சௌராட்டிரர்

தென்னிந்திய இன-மொழி இந்து சமூகம்

சௌராட்டிரர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியை பூர்விகமாகக் கொண்டவர்கள். தற்போதைய குசராத்து மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், அம்ரேலி மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், போடாட் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். தில்லி சுல்தானியர்களின் அச்சுறுத்தல் காரணமாக இம்மக்கள் பொ.ஊ. 1025 முதல் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியை விட்டு வெளியேறி, தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா என பல மாநிலங்களில் தங்கி புலம்பெயர்ந்து, இறுதியாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர்.[2][3]

சௌராஷ்டிரா மக்கள்
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ 2 மில்லியன்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
மொழி(கள்)
சௌராஷ்டிரம் (தாய் மொழி), தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச-கௌட பிராமணர்கள், கிர்நர பிராமணர்கள், கொங்கணஸ்த் பிராமணர்கள், தேசஸ்த் பிராமணர்கள், கொங்கணி மக்கள்
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பகுதிகள்

புலப்பெயர்வுகள்

தொகு

பொ.ஊ. 1024-1025-இல் கஜினி முகமது சௌராட்டிர தேசத்தினையும், சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயிலையும் சூறையாடிய பின், அங்கு வாழ்ந்த சௌராட்டிரர்களின் பெரும் பகுதியினர், தேவபூமி துவாரகை மாவட்டத்தின் தலைமையகமான காம்பாலியம் நகரத்தில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்த பின், தற்போதைய மகாராட்டிரத்தில் உள்ள தேவகிரியில் குடியேறி 300 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின்னர் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் கபூர் தேவகிரியை பொ.ஊ. 1307-இல் கைப்பற்றியபின்பு, விஜயநகரப் பேரரசில் பொ.ஊ. 1312-இல் குடியேறினர். விஜயநகரப் பேரரசு, பாமினி சுல்தான்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர் சௌராட்டிர சமூக மக்கள் 1575க்குப் பின்னர் தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்ட தமிழ்நாட்டின், மதுரை, கும்பகோணம், சேலம், தஞ்சாவூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் குடியேறினர்.[4]

சௌராஷ்ட்ர விஜயாப்தம்

தொகு

சௌராட்டிரர்கள் சௌராட்டிர தேசத்திலிருந்து வெளியேறி, விசயநகரப் பேரரசில் குடியேறிய ஆண்டான பொ.ஊ. 1312ஆம் ஆண்டு முதல் சௌராஷ்ட்டிர சௌராஷ்ட்ர விஜயாப்தம் துவங்குகிறது.

தமிழ் நாட்காட்டியின்படி சித்திரை மாதம் முதலாம் நாள் சௌராஷ்ட்டிரர்களின் புத்தாண்டு துவங்குகிறது. 14 ஏப்ரல் 1312 முதல் 13 மார்ச் 2019 முடிய உள்ள காலம் வரை சௌராஷ்ட்டிர விஜயாப்தம் 707 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்தம் 2 மில்லியன் சௌராட்டிரர்கள் வாழ்கிறார்கள். இந்திய நடுவண் அரசு சௌராட்டிர சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்துள்ளது.[5] தமிழ்நாடு அரசு, சௌராட்டிர சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்துள்ளது.[6]

வாழ்விடங்கள்

தொகு

சௌராட்டிர மொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம், ஆரணி, ஆம்பூர், வாலாஜாபேட்டை, புவனகிரி, சிதம்பரம், சேலம், அம்மாபேட்டை நாமக்கல், இராசிபுரம், பரமத்தி, தஞ்சை, திருபுவனம், தாராசுரம், துவரங்குறிச்சி, திருவாரூர், கும்பகோணம், திருவையாறு, அம்மையப்பன், சேலம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, திருச்சி, உறையூர், திருவெப்பூர் (புதுக்கோட்டை), இலுப்பூர், பரம்பூர், அறந்தாங்கி, திண்டுக்கல், பெரியகுளம், நிலக்கோட்டை, மதுரை, பரமக்குடி, எமனேஸ்வரம், இராமநாதபுரம், பாளையங்கோட்டை, கிளாக்குளம், வெள்ளாங்குழி, புதுக்குடி, வீரவநல்லூர், கோட்டாறு (நாகர்கோவில்), மற்றும் கன்னியாகுமரி.

பெயர்க் காரணம்

தொகு

சௌ எனும் சொல் இந்தி மொழியில் (सौ) = நூறு எனவும், ராஷ்டிரம் எனும் சொல்லிற்கு பரந்த நிலப்பகுதிகள் அல்லது நாடு (தேசம்) என்றும் பொருள்படும். நூறு பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இவர்கள் என இந்தி மொழியில் செளராஷ்டிரர் என வழங்கலாயிற்று. மேலும் ’செளரம்’ எனும் சொல் சமசுகிருதம் மொழியில் சூரியனை குறிக்கும்; செளராஷ்டிர மக்கள் சூரியனை வணங்குவோர் என்றும் பொருள்படும். ஸ்ரீகிருஷ்ணனும் சூரியனை வழிபடும் மரபினர் என்பது இங்கு நினைவு குறிப்பிடத்தக்கது.

கோத்திரமும் குடும்பப் பெயர்களும்

தொகு

சௌராட்டிரர்களின் சமுதாயம், பண்டைய வேதகால 64 ரிசிகளின் பெயர்களில் கோத்திரங்களாகப் பிரிந்து உள்ளனர். ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இவர்கள் யசூர் வேதம், ஆபஸ்தம்ப சூத்திரத்தின்படி அனைத்துச் சடங்குகள் இச்சமூகப் புரோகிதர்கள் செய்கின்றனர். ஒரு கோத்திரத்தில் பல குடும்பப் பெயர்கள் கொண்டுள்ளது. பெரும்பாலான குடும்பப் பெயர்கள், காரணப் பெயர்களாலும் பட்டப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

மொழி

தொகு

இவர்கள் பேசும் மொழி, சமஸ்கிருதத்தின் பேச்சு மொழியான பிராகிருதம் என்ற குடும்ப மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழியான ’சௌரஸேனி’ மொழியாகும். இந்த ‘சௌரஸெனி’ மொழியைத் தான் சௌராட்டிரர்கள் தேசத்தில் இருந்தபோது பேசினர். இந்த மொழி குறித்து 1861 மற்றும் 1907 ஆகிய ஆண்டுகளில் ராண்டேல் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியவர்கள் ஆய்வு செய்து, தமிழ்நாட்டு சௌராட்டிரர்கள் பேசும் மொழி ‘சௌரஸேனி” என்று உறுதிப் படுத்தியுள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் புழக்கத்தில் இருந்த பிராகிருத மொழியிலிருந்து வளர்ந்தவைகள்தான், ”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’, மற்றும் ’மஹராஷ்ட்ரீ’ மொழிகள். ’சௌரஸேனி’ மொழியிலிருந்து வளர்ந்தவைகள் தான் இன்றைய குஜராத்தி மற்றும் இராஜஸ்தானி மொழிகள்” என்று கலைக்களஞ்சியம் (பகுதி 7. பக்கம் 301) கூறுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் சௌராட்டிரர்கள் பேசும் மொழியை சௌராஷ்ட்ரம் என்று அழைக்கிறது. இவர்கள் பயன்படுத்தும் சௌராஷ்டிர மொழி எழுத்து வடிவத்தை மதுரை போராசிரியர் தொ. மு. இராமராய் (1852-1913) என்ற சௌராட்டிர மொழி அறிஞர், வட மொழி பேராசிரியரான சதுர்வேதி இலக்குமணாச்சாரியர் என்பவரின் உதவியுடன், சௌராட்டிர மொழி எழுத்துக்களை சீர்திருத்தி, புதிய வடிவில் சௌராஷ்டிரா மொழியில் பல பாடநூல்கள் அச்சிட்டு வெளிட்டுள்ளார். இம்மொழிக்கான இலக்கணத்தை மதுரை, தொ. மு. இராமராய் மற்றும் சேலம், புட்டா. ந. அழகரய்யர் ஆகியவர்கள் செம்மைப்படுத்தி புதிய இலக்கண நூல்களாக அச்சிட்டு வெளியிட்டனர்.

புகழ் பெற்றவர்கள்

தொகு
 
கே. எல். துளசிராம்

ஆரியங்காவு கோயில்

தொகு

கேரளாவிலுள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கோயிலில் மார்கழி மாதத் திருவிழாவின் போது சௌராட்டிர சமூகத்தினருக்கு தனி மரியாதை அளிக்கப்படுகிறது. அதாவது இங்குள்ள தர்மசாஸ்தாவிற்கு சௌராட்டிரப் பெண்ணை திருமணம் முடிக்கும் நிகழ்வாக ஒரு விழா உள்ளது. இதன்படி "ஆரியங்காவு தேவஸ்தான சௌராட்டிர மகாஜன சங்கத்தினர்" இங்கு பெண் வீட்டார் என்கிற முறையில் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களோடு வந்து ஓரிடத்தில் தங்கி திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். பிள்ளை வீட்டார் செய்ய வேண்டிய மரியாதைகளை மறக்காமல், முதல் நாள் பாண்டிய அரசன் பணமுடிப்பு அளிக்கும் சடங்கையும் தேவஸ்தானத்தார் நிறைவேற்றி வைக்கின்றனர். அன்று சௌராட்டிரர்கள் குடும்பத்தோடு மணப்பெண்ணைத் திருமணத்திற்கு அழைத்து வரும் பாவனையில் அருகிலுள்ள மாம்பழத் துறைக்குச் சென்று அங்குள்ள பகவதியையும் வணங்கி வருகின்றனர்." [7]

தொழில் மற்றும் வணிகம்

தொகு

1975-க்கு முன்னர் பெரும்பாலான சௌராட்டிர மக்கள் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, சரிகை வேட்டி, கோடம்பாக்கம் சேலைகள் மற்றும் சுங்குடி சேலை நெய்பவர்களாக இருந்தனர். மேலும் பருத்தி நூல், சாயப் பவுடர் விற்பனையாளர்களாகவும், சாயப்பட்டறைகளையும் நடத்தி வந்தனர். [8]கைத்தறி நெசவு வளர்ச்சி குன்றியதால், தற்போது இம்மக்கள் மின்னியல் மற்றும் மின்னனுவியல் கருவிகள் விற்பனை மற்றும் கணினி தொழில்நுட்பத் தொழிலில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இம்மக்களில் சேலம் நகரத்தின் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வாழ்பவர்கள் வெள்ளிக் கொலுசு போன்ற நகை உற்பத்தியாளர்களாக உள்ளனர்.

ஆய்வு நூல்கள்

தொகு

சௌராட்டிரர்களைப் பற்றி எ.சே. சாண்டர்சு (A.J. Saunders) என்பார் 1927-இல் ஆய்வு நூல் எழுதியுள்ளார்[9]. மேலும் இம்மக்களின் மொழி, கலாசாரம், வரலாறு மற்றும் இலக்கியங்கள் குறித்து பல இந்திய அறிஞர்களும், மேலை நாட்டு அறிஞர்களும் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:

  • தர்ஸ்டன் எட்கர் (1909), தென்னிந்திய சமூகங்களும், பழங்குடியினரும், தொகுதி 1, பக்கம் 160-167-இல் சௌராஷ்ட்ர சமூகத்தவர்கள் பற்றி எழுதியுள்ளார்.
  • எச்.என். ராண்டல் (1949), மதுரை சௌராட்டிரர்கள் குறித்தான ஆய்வு நூல்
  • வி. சுந்தரராமய்யர் (1964), சௌராஷ்ட்ர பிராமணர் சரித்திரம்
  • ஐ.ஆர். தவே, (1976),தென்னிந்திய சௌராட்டிரர்கள்: மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் குறித்தான ஆய்வு நூல, ராஜ்கோட்,சௌராஷ்ரா பல்கலைக்கழகம், XXII+312pp
  • எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் (1966), சென்னை மாநில சௌராஷ்டிர சமூக ஆய்வுக் கட்டுரை, Madras: The Institute of Traditional Culture.
  • Uchida Noriko, ஜப்பான், சௌராட்டிரகளின் ”வாய் மொழி இலக்கியங்கள்” குறித்தான ஆய்வு நூல்,1979.
  • உசித நொரிகொ, ஜப்பான், 1990, திருப்பதி வாழ் சௌராட்டிரர்களின் மொழி ஆய்வு நூல்,1990.
  • உசித நொரிகொ, ஜப்பான், 1990, சௌராட்டிரம்-ஆங்கில மொழி அகராதி நூல்,1990.
  • முனைவர் வீ. ரேணுகாதேவி, An Indo - Aryan Language in Madurai (பிரியா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி)[10]

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்

தொகு

பாஷா சம்மான் விருது பெற்றவர்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Vandhana, M. (2014-04-14). "Madurai's Sourashtrians are a disappointed lot" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/Madurai/madurais-sourashtrians-are-a-disappointed-lot/article5910444.ece. 
  2. The Hindu, 21 de maig de 2016
  3. J.S. Venkatavarma, Sourashtra Charitra Sangraham (Madura, 1915)
  4. "The Sourashtra Community in Madurai, South India", Albert James Saunders, The American Journal of Sociology, Vol. 32, No. 5 (1927) Pàgs. 787-799, University of Chicago Press.
  5. வரிசை எண் 136 Sourashtra (Patnulkarar) 12011/68/93-BCC(C ) dt 10.09.93
  6. வரிசை எண் 115 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
  7. பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் நூலின் பக்கம்-95
  8. Madurai’s Sourashtrians are a disappointed lot
  9. "The Saurashtra Community in Madura, South India", Albert James Saunders, The American Journal of Sociology, Vol. 32, No. 5 (Mar. 1927) PP. 787-799, published by: The University of Chicago Press.
  10. "An Indo - Aryan Language in Madurai புத்தக மதிப்புரை". Archived from the original on 2013-07-02. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
  11. "Bhasha Samman Awardees" (PDF). Archived from the original (PDF) on 2017-05-17. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
  12. "2015 BHASHA SAMMAN AWARDEES". Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.

உசாத்துணை

தொகு
  1. தென்னிந்திய சௌராஷ்டிரர்கள் 1949, நூலாசிரியர், எச்.என். இராண்டேல்
  2. சௌராஷ்ட்ர பிரமணர்கள், நூலாசிரியர், கே.ஏ. அண்ணாச்சாமி சாத்திரியார், 1914
  3. "The Saurashtra Community in Madura, South India", Albert James Saunders, The American Journal of Sociology, Vol. 32, No. 5 (Mar. 1927) PP. 787–799, published by: The University of Chicago Press.
  4. An Indo-Aryan Language in Madurai, Author, V. Renugadevi[தொடர்பிழந்த இணைப்பு]
  5. சௌராட்டிரர் முழு வரலாறு 2008, நூலாசிரியர், கே.ஆர். சேதுராமன்
  6. Saurashtra-a-Language-Region-Culture-Community

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராட்டிரர்&oldid=4048628" இலிருந்து மீள்விக்கப்பட்டது