பிடுகிறது[3]. வல்லுப்பலகையானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும்[4] அதை ஒரு குள்ளமான உயரத்துடன் ஒப்பிட்டும் கலித்தொகை கூறுவதால்[5] இது சதுர வடிவில் ஏறக்குறைய இரண்டு முதல் மூன்றடி வரையான சதுரப் பலகையாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. வல்லாட்டத்தைப் பலகையில் மட்டுமில்லாமல் வீடுகளின் தரையிலும் விளையாடியதாகப் புறநானூறு குறிப்பிடுகிறது[6].
அரங்கு என்பது விளையாட்டுகளில் வரையப்படும் கட்டங்களைக் குறிக்கும் சொல். "பெரியோரின் அவையில் நூற்களைக் கல்லாதவன் பேசுவதென்பது, அரங்கு இல்லாமல் வட்டாடுவதை போன்றது" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது[7]. இங்கு அரங்கு என்பது வட்டாடும் கோட்டுடைய அறையைக் குறிக்கிறது. இது வட்டரங்கு, கட்டரங்கு என இரண்டு வகைப்படுகிறது. இதில் வல்லாட்டமானது கட்டரங்கு வகையைச் சார்ந்தது.
- வட்டரங்கு என்பது விளையாட்டிற்கு வரையப்படும் வட்டம் ஆகும். வட்டரங்கு வரைந்து சிறுவர்கள் நெல்லிக்காய் வைத்து வட்டாடிய செய்தி பற்றி நற்றிணைப் பாடல் ''வட்டரங்கு இழைத்து'' எனக் குறிப்பிடுகிறது[8].
- கட்டரங்கு என்பது விளையாட்டுப் பலகையில் வரையப்படும் கட்டங்கள் அல்லது சதுரமான கோடுகளைக் குறிக்கும். பழங்காலத்தில் பலகை விளையாட்டுகளில் வரையப்பட்ட இந்த அறைகள் கட்டம் என்று அழைக்கப்பட்டதைப் பெருங்கதை நூல் குறிப்பிடுகிறது[9]. கட்டரங்கு என்ற சொல் சதுரங்க விளையாட்டைக் குறிக்கும் சதுரங் என்ற சொல்லுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. வல்லாட்டத்தில் ஒரு காயைக் குறிவைத்துச் சூழ்ந்து கொள்ளும் முறை கட்டம் கட்டுதல் எனப்படுகிறது. இது இன்றும் பேச்சு வழக்கில் உள்ளது.
வல்லுக்காய்கள்
தொகுவிழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கருப்பு மற்றும் சிகப்பு வண்ண வல்லாட்ட காய்கள் பழமையானவை ஆகும்.கோவை போளுவாம்பட்டியில் நடைபெற்ற அகழாய்வில், சங்கக்கால மக்கள் யானை, குதிரை, போர்மறவர், மன்னர் போன்ற விளையாட்டுக் காய்களைச் சுடுமண்ணில் செய்து விளையாடியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளனது. மேலும் அங்கு பல சதுரங்கக் காய்கள் போன்ற சுடுமண் விளையாட்டுக் காய்கள் கிடைத்துள்ளன[10]. வல்லாட்டக் காய்களைப் பற்றிய இலக்கியக் குறிப்பில் பருவப் பெண்ணின் முலைபோல் உள்ளதாக குற்றாலக் குறவஞ்சி கூறுவதால், அகன்ற அடிப்பகுதியும் சிறிய மேல்பகுதியும் கொண்ட கூர் வடிவிலான காய்களும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
கோட்டை என்பது வல்லாட்டத்தில் யானையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் எதிரிகளின் கோட்டையைத் தகர்க்க யானை பயன்படுத்தப்பட்டதை அகநானூறு கூறுகிறது [11]. இதன் தொடர்ச்சியாக சதுரங்க யானைக் காயும் தமிழில் கோட்டை (சதுரங்கக் காய்) என்று அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவில்தான் முதன்முதலாக யானைப்படை உருவாக்கப்பட்டதாகவும் அது பெரும்பாலும் எதிரிப் படையினரின் கோட்டைகளை அழிக்கப் பயன்படுத்தியதாகவும் தாமசு ட்ரவுட்மேன் தனது ‘எலிஃபன்சு அண்ட் கிங்குசு: ஆன் என்விரான்மென்றல் இசுட்டரி’ (Elephants and Kings: An Environmental History) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் [12]. இதனால் கோட்டை என்ற சொல் யானையைக் குறிக்க வல்லாட்டத்தில் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. தமிழர்களின் படையணிகளில் யானைப்படையே மிக முக்கியமானதாகும். வல்லாட்டத்திற்கு யானைக்குப்பு என்ற பெயரும் உள்ளது. இதனை நாலாயிர திவ்யப்பிரபந்த வியாக்கினமான ஈடு குறிப்பிடுகிறது[13]. யானைக்குப்பு என்பதற்கு யானையினை வைத்து விளையாடும் விளையாட்டு என்றும் பொருள். சீனர்கள் சதுரங்க விளையாட்டை யானை சதுரங்கம் என்ற பொருள் கொண்ட (சியாங்) xiàngqí 象棋 என்று அழைக்கின்றனர். இச்சீனச் சொல்லின் முதற்பகுதியாகிய 象 (சியாங்) என்றால் உருவம் அல்லது யானை என்று பொருள். இரண்டாவது பகுதியாகிய 棋 (சி) என்றால் சதுரங்கம். இதுவும் யானை விளையாட்டு என்ற பொருளையே தருகிறது.கோட்டைவிடுதல் என்பது வல்லாட்டத்தில் யானைக்காயின் இழப்பை குறிக்கும் சொல்லாகும்.
வல்லுநர்
தொகுவல்லாட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் வல்லுநர் என்று அழைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களை வல்லுநர் என்றே அழைக்கும் வழக்கம் தொடர்கிறது.
எண்பேராயம்
தொகுவல்லாட்டத்தில் சங்கக்கால ஆட்சி முறையான எட்டு முக்கியத் தலைமை கொண்ட எண்பேராயம் எனும் முறையில் காய்களும் அதற்கான கட்டங்களும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டு மன்னர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களை எண்பேராயம் என்று பகுத்துக் காட்டுவது சங்கக்கால வழக்கம். கரணத்தின் திரள்கள், வாய்க்கடை காப்போர், நகரி மாக்கள், படைத்தலைவர், கிளைச்சுற்றம், யானை ஊர்வோர், குதிரை ஊர்வோர், காவிதியர் ஆகியோர் அந்த ஆயத்தில் இடம்பெற்றிருந்ததாக நிகண்டுநூல் குறிப்பிடுகிறது[14]. இவர்களை முறையே
- செயலாளர்
- காவல்
- ஊர் தலைவர்
- படைத்தலைவர்
- தொண்டர் படை
- யானை படை
- குதிரை படை
- உழவர் படை
என உணர்ந்து கொள்ளலாம்.எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது[15]. இது வாகைத் திணையின் முப்பது துறைகளில் ஒன்று. சேரன் செங்குட்டுவன் அவையில் எண்பேராயம் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது[16]. இந்த எண்பேராயத்தின் வெளிப்பாடாகவே வல்லாட்டத்தில் எட்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காவல் எட்டுக் கட்டங்களிலும் மன்னரும் மற்ற எழுவரும் மீதக் கட்டங்களிலும் நிறுத்தப்படுகின்றனர். காவல் மிக முக்கியமானதாக அறியப்பட்டதனால் இதனைப் புறக்கடைக் காப்பாளர் என்று நிகண்டு குறிப்பிடுகிறது. இதற்கு முதல்வரிசைக் காவலர்கள் எனப் பொருள்.
தொன்மக்கதை
தொகுதமிழ் மக்களின் நம்பிக்கைப்படி வல்லாட்டத்தின் தோற்றுவாய் போர்க்கடவுள் முருகன் ஆவார்.காஞ்சிபுரத்தில் உள்ள வல்லக்கோட்டைக்கு அருகில் உள்ள திருப்பட்டி என்னும் ஊரில், முருகன் வல்லாட்ட போர்நகர்வினை உருவாக்கியதால் அருகிலுள்ள கோட்டை வல்லகோட்டை என்றும், கோவில் வல்லக்கோட்டை முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. வல்லம்போரில் சோழர்கள் வல்லாட்ட போர்நகர்வினை வைத்து போரிட்டதாகவும், மேலும் சீவல்லபா என்ற பாண்டிய மன்னன் இலங்கை தேசத்தை எதிர்த்துப் போரிட்டபொழுது வல்லாட்ட விளையாட்டு மூலம் படை நகர்வினைக் கணித்துப் போரில் வென்றதாகவும் இதனால் வல்லபா என்ற பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.இந்தியப்புராணங்களில் சதுரங்கமானது தெற்கிலிருந்து பரவியதாக குறிப்பிடும்வண்ணமாக இராமாயண காவியமானது மன்னன் இராவணன் தனது மனைவி மண்டோதரியை மகிழ்விக்க சதுரங்கத்தை கண்டுபிடித்தார் என்றும் அவர் உடனடியாக அவரை தோற்கடித்தார் என்றும் குறிப்பிடுகிறது [17]. .
தலபுராணச் செய்தி
தொகுதிருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் தலபுராணம் வல்லாட்டம் பற்றிய சில தகவல்களைத் தருகிறது. வாசுசேனன் (வாசுதேவன்) என்ற பாண்டிய மன்னனின் மகள் ராசராசேசுவரி வல்லாட்டத்தில் சிறந்து விளங்கியதாகவும், வல்லாட்டத்தில் யார் தன் மகளை வெற்றி பெறுகிறார்களோ அவருக்கே அவளைத் திருமணம் செய்து வைப்பதாகவும் அறிவித்தார் மன்னர். பின்னர் இறைவனே மனித வடிவில் வந்து ராசராசேசுவரியை வல்லாட்டத்தில் வென்று வல்லபா என்ற பட்டத்துடன் மணமுடித்ததாகவும் இத்தலபுராணம் கூறுகிறது [18].
வரலாறு
தொகுகி.மு.3ஆம் நூற்றாண்டைய சங்க இலக்கியங்களில் வல்லாட்டம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுவதாலும் கீழடி அகழாய்வில் ஆட்டக்காய்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் இது கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே விளையாடப்படும் விளையாட்டு என்பது உறுதியாகிறது. பரிபாடலில் இவ்விளையாட்டை வல்லுப்போர் எனப் போருடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளதால் இது சதுரங்க விளையாட்டை ஒத்த விளையாட்டாகவும் கருதப்படுகிறது. கி.பி.18ஆம் நூற்றாண்டைய நூலான குற்றாலக் குறவஞ்சியில் வல்லாட்டக் குறிப்புகள் வருவதால் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலும் வல்லாட்டம் தமிழர்களால் விளையாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
வல்லாட்டம் போர்முறை விளையாட்டு என்பதால் இது தமிழர் சமுகத்தில் காய்கள் நகர்த்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாகவே சங்கக்காலத்தில் விளங்கியுள்ளது. காடுகளில் வேட்டைச் சமுகமாக வாழும் காலத்தில் விரட்டுதல், தாண்டுதல் பயிற்சிக்காகப் பழங்காலத்தில் விளையாடிய எட்டுக்கோடு விளையாட்டாகவும் பின்னர் மேய்ச்சல் சமுகமாக வாழ்ந்த காலத்தில் விளையாடிய ஆடு புலி ஆட்டம் ஆகவும் மன்னர் ஆட்சிக்காலத்தில் வல்லாட்டமாகவும் பிற்காலத்தில் இது சதுரங்கம் ஆகவும் பரிணமித்து உள்ளது.
“ | மூன்று புலிகளும் இருபத்தியொரு ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது. அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம். அரசன், மதகுரு, குதிரை வீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள். ‘ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல’ என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. | ” |
- பேராசிரியர் தொ. பரமசிவன்[19]
வல்யானை அல்லது வல்விலங்கு என்பது சங்க இலக்கியங்களில் போர் யானைகளைக் குறிக்கும் சொல்லாகும்[20].வல்லாட்டம் பழங்காலத்தில் வல்யானைப் போர் என்று யானைப் போராக மலைவாழ் பழங்குடியினரிடையே தோன்றியதென்பதால், பாதுகாப்பான கட்டங்கள் "மலை" என்று குறிப்பிடப்படுவதோடு "வெட்டு" போன்ற சொற்களையும் கொண்டுள்ளது. யானையடி என்ற சொல் யானையின் நேரான நகர்வினைக் குறிக்கும். யானைகுப்பு என்ற விளையாட்டைக் குறிக்கும் சொல் யானை இளவரசர் என்று பொருள் தருகிறது. பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் "மலைகள்" என அழைக்கப்படுகின்றன. இவற்றால் வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.
“ | குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. |
” |
— (குறள் எண் 758) |
எனும் குறளுக்குத் தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பது போல் மிகவும் பாதுகாப்பானது எனப் பொருள். இந்தக் குறளில் யானைப் போர் மற்றும் பாதுகாப்பான மலை ஆகிய பலகை விளையாட்டுத் குறியீடுகளைக் காணலாம். இந்த மலைக் கட்டங்களே சதுரங்கத்தின் கருப்புக் கட்டங்களாகப் பின்னர் மாற்றமடைந்துள்ளன.
களிறு ஓட்டம் என்ற போர் விளையாட்டு பற்றி மதுரைக் காஞ்சியில் குறிப்புகள் காணப்படுகின்றன[21]. குன்றேறிய யானை போர் கண்ட மலைவாழ் மக்களின் பண்பாடு, வளர்ச்சி அடைந்து ஒரு போர் விளையாட்டாக மாற்றமடைந்ததை இது குறிப்பிடுகிறது. யானை போர் களிறு ஓட்டமாக காலத்தால் மாறுதல்களை பெற்றுள்ளதை அறியமுடிகிறது. களிறு ஓட்டம் நடைபெறும் இடங்களில் மக்கள் கற்களை மலைபோல் குவித்து அதன்மேல் அமர்ந்து போட்டிகளை கண்டதாக குறிப்பிடும் மதுரைக் காஞ்சி[22], "யானை போர் காணுதல்" என்று வள்ளுவர் குறிப்பிடும் நிகழ்வு பண்பாட்டின் அடுத்த நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ளதை உணர்த்துகிறது.
வல்லாட்டமானது யானைப்போராகவும் யானை விளையாட்டாகவும் தமிழகத்தில் உருவாகி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் யானை விளையாட்டு என்றே பரவியுள்ளது. சீன நாட்டின் சதுரங்கமும் யானை விளையாட்டு என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இவ்விளையாட்டு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம். பெர்சிய நாடுகளுக்கும் யானை விளையாட்டு என்றே பரவலடைந்துள்ளது. குறிப்பாக தமர்லின் சதுரங்கத்தில் (Tamerlane chess) யானை காய் பெர்சிய மொழியில் பில் (Persian: پيل pīl) என்று அழைக்கப்படுகிறது. இது பிலு, பல்ல, பல்லவ, பில்லுவம், பிலிறு, முதலிய யானையை குறிக்கும் தமிழ் சொற்களில் இருந்து மருவிய சொல்லாகும். பிற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பெர்சிய நாட்டிற்கு வல்லாட்டம் பரவலடைந்துள்ளது.
வல்லுநாய் பற்றித் தொல்காப்பியம் வல்லுப்பலகையுடன் சேர்த்தே கூறுகிறது[23].வல்லுநாய் விளையாடிய இடம் பள்ளமானதாகப் புறநானூறும்[24] எனக் கூறுவதால் தொடக்கக் காலத்தில் பகடை உருட்டியும் இவ்விளையாட்டு விளையாடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இதன் ஒரு வகை சூதாட்டமாகவும் மாற்றமடைந்துள்ளது.
“ | ஆடவர் மற்போர் புரிதலையும் கோழிப் போர், யானைப் போர் காண்டலையும், வேட்டையாடுதலையும் தமக்குரியனவாகக் கொண்டுள்ளனர். ஆடவரில் முதுமையுற்றோர் ஓரிடத்தில் அமர்ந்து வல்லாட்டம் (சூதாட்டம்) ஆடிப் பொழுதுபோக்கியுள்ளனர். சூதாடுவதற்கெனத் தனி அகங்கள் இருந்துள்ளன (புறநானூறு-52). வல்லாட்டத்திற்குரிய பலகை, காய் முதலியனபற்றித் தொல்காப்பியத்தில் கூறப்படுவதனால் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் வல்லாட்டம் பொழுதுபோக்காக அமைந்துள்ளது என்று அறியலாம். | ” |
— (தமிழர் பொழுதுபோக்கு – சி.இலக்குவனார்) |
முருகன் விளையாடிய விளையாட்டு
தொகுபோர்க்கடவுள் முருகனை வல்லாட்டத்தில் வல்லவராகப் பரிபாடல் குறிப்பிடுகிறது.
“ | வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம் வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச் சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து போர் ததும்பும் அரவம் போல கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம் ... செரு வேற் தானைச் செல்வ! |
” |
— (பரிபாடல்-18) |
இதன் பொருள், வில்லிலிருந்து அம்பு பாய்வது போல மலர்கள் கொட்டும். வல்லு விளையாட்டில் வல்லவனே! வட்டு உருட்டுவதிலும் வல்லவனே! தாய விளையாட்டிலும் வல்லவனே கேள்! குன்றத்தில் உள்ள கருவி போரில் முழங்குவது போல முழங்கும். மழை மேகங்கள் இடியாக முழங்கும். அருவி கொட்ட அதன் நீர் முத்துக்களால் வரை அணி பெற்றுத் திகழும்...போரிடும் வேல்-படை கொண்ட முருகனே!
வல்லாட்டம் விளையாடிய முருகனின் கோவில், இன்றைய வல்லக்கோட்டை முருகன் கோவில் ஆகும்.
சிந்துச் சமவெளியுடன் தொடர்பு
தொகுசிந்துச் சமவெளி அகழாய்வில் கிடைத்த சதுரங்கக் காய்களும் தமிழகத்தில் கிடைத்துள்ள வல்லாட்டக் காய்களும் ஒத்த அமைப்பினையும் அளவினையும் கொண்டுள்ளன.
சொற்பிறப்பியல்
தொகுவல் என்ற தமிழ்ச் சொல்லுக்குச் செல், நட, நகர்த்து என்று பொருள் [25]. வல்லா என்றால் நடக்க இயலாத என்ற பொருளாகும்[26]. தொடக்கக்காலங்களில் இவ்விளையாட்டு வல் என்ற சொல்லிலிருந்து வல்லு என அழைக்கப்பட்டது.இதற்கு நடப்பவர்கள் அல்லது போர் வீரர்கள் விளையாட்டு என்று பொருளாகும். இதிலிருந்துதான் காவல் போன்ற சொற்கள் பிறந்து பின்னர் காவல்ரி(குதிரைப்படை) என்று ஆங்கிலத்தில் காலாட்படையைக் குறிக்கும் சொல் பிறந்தது. வல்லு என்ற சொல்லுடன் விளையாட்டைக் குறிக்கும் ஆட்டம் என்ற சொல் இணைந்து பின்னர் வல்லாட்டம் என்றானது.
வல்லாட்டமும் சதுரங்கமும்
தொகுவல்லாட்டத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பலகை விளையாட்டுகள் ஆகும். இரண்டும் காய்களை நகர்த்தி விளையாடும் ஆட்டங்களாகும். வல் என்றால் நகர்த்து, செல் எனப் பொருள்கள் உண்டு. சதுரங்கக் காய்கள் யானை, குதிரை என விலங்குகளுடன் ஒப்பிடப்படுவது போலத் தமிழர்களின் போர்ப்படையில் வேட்டை நாய்கள் இருந்தபடியால் வல்லாட்டக் காய்கள் வல்லநாய் என்று நாயின் பெயரில் அழைக்கப்பட்டன. சதுரங்க விளையாட்டு காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என ஒரு போர் முன்னெடுப்பு கொண்டுள்ளது. அது போலவே வல்லாட்டமும் போரிடுவதைப் போல விளையாடப்படுகிறது என்பதை வல்லுப்போர் என்று இது அழைக்கப்பட்டதாலும் போர்க் கடவுளான முருகன் வல்லாட்டத்தில் வல்லவன் எனப் பரிபாடல் 18 குறிப்பிடுவதாலும் அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டின் தற்போதைய மேற்கத்திய முறையிலான வரலாற்றுத் தடயங்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே தமிழக மன்னர்களிடையே இருந்துள்ளதை நாயக்க மன்னர்கள் பயன்படுத்திய சதுரங்கப் பலகை மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டு இலங்கையை ஆண்ட கடைசி மன்னரான விக்ரமராசசிங்கன் ஆங்கிலேயர்களால் கி.பி.1815ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டுத் தமிழகம் கொண்டு வரப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பயன்படுத்திய சதுரங்கப் பலகையும் அவருடனே தமிழகம் கொண்டு வரப்பட்டது. இப்பலகை இன்று வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. பொதுவாகக் கருப்பு வெள்ளை வண்ணங்களிலான சதுரங்கப் பலகையாக இது இல்லாமல் கருப்புச் சிகப்புக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இது தமிழகத்தில் சதுரங்க விளையாட்டின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.
இராணியும் படைத்தலைவரும்
தொகுவல்லாட்ட விளையாட்டில் தொடக்கக் காலத்தில் இராணி என்ற காயே கிடையாது. ஏறக்குறைய 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு படைத்தலைவரின் காய் மேற்கத்திய நாடுகளின் சதுரங்க விளையாட்டு ஒழுங்குபடுத்தலில் இராணிக் காயாக மாற்றி விளையாடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ வல்லுப் போர் வல்லாய்!(பரிபாடல் 18)
- ↑ https://timesofindia.indiatimes.com/city/chennai/keeladi-excavations-prove-that-ancient-tamil-people-played-chess-like-game-stalin-says/articleshow/71349357.cms (புறம் 52)
- ↑ [1]
- ↑ வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன(கலிக்கொகை 94)
- ↑ கல்லாக் குறள! (கலிக்கொகை 94)
- ↑ நரை மூதாளர் நாய் இட குழிந்த வல்லின் நல் அகம் (புறம் 52)
- ↑ "அரங்கின்றி வட்டாடியற்றே" (குறள், 401)
- ↑ வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டாடும் (நற்றிணை, 3:3-4)
- ↑ பவழ இழிகை பத்தி கட்டத்து (பெருங்கதை மகத 14, 56)
- ↑ [2]
- ↑ அல்கல் 5 பெருங் கதவு பொருத யானை மருப்பின்இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, (அகம் - 26)
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (15 செப்டம்பர் 2018). "வேழத்துக்கு ஒரு திருவிழா". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஆனைக்குப்பு ஆடுவோரைபோல! அநாதரித்திருந்தான்" (ஈடு - திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7ஆம் பதிகத்தில் 9ஆம் பாட்டிற்கான விளக்கம்)
- ↑ சூடாமணி நிகண்டு12-பல்பொருள் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி 64
- ↑ தொல் - புறத்திணையியல் 17
- ↑ எண் பேர் ஆயமும், ... ‘மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க! - சிலப்பதிகாரம் கால்கோள் காதை
- ↑ https://www.outlookindia.com/sports/chess-olympiad-and-indian-chess-engagement-by-indian-chess-grandmaster-viswanathan-anand-news-213029
- ↑ https://https பரணிடப்பட்டது 2020-06-25 at the வந்தவழி இயந்திரம்://temple.dinamalar.com/New.php?id=331/
- ↑ பண்பாட்டு அசைவுகள் - பக்கம் 76
- ↑ "வல் யானை சுரம் கடி கொள்ளும்"(அகம் - 247) "வல் யானைக் கடுந்தேர்ச் சோழர்" (அகம் - 385) "போர் வல் யானை சேரலாத" (பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து 15:23) "போர் வல் யானை" (பதிற்றுப்பத்து மூன்றாம் பத்து 23:17)
- ↑ "சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர் கடுங்களிறு ஓட்டலின்" - (மதுரைக்காஞ்சி வரி : 596-597)
- ↑ இட்ட நெடுங்கரைக் காழகம் நிலம்பரல் உறுப்ப' (மதுரைக் காஞ்சி வரி: 598-599)
- ↑ "வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. நாயும் பலகையும் வரூஉம் காலை" (தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 8 புள்ளி மயங்கியல்)
- ↑ நாய் இட குழிந்த வல்லின் நல் அகம் (புறம் 52)
- ↑ 'வல்' என் கிளவி தொழிற்பெயர் இயற்றே, நாயும் பலகையும் (தொல்காப்பியம் 3-374)
- ↑ வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் (அகம் 53)