தொ. ரா. பத்மநாபய்யர்

தொ. ரா. பத்மநாபய்யர் (ஏப்ரல் 4, 1899 - 1963) என்பவர் தமிழ், இந்தி, சௌராட்டிரம், சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் புலமை பெற்ற தமிழறிஞர். இவர் சௌராஷ்டிரா மொழியைத் தாய் மொழியாகப் பெற்றவர் ஆவார். சௌராட்டிர மொழி பகவத் கீதையை முழுவதும் பாராயணம் செய்வதற்கேற்ற வகையில் மொழி பெயர்த்திருக்கிறார். குழந்தைகள் விரும்பும்படி, சௌராட்டிர மொழியில் எளிய நடையில் கீதையின் அருமையை விளக்கும், "கீ3தா கீ3துன்" என்னும் கவிதைகளை இயற்றிருக்கிறார்.

பிறப்பும் இளமையும்

தொகு

பத்மநாப ஐயர் மதுரையில் சௌராட்டிரர் சமூகத்தில் 04-4-1899 அன்று இராமசாமி ஐயருக்கும், சேசம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஆரம்பப் பள்ளி பயிலும் பருவத்திலேயே அதிக அறிவுடன் திகழ்ந்தார். உயர்நிலை வகுப்பில் தமிழை விரும்பிப் பயின்றார். மதுரையில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களில் கலந்து கொண்ட இளைஞர்களுள் இவரும் ஒருவர். மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 1931 ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ராஜாஜியுடன் இவரும் வேதாரண்யம் சென்றார்.

படைப்புகள்

தொகு

இவர் பகவத் கீதையின் எழுநூறு சுலோகங்களையும் எழுநூறு வெண்பாக்களில் தமிழில் பாடியுள்ளார். திருவள்ளுவர் எனும் நாடக நூலை எழுதியுள்ளார்.

  • வேந்தன் துறவு (செய்யுள்)
  • தேசிய கீதங்கள் (செய்யுள்)
  • வருணன் திருப்பள்ளி எழுச்சி (செய்யுள்)
  • பாரத நாட்டின் பண்டைப் பெருமை
  • தமிழின் பெருமை
  • ஸ்ரீமத் பகவத் கீதா வினா-விடை
  • பகவத் கீதை வெண்பா
  • வருணன் திருப்பள்ளியெழுச்சி
  • திருவள்ளுவர் நாடகம்

இவர் "வெண்பாப்புலி" என்று புலவர்களால் பாராட்டப்பட்டார்.

மொழிபெயர்ப்பு

தொகு

ஆதிசங்கரர் அருளிய, ஆத்ம போதம் எனும் வடமொழி நூலை இவர், ஆத்ம போதத் தாலாட்டு எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சப்தரிஷி இராமாயணம் எனும் வடமொழி நூலைத் தமிழில் பெயர்த்துள்ளார். பகவத் கீதையைத் தமிழிலும், சௌராஷ்டிர மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

சிறப்புகள்

தொகு

இவர் கீதையில் அஷ்டாவதானம் செய்து, கீதா அஷ்டாவதானி எனும் புகழ் பெற்றார். பகவத் கீதையை விளக்கம் செய்ய மதுரையில் 1961 இல், கீதாபவனம் எனும் அமைப்பை உருவாக்கினார். வெண்பா பாடுவதில் திறமைப் பெற்றதால், வெண்பாப் புலி என்று அழைக்கப்பட்டார்.

மறைவு

தொகு

இவர் 1963 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

தொகு
  • பெரியபெருமாள், "தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்" மதிநிலையம் சென்னை 2001.
  • கே. ஆர். சேதுராமன், "தமிழ் நாட்டில் செளராஷ்டிரர் முழு வரலாறு" சீராக்கப்பட்ட 3வது பதிப்பு (2008)
  • கே. ஆர். சேதுராமன், " சௌராட்டிரர் வரலாறு" மதுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொ._ரா._பத்மநாபய்யர்&oldid=3034505" இலிருந்து மீள்விக்கப்பட்டது