தொழில்சார் நெறிமுறை
தொழில்சார் நெறிமுறை (Professional ethics) என்பது, தொழில்சார் வல்லுனர்கள் கொண்டுள்ள சிறப்பு அறிவு காரணமாக எழுகின்ற ஒழுக்கம் சார்ந்த விடயங்கள், பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்கும்போது அந்த அறிவைப் பயன்படுத்துவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்றவை தொடர்பானது.
தொழில் வல்லுனர்கள், அவர்கள் பெற்றுள்ள சிறப்பு அறிவு காரணமாக ஒரு பொது மகனுக்கு இருப்பதைவிடவும் மேலதிகமான சில நெறிமுறைகள் சார்ந்த கடமைகளைக் கொண்டுள்ளார்கள். ஏனெனில், தொழில்சார் வல்லுனர்கள் அவர்கள் துறைசார்ந்த விடயங்களில் தாம் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளவர்கள். பொதுமக்கள் அவ்வாறான பயிற்சியைப் பெற்றிராததால் அவர்களால் அவ்வாறான முடிவை எடுக்க முடியாது. எடுத்துக்காட்டாக உரிய பயிற்சி பெற்றிராத ஒருவர் விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு உதவாமல் பார்த்துக்கொண்டிருந்தார் என்று அவர்மீது குற்றம் சுமத்த முடியாது. ஆனால் இதையே முழுப் பயிற்சிபெற்ற மருத்துவர் ஒருவர் செய்தால் அவர் தனது கடமையில் இருந்து தவறியதாகக் கருதப்படும்.
இத்தகைய மேலதிகமான அறிவு தொழில்சார் வல்லுனர்களுக்கு அதிகாரத்தையும், பலத்தையும் கூடக் கொடுக்கிறது. தொழில்சார் வல்லுனர்களால் வழங்கப்படும் சேவைகள் தமக்கு நன்மை பயக்கும் என்னும் எண்ணத்தினாலேயே வாடிக்கையாளர்கள் வல்லுனர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனாலும், தமக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வல்லுனர்கள், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதும் உண்டு.